பிரேமதாசவின் ஆட்சிக் காலத்தில் சார்க் நாடுகளின் உச்சிமாநாட்டை கொழும்பில் நடத்துவதில் பிரேமதாச பல்வேறு சவால்களுக்கு முகம்கொடுக்க நேர்ந்தது.
இந்திய அமைதி காக்கும் படையினரை இலங்கையில் நிலைகொள்ள வைத்தமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதத்தில், பாகிஸ்தானில் இடம்பெற்ற அதற்கு முந்தைய சார்க் நாடுகளின் உச்சி மாநாட்டில் இலங்கை பங்குபற்ற மாட்டாதெனப் பிரேமதாச விடுத்த அச்சுறுத்தலுக்கு ஒரு பாடம் கற்பிக்கும் நோக்கில் இந்தியா செயற்பட்டமையே அதற்கான காரணமாகும்.
அது மட்டுமன்றி பிரேமதாச இந்திய அமைதிப்படையை இலங்கையிலிருந்து வெளியேற்றியமை தொடர்பாக, இந்திய மத்திய அரசு இலங்கை மீது வஞ்சம் பாராட்டி வந்தது. இந்தியா பங்கேற்காமலேயே இலங்கையில் சார்க் மாநாட்டை நடத்துவதற்காக பிரேமதாச தலைமையிலான அரசு பாகிஸ்தான் அரசின் அனுசரணையுடன் “சார்க்’ அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளுடன் தொடர்பு பேணி வந்தமையும் இலங்கை மீதான இந்தியாவின் கோபத்தை அதிகரிக்க வைத்தது.
அதன் காரணமாக “சார்க்’ மாநாட்டை இலங்கையில் நடத்த இயலாது தடுத்து நிறுத்த இந்தியா பலதரப்பட்ட முயற்சிகளை முன்னெடுத்தது. இந்தியாவின் அழுத்தம் காரணமாக “சார்க்’ அமைப்பின் அங்கத்துவ நாடுகள் பல இலங்கையில் இடம்பெறவிருந்த உச்சி மாநாட்டைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்தன.
அந்த வேளையில் எதிர்க்கட்சித் தரப்பில் செயற்பட்ட மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர் அது பிரேமதாச அரசுக்கும் நாட்டுக்கும் ஏற்பட்ட அவமானம் என்ற விதத்தில் பிரசாரப்படுத்தி கேலி செய்து வந்தனர். ஆயினும் ஏதோ வகையில் பிரேமதாச அரசு “சார்க்’ மாநாட்டை கொழும்பில் பெயருக்கு நடத்தி ஒப்பேற்றிக்கொண்டது.
மாநாட்டை இலங்கையில் நடத்தாது தவிர்ப்பதற்கு அழுத்தங்கள்
அன்று “சார்க்’ மாநாட்டை கொழும்பில் சிறப்பாக நடத்தி முடிக்க இயலாது பிரேமதாச சிரமப்பட்டமை போன்று மிக அண்மையில் மஹிந்த ராஜபக்ஷவும் வெட்கித் தலைகுனியத்தக்கதொரு சிரமத்துக்கு முகம் கொடுக்க நேர்ந்தது.
எதிர்வரும் நவம்பர் மாதத்தில் கொழும்பில் பொதுநலவாய நாடுகளின் உச்சிமாநாட்டை நடத்த இயலாது போய் விடுமோ என்றதொரு இக்கட்டு நிலைக்கு அவர் முகம்கொடுக்க நேர்ந்தது. பிரதமநீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணை, நாட்டின் மனித உரிமை மீறல் சம்பவங்கள் போன்ற காரணங்களால் மாநாட்டை வேறொரு நாட்டுக்கு மாற்ற வேண்டுமென கனடா மற்றும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தன.
இது தொடர்பான முடிவு கடந்த மாதம் 26 ஆம் திகதி லண்டனில் கூடிய பொதுநலவாய நாடுகளின் அமைச்சர் மட்டக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட வேண்டியிருந்தது.
அந்தக் குழுவுக்கு பங்களாதேஷ் நாடே தலைமை தாங்கியதால், பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டை எப்படியும் கொழும்பில் நடத்திவிடும் முனைப்பில் மஹிந்த வெளியுறவு அமைச்சர் ஜீ.எல்.பீரிஸை பங்களாதேஷûக்கு அனுப்பி அந்த நாட்டின் ஆதரவைக் கோர முயன்றார்.
இந்தியா உங்களுக்கு ஆதரவு வழங்குமானால் மாநாட்டை இலங்கையில் நடத்துவதில் சிக்கல் நிலை தோன்றாதென பங்களாதேஷ், பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸிடம் தெரிவித்தது. அதையடுத்து ஜீ.எல்.பீரிஸ் இந்தியாவின் உதவியைப் பெறு வதற்கு ஓடிச் சென்றார்.
