ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்ப ஆட்சி அதிகாரத்தின்கீழ் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மேலோங்குகின்றன என அமெரிக்கா முன்வைத்துள்ள குற்றச்சாட்டு முற்றிலும் உண்மையானது எனத் தெரிவித்து அறிக்கையை வரவேற்றுள்ளது பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி.
அநீதியான ஆட்சியை நடத்திக் கொண்டு சர்வதேசத்தின் பலமிக்க நாடுகளைப் பகைத்துக்கொள்வதால் நாடுதான் அபாய நிலைக்குள் தள்ளப்படுகிறது. எனவே, சர்வதேச சமூகத்துடனான முறுகல் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க அதனுடன் சமரசப் பேச்சு நடத்த அரசு தயாரெனில், தாமும் அதற்கான முழுமையான ஒத்துழைப்பையும் வழங்குவோம் என்று ஐ.தே.கவின் சிரேஷ்ட உப தலைவரும், கண்டி மாவட் நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
“மனித உரிமைகள் தொடர்பான நாடுகளின் அறிக்கை 2012′ என்ற அறிக்கை கடந்த வெள்ளிக்கிழமை 19ஆம் திகதி அமெரிக்க இராஜாங்கத் திணைக்களச் செயலாளர் ஜோர் கெரியால் வெளியிடப்பட்டது.
இலங்கையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குடும்ப ஆட்சி அதிகாரம், நிர்வாகத்தில் மேலோங்கிக் காணப்படுகிறது. நீதித்துறைச் சுயாதீனம் முடக்கப்பட்டுள்ளது.
ஊடக அடக்குமுறைகள், பொலிஸாரின் தாக்குதல்கள், சித்திரவதைகள் தொடர்கின்றமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் அந்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளன. இது குறித்து கருத்து வெளியிட்டபோதே நாடா ளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல மேற்கண்ட வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்ப ஆட்சியின்கீழ் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மேலோங்கிக் காணப்படுகின்றன என அமெரிக்கா முன்வைத்துள்ள குற்றச்சாட்டு முற்றிலும் சரியானதும் உண்மையானதுமாகும்.
தினந்தோறும் நாம் தொடர்ச்சியாக முன்வைக்கும் குற்றச்சாட்டுகளைத்தான் அமெரிக்காவும் முன்வைத்துள்ளது. சர்வதேசத்தின் பலமிக்க நாடுகள் எம்மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் அளவுக்கு அநீதியான ஆட்சியை நடத்திக்கொண்டு அவற்றைப் பகைத்துக்கொள்ளும் நடவடிக்கைகளைத்தான் அரசு தொடர்ச்சியாக மேற்கொண்டுவருகிறது.
இந்தியா, அமெரிக்கா மற்றம் ஐரோப்பா உள்ளிட்ட பலமிக்க நாடுகளுடன் அரசு பகைமையை ஏற்படுத்திக்கொண்டுள்ளது. இந்நிலை, நாட்டுக்குத்தான் பேராபத்தை ஏற்படுத்தும் என நாம் தொடர்ச்சியாக அரசை வலியுறுத்திவருகிறோம். ஆனால், அரசோ எமது பேச்சைக் கருத்திற்கொள்ளாது செயற்படுகிறது.
அரசின் நடவடிக்கைகளை அவதானிக்கையில், “சர்வதேச நாடுகளுடன் நட்புறவைப் பேணும தேவையும், நோக்கமும் அதற்கு இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.
சர்வதேச நாடுகளுடன் நட்புறவு என்பது அரசுக்குத் தேவை இல்லையெனினும், அது நாட்டுக்கு அத்தியாவசியத் தேