ராவயவின் பார்வையில் வடக்கின் தேர்தல்கள்

wimal-mahinda
வட மாகாணத் தேர்தலை எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் நடத்தவிருப்பதாக ஜனாதிபதி அவர்கள் பல தடவைகள் கூறி வந்துள்ளார். ஜனநாயகத்தை பாதுகாத்தல் தொடர்பில் அது முக்கிய விடயமாகும்.

தற்போது யுத்தம் முடிவிற்கு வந்து மூன்று வருடங்கள் பூர்த்தியாகும் தருணத்தை நெருங்கியுள்ளது. புலிகள் அமைப்பு வடக்கு,கிழக்கு தமிழ் மக்களின் உரிமைகளை பலவந்தமாக அபகரித்துக்கொண்டு இருப்பதால், மீண்டும் அம் மக்களின் உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பதற்காகவே புலிகளுக்கு எதிரான யுத்தத்தை தாம் மேற்கொள்ளுவதாக அப்போது அரசு அதன் யுத்த முன்னெடுப்புகளை நியாயப்படுத்த முன் வைத்த முக்கிய காரணமாக இருந்தது. ஆயினும் இன்றைக்கு நான்கு வருடங்களாக அரசாங்கத்தின் அவ்வாக்குறுதி நிறைவேற்றப்படாமலே இருந்து வருகின்றது.

ஜனாதிபதி அவர்கள் வடமாகாணத் தேர்தலை நடத்த இருப்பதாக தெரிவித்த பின்னணியில், அரசாங்கத்தின் பங்காளிகளான சில சக்திகளும், சில அரச உத்தியோகத்தர்களும் அரசாங்கத்துடன் நட்புறவை பேணிய போதிலும், அரசாங்கத்தை அரசியல் ரீதியாக அழிவுப் பாதைக்கு இழுக்கச் செல்லும் பணியில் மிகத் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் அரசியல் ஆய்வாளர்கள் கும்பலும் வடமாகாணத் தேர்தலுக்கு எதிராக கடும் எதிர்ப்பை கட்டவிழ்த்து விட்டிருப்பதை காணக்கூடியதாக உள்ளது.

ஏற்கனவே இவர்கள் ஏற்படுத்திக்கொண்டுள்ள அரசியல் கணிப்பீடு ஒன்றும் இவர்களுக்கு இருக்கிறது. அதற்கு அமய வட மாகாண சபைக்கான தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பே வெற்றிபெறும். வடக்கை வெற்றிகொள்ளும் அவர்கள் கிழக்கில் முஸ்லிம்களுடன் ஒத்துழைப்புடன் செயற்படுவதன் மூலமோ அல்லது, அவர்களுடன் இணைந்தோ தனியானதொரு பிரிவாக செயற்பட ஆரம்பித்து விடுவார்கள். வெளிநாடுகளுடனான நேரடி கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுவார்கள். இதனால் வடமாகாணத்தை வலுவாக்குவதன் மூலம் நாடு பிளவுபடும். தனி ஈழக் கருத்து வேறு ஒரு வடிவத்தில் வெற்றி பெரும்.

இதனை தடுக்க, 13ஆவது சீர்திருத்தத்தை ஒழித்துக்கட்டிவிட்டு அதற்கு பதிலாக வேறுவிதமானதொரு நிர்வாக அமைப்பை உருவாக்க வேண்டும். அல்லது 13ஆவது சீர்திருத்தம் மூலம் மாகாண சபைகளுக்கு கிடைக்கப்பெற்றுள்ள பொலிஸ், காணி உட்பட்ட முக்கிய விடயங்கள் தொடர்பான முக்கிய அதிகாரங்களை முற்றாக அகற்றிவிட வேண்டும் என்பதே இவர்களின் கோரிக்கையாக உள்ளது.

