
மனிதாபிமான இராணுவ நடவடிக்கையை முடிவுக்கு கொண்டு வந்த நாள் முதல், கடந்த 04 வருடங்களாக பல வழிகளில் இலங்கையை கட்டுப்படுத்த வெளிநாட்டு சக்திகள் முயற்சித்து வந்ததாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். காலிமுகத்திடலில் நடைபெற்ற போர் வெற்றி தினத்தை கொண்டாடும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இலங்கையில் ஒரு அங்குல நிலத்தைக் கூட எந்த சக்திகளும் கைப்பற்ற இடமளிக்க போவதில்லை. இலங்கை பிளவுப்பட்டு செல்ல எந்த வகையிலும் இடமளிக்க போவதில்லை எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
மூன்று தசாப்த காலமாக ஆயுதம் தாங்கிய பயங்கரவாதிகள், வெளிநாட்டு சக்திகளுக்கு தேவையான வகையில் இலங்கையை ஆட்சி செய்த முயற்சித்தனர். போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர், இந்த சக்திகள் பல தோற்றங்களில் இலங்கையை ஆட்சி செய்ய முயற்சித்து வருகின்றன. வெளிநாட்டு தலையீடு என்பது இலங்கைக்கு புதிய விடயமல்ல. இவர்கள் அரபு புரட்சியை மேற்கொள்கின்றனர். கிறீஸ் பேய்கள் குறித்து பேசுகின்றனர். நீதிமன்றத்திற்கு சுதந்திரம் வேண்டும் எனக் கூறுகின்றனர்.
ஊடக சுதந்திரம், மனித உரிமைகள், ஜனநாயகம் தேவை எனக் கூறுகின்றனர். இவைதான் சர்வதேச சக்திகள் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை இலங்கையை பதிலளிக்குமாறு கூறும் விடயங்களாகும். மனித உரிமைகள், ஜனநாயகத்தை பாதுகாக்குமாறு கூறும் தீய சக்திகளின் உள்நோக்கம் நாட்டை இரண்டாக பிளவுப்படுத்துவதாகும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார். -GTN