தனது இலக்கை குறிவைத்துச் செயற்பட்ட இந்தியா
சரி; இந்த விடயத்தில் நாம் உதவ வேண்டுமானால், இலங்கை அரசு வடமாகாணசபைத் தேர்தலை நடத்த நாள் குறிக்க வேண்டும். அத்தோடு சம்பூர் அனல் மின் உற்பத்தி நிலைய திட்டம் போன்ற இந்திய முதலீட்டுத் திட்டங்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும் எனக்கூறி இந்தியா தன் காரியத்தில் கண்ணாய் இருந்தது.
பொதுநலவாய நாடுகளின் அமைச்சர்கள்மட்ட கூட்டத்துக்கு ஐந்து நாள்களுக்கு முன்னர் வட மாகாண சபைத் தேர்தல் செப்டெம்பரில் நிச்சயமாக நடத்தப்படும் என மஹிந்த அறிவித்ததன் இரகசியம் இதுவே.
பொதுநலவாய நாடுகளின் அமைச்சர்கள் மட்டக் கூட்டத்தில் கனடா உட்பட சில நாடுகள், மாநாடு இலங்கையில் நடத்தப்படுவதற்கு எதிர்ப்பு வெளியிட்ட போதிலும், தற்போதைய பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளரும், பிரித்தானியாவுக்கான முன்னாள் இந்தியத் தூதுவருமான கமலேஸ்சர்மா, மாநாடு இலங்கையிலேயே இடம்பெறும் என்பதை உறுதிப்படுத்தினார்.
இந்த அறிவிப்பு வெளிவந்த கையுடனேயே அமைச்சர் பஸில் ராஜபக்ஷ வடமாகாண சபைத் தேர்தலுக்கான சுதந்திரக்கட்சி சார்பான வேட்பாளர் நியமனத்தில் அரசு கவனம் செலுத்துவதாக அறிவித்தார்.
இதுவரை சம்பூர் அனல் மின் நிலையத் திட்டத்துக்கு எதிர்ப்பு வெளியிட்டு வந்த மின்சக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க, அமைச்சர் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டு சம்பூர் அனல் மின் நிலையத் திட்டத்துக்கான ஒப்புதல் வழங்கப்பட்டது.
சம்பூர் அனல் மின் நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்துக்கான விலை நிர்ணயம், அதனை உருவாக்கும் இந்திய நிறுவனத்தினாலேயே மேற்கொள்ளப்படுமென ஒப்பந்தத்தில் சரத்தொன்று சேர்க்கப்பட்டுள்ளதாக “ஜலன்ட்’ பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில், பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை இலங்கையில் எப்படியும் நடத்தி விடுவதென்ற ஓர்மத்தில் இலங்கை அரசு இந்தியாவின் தாளத்துக்கு ஆடத் தயாராகி விட்டதா? என்ற கேள்வியும் எழாமலில்லை.
இலங்கை மீதான சர்வதேச பொறியே பொதுநலவாய மாநாடு
உண்மையில் இடம்பெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாடு இலங்கை மீதான சர்வதேச பொறியொன்றே. ஜனாதிபதி மஹிந்த இன்று அந்தப் பொறியில் அகப்பட்டுக் கொண்டுள்ளார்.
அரசு எதிர்வரும் செப்டெம்பரில் வடமாகாண சபைத் தேர்தலை நியாயமான விதத்தில் நடத்தி முடிக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகவே அடுத்த பொதுநலவாய நாடுகளின் அமைச்சர்கள் மட்ட கூட்டத்தை செப்டெம்பரில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
வடமாகாண சபைத் தேர்தல் தொடர்பாக மஹிந்த வழமை போன்று இந்தியாவுக்கு காதில் பூச்சுற்ற முயன்றால், பில்லியன் கணக்கில் செலவு செய்து இலங்கை அரசு முன்னாயத்தங்களை மேற்கொண்டாலும் கூட பொதுநலவாய நாடுகளின் மாநாடு வேறொரு நாட்டுக்கு மாற்றப்படும் நிலை ஏற்படலாம்.
மற்றொரு புறம் “பொதுநலவாய நாடுகளின் அமைப்பு குறித்தோ, அதனால் இந்த நாட்டுக்குக் கிட்டத்தட்ட நன்மை குறித்தோ எம்மில் பலருக்கு போதிய விளக்கமில்லை. இது தனது உறுப்பு நாடுகளுக்கு பொருளாதார ரீதியாகவோ, அபிவிருத்தி ரீதியாகவோ அன்றேல் வேறு எந்தத் துறைசார் ரீதியாகவோ எந்தவித உதவியையும் வழங்க இயலாத நிதி வளமற்ற, பலமற்ற ஓர் அமைப்பாகும்”
பொதுநலவாய நாடுகளின் அமைப்பு குறித்து பிரபல அரசியல் விமர்சகரும், இலங்கை அரசின் ஆலோசகருமான சீ.ஏ சந்தரபிரேம ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையில் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டிருந்தார்.
