ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் விசேட உத்தரவின் பேரில், கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி விடுதலை செய்யப்பட்டாலும் அவரது செயற்பாடுகள் குறித்து ரகசிய காவற்துறையினரும், புலனாய்வுப் பிரிவினரும் தொடர்ந்தும் அவதானித்து வருவதாக காவற்துறை தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆயுதம் தாங்கிய போராட்டம் ஒன்றை நடத்த போவதாக அசாத் சாலி சென்னையில் தெரிவித்திருந்தமை தொடர்பாக கடந்த 02 ஆம் திகதி புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ள மூன்று மாத தடுப்பு காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். எனினும் ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் அவர் கடந்த 10 ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டார்.
தான் அவ்வாறு எதனையும் கூறவில்லை என அசாத் சாலி ஜனாதிபதியிடம் சத்திய கடிதம் ஒன்றின் மூலம் அறிவித்திருந்ததை அடுத்தே அவர் விடுதலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும் தான் அவ்வாறு யாரிடமும் கோரிக்கை விடுக்கவில்லை என சாலி தெரிவித்திருந்தார்.
அசாத் சாலி புலனாய்வுப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது, அவருக்கு எந்த அழுத்தங்களும் கொடுக்கப்படவில்லை என புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
-GTN