கொழும்பில் புலிகளின் குண்டுகள்: தேடும் பணி தொடங்கியது

Bombபோர்க்காலத்தில் விடுதலைப் புலிகளால் கொண்டு வரப்பட்ட தலா 500 கிலோ எடை கொண்ட இரண்டு குண்டுகளும், பெருமளவு ஆயுதங்களும் இன்னமும் கொழும்பு நகரப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் பாதுகாப்புத் தரப்பினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலி சந்தேகநபர் ஒருவர் வழங்கிய தகவலை அடுத்தே இந்த ஆயுதங்கள் பற்றிய விபரம் தெரியவந்துள்ளது.

இதையடுத்து குண்டுகளையும், ஆயுதங்களையும் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் சிறிலங்கா பொலிஸாரும்,விசேட நடவடிக்கை பிரிவினரும் இறங்கியுள்ளனர்.

போர் நடந்த காலத்தில், கொழும்புக்கு கொண்டுவரப்பட்ட ஆயுதங்கள் பற்றிய விபரங்கள் தமக்குத் தெரியும் என்றும் அதனைத் தானே கடத்தி வந்ததாகவும், விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த பாலசுப்ரமணியம் ராஜேந்தரகுமார் என்பவர் வெலிக்கடைச் சிறை அதிகாரியிடம் எழுத்துமூலம் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, அவர் நேற்று கொழும்பு மேலதிக நீதிவான் முன் நிறுத்தப்பட்டார்.

குண்டுகளை கண்டுபிடிப்பதற்கு வசதியாக அவரை மூன்று நாட்கள் தம்மிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தீவிரவாத புலனாய்வுப் பிரிவின் அதிகாரி பிரசன்ன டி அல்விஸ் நீதிமன்றத்திடம் அனுமதி கோரினார்.

இதற்கமைய குண்டுகள் மறைத்து வைக்கப்பட்டுள்ள இடத்தைக் கண்டறிய மூன்று நாட்கள் தீவிரவாத புலனாய்வுப் பிரிவினரிடம் ராஜேந்திரகுமாரை ஒப்படைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து கொழும்பை அண்டிய பகுதியில் மறைத்து வைக்கப்பட்டுள்ள இந்த பாரிய ஆயுதக்குவியலைக் கண்டுபிடிக்கசிறிலங்கா காவல்துறையினர் தேடுதல் வேட்டையை ஆரம்பித்துள்ளனர்.

இந்த ஆயுதங்களில் தலா 500 கிலோ எடை கொண்ட இரண்டு குண்டுகள், ஏழு ரி-56 வகைத் துப்பாக்கிகள், ஒன்பது தன்னியக்க கைத்துப்பாக்கிகள், மூன்று இலகு இயந்திரத் துப்பாக்கிகள், ரி-56 துப்பாக்கிகளுக்கான 3500 ரவைகள், 10 மில்லியன் ரூபா பெறுமதியான சொக்கலேற் பொதி, 8 மில்லியன் ரூபா பணம் என்பனவே மறைத்து வைக்கப்பட்டுள்ளன என குறித்த சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.

Tags: , ,