மாநாட்டால் நாட்டுக்கு நன்மையேதும் கிட்டாது
அந்த வகையில், நாட்டுக்கு செலவீனத்தை ஏற்படுத்துவதேயன்றி, வேறு எந்தவொரு நன்மையையும் ஈட்டித்தர இயலாத பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை இலங்கையில் நடத்தியே ஆவதென்ற முனைப்பில் செயற்படும் இலங்கை அரசு அதன் மூலம் நாட்டை இந்தியாவுக்குக் காட்டிக் கொடுக்கும் செயற்பாட்டையே நிறைவேற்றி வைக்கிறது எனக் கொள்வது தவறன்று.
அந்த வகையில் கடந்த காலகட்டமொன்றில் பொதுநலவாய நாடுகளின் விளையாட்டு விழாவை இலங்கையில் நடத்த அரசு ஆர்வம் காட்டிய போதிலும், பின்னர் அது வேறு நாட்டுக்கு மாற்றப்பட்டதால் இலங்கை விளையாட்டு விழாவுக்காக பெருந்தொகை நிதியைச் செலவு செய்வதினின்றும் தப்பித்துக் கொள்ள முடிந்தது.
கிறீஸ் அரசு முன்னர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை தனது நாட்டில் நடத்த நேர்ந்ததே அந்த நாடு பொருளாதார ரீதியில் கடும் பின்னடைவைச் சந்திக்கக் காரணமாக அமைந்ததென்பது சில பொருளாதார நிபுணர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டாகும்.
அந்த வகையில் பொருளாதார ரீதியில் இலங்கை சவால்களை எதிர்நோக்கியுள்ள இன்றைய காலகட்டத்தில் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை இலங்கையில் நடத்தியே முடிப்பதென இலங்கை ஒற்றைக்காலில் நிற்பது, கொதிக்கும் எண்ணெய்ச் சட்டியிலிருந்து தப்பித்துக் கொள்ள கீழே அடுப்பில் எரியும் நெருப்புக்குள் பாய முயன்றமைக்கு ஒப்பானதொன்றாகும்.
கடைசியாக ஒன்றை நினைவுபடுத்தியே ஆக வேண்டும். ஜனாதிபதி மஹிந்த, முன்னர் இளம் நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட்டதொரு காலகட்டத்தில், 1970-77 ஆண்டுகள் காலகட்டத்தில் சிறிமாவோ பண்டாரநாயக்காவின் தலைமையிலான கூட்டு முன்னணி அரசு 1976 ஆம் ஆண்டில் கூட்டுச் சேரா நாடுகளின் உச்சி மாநாட்டை இலங்கையில் நடத்த பெருந்தொகை நிதியைச் செலவிட நேர்ந்தது.
நாட்டு மக்கள் வாழ்க்கைச் செலவுப் பிரச்சினையால் சிரமப்படும்போது அரசு உச்சி மாநாட்டை நடத்த பில்லியன் கணக்கில் நிதியைச் செலவு செய்வதாக அந்த வேளையில் கடும் விமர்சனங்கள் வெளிவந்தன.
கூட்டுச் சேரா நாடுகள் அமைப்பின் தலைவி என்ற பெருமிதத்துடன் 1977 ஆம் ஆண்டின் பொதுத் தேர்தலுக்கு முகங் கொடுத்த போதிலும், தமது பிரதமர் பதவியை தக்க வைத்துக்கொள்ள சிறிமாவோவால் இயலாது போய்விட்டமை மட்டுமல்லாது, நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராகக் கூடச் செயற்பட இயலாது போயிற்று.
பொதுத் தேர்தலில் தோல்வியுற்றதன் மூலம் கூட்டுச்சேரா நாடுகளின் அமைப்பின் தலைமைப் பதவியைக் கூட ஜே. ஆருக்கு வழங்க வேண்டிய நிலை சிறிமாவோவுக்கு அன்று ஏற்பட்டது. நாட்டின் அரசியல் வரலாறு கற்பிக்கும் அனுபவ பாடங்கள் இவை.
* பொதுநலவாய மாநாட்டு விடயத்தில் நாம் உதவ வேண்டுமானால், இலங்கை அரசு வடமாகாணசபைத் தேர்தலை நடத்த நாள் குறிக்க வேண்டும்.
* சம்பூர் அனல் மின் உற்பத்தி நிலைய திட்டம் போன்ற முதலீட்டுத் திட்டங்க ளுக்கு ஆதரவு வழங்க வேண்டும். இவை இந்தியாவின் முக்கிய இரு நிபந்தனைகள்.
-Uthayan