மட்டு. புத்தர்சிலை விவகாரம், இந்து ஆலயங்களில் இடம்பெற்ற திருட்டு தொடர்பாக பிரான்ஸ் தூதுவரிடம் முறைப்பாடு- யோகேஸ்வரன் எம்.பி.

puthar
மட்டக்களப்பு நுழைவாயிலில் புத்தர் சிலை நிர்மாணிப்பதற்கு எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்தும், இந்து ஆலயங்கள் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்படும் சம்பவங்கள் தொடர்பிலும் இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் கிரிஸ்ரின் ரொபின்சனுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டு. மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் விளக்கிக் கூறியுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் கிறிஸ்ரின் ரொபின்சனுக்குமிடையில் நேற்று திங்கட்கிழமை சந்திப்பு இடம்பெற்றது. மட்டக்களப்பிலுள்ள பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பின் போது பாராளுமன்ற உறுப்பினர் மக்களின் தேவைகள் குறித்தும், மட்டக்களப்பு மாவட்ட நிலைமைகள் குறித்தும் தூதுவரிடம் எடுத்துரைத்தார்.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பாதுகாப்பு நிலை குறித்தும் மட்டக்களப்பு நுழைவாயிலில் புத்தர் சிலை நிர்மாணிக்க எடுக்கப்படும் முயற்சி தொடர்பிலும் எம்.பி.விளக்கி கூறியுள்ளார்.

அத்தோடு வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் ஏற்படுத்தப்பட்டுள்ள விமானப் படை வீடமைப்புத் விடயம், வவுணதீவு பிரதேசத்தில் 25,000 ஏக்கர் காணி ஊர்காவல் படையினருக்கு விவசாயத்துக்கு வழங்கப்பட்டமை, வாகரை கடற்பகுதியில் வெளி மாவட்டத்தினரின் அட்டை பிடிப்பால் ஏற்படும் தீமைகள் பற்றியும் மக்கள் அன்றாட சிறு சுயதொழில் நடவடிக்கையில் ஏற்படுத்தப்படும் இராணுவ தலையீடுகள் குறித்தும் பாராளுமன்ற உறுப்பினர் தெளிவாக தூதுவரிடம் விளக்கினார்.

அத்தோடு கடந்த சனிக்கிழமை ஆலயங்களில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவம், யுத்தத்தின் பின்பே இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதையும் எம்.பி.சுட்டிக்காட்டினார்.

மேலும் கோறளைப்பற்று பிரதேசத்தையும், கோறளைப்பற்று தெற்கு பிரதேசத்தையும் பிரிக்கும் கிண்ணையடி, முருக்கன்தீவு ஆகிய பகுதிகளை பிரிப்பதுமான ஆற்றுக்கு பாலம் இடுதல் சம்பந்தமாகவும் தூதுவரிடம் பேசப்பட்டது. இவர் இதற்கு தமக்கு ஒரு மகஜரை வழங்கி இதன் பிரதிகளை அரசாங்க அதிபர் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை தலைமைக் காரியாலயத்துக்கு அனுப்புமாறும் அவர் கோரினார்.

அத்தோடு வாழைச்சேனை தேசிய கடதாசி கம்பனிக்கு உதவிகள் வழங்கி இத்தொழிற்சாலையை கட்டி எழுப்ப வேண்டிய அவசியம் பற்றியும் தூதுவரிடம் கோரப்பட்டது.

இலங்கையில் இருந்து எமது செய்தியாளர் வாசு-

Tags: ,