இக் கருத்துக்கள் ஒரு புறத்தில் மாகாண சபைத் தேர்தலை நடத்தப் போவதாக கூறும் அரசாங்கமே மறுபுறத்தில் தெரிவிக்கும் கருத்துக்களா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. எது எப்படியாயினும் வடமாகாண தேர்தலில் வெற்றி பெறுவதற்கான அதிகபடியான வாய்ப்புகள் தமிழ்தேசியக் கூட்டமைப்பினருக்கே இருக்கின்றது. அவ்வாறானதொரு சூழ்நிலையில் அரசாங்கம் தன்வசம் தக்க வைத்துக் கொண்டிருக்கும் வடக்கின் நிர்வாகம் தன் கையைவிட்டு நழுவிவிடும் என்ற பயம் அரசுக்கு இருக்கின்றது. ஆகையால் அரசின் உள் இருந்தே எழும்பும் ‘வடமாகாண சபை எதிர்ப்புகள்’ காரணமாக அத் தேர்தலை நடத்த முடியாதுள்ளதாக இன்னும் சொற்ப நாட்களில் ஜனாதிபதியே கூறக்கூடும். அப்படிக் கூறினாலும் அதைக் கேட்டு ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஆனால் வடமாகாணத் தேர்தலானது அரசாங்கத்தின் தற்போதைய நிர்வாகத்தைப் பற்றிய ஒரு மீள் பரீட்சையாக அமையலாம். வடபகுதி தமிழர்களது ஜனநாயக உரிமைகளை அரசு உண்மையாக மதிக்கின்றதா? தமிழ் மக்களது உரிமைகளைப் பெற்றுக்கொடுக்க அரசுக்கு இதயசுத்தியான ஆர்வமும் தேவையும் இருக்கின்றதா, அதற்காக தம்மை அர்ப்பணித்துக் கொள்ள அரசு தயாராக உள்ளதா என்பதை பரிசோதித்துப் பார்க்கக்கூடிய ஒரு பரீட்சையாகவே வடமாகாணத் தேர்தல் அமையும்.

மறுபுறத்தில் கடந்த காலங்களில் கடுமையான ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்பட்ட தமிழ் சமூகத்திற்கு தமது அபிமானத்தை மீண்டும் நிலைநிறுத்த கிடைக்கும் ஒரு முக்கிய வாய்ப்பாகவும் இத் தேர்தல் அமையும். இத் தேர்தல் நியாயமான சுதந்திரமான முறையில் நடத்தப்படுமாக இருந்தால் தம்மை ஆட்சி செய்வதற்கான தமது விருப்பத்திற்குரிய பிரதிநிதிகளை தாமே தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்கும். அது அவ்வாறு அமையும் பட்சத்தில் ஒருபோதும் அது சட்டவிரோதமான ஒரு அமைப்பாக அமையாது. முhறாக அது முழுக்க முழுக்க சட்டத்திற்கும் அரசியல் யாப்பிற்கும் அனுகூலமானதொரு நிர்வாகக் கட்டமைப்பாகவே அமையும். அவ் உரிமை அந்த மக்களுக்கும் கிடைக்கப் பெறும் என்பதனை உறுதிப்படுத்தல் வேண்டும். ஆகையால் வடக்கிற்கான தேர்தலை நடத்தவும் அம்மக்களின் வாக்குரிமையை மதிக்கவும் தேவையான அனைத்து நடவடிககைகளையும் எடுப்பது அரசின் தலையாய கடமையாகும்.

அக் கடமையை நிறைவேற்ற அரசு தவறுமாக இருப்பின் அல்லது 13ஆவது சீர்திருத்தத்தில் மாற்றங்களை ஏற்படுத்த முனையுமாக இருப்பின் அதனால் உள் நாட்டிலும், வெளிநாடுகளிலும் ஏற்படக்கூடிய விளைவுகள் நமது நாட்டுக்கு சுபமானதாவோ சாதகமானதாவோ அமையாது என்பதை கூறி வைக்க வேண்டும்.

-GTN சூரியன்

Tags: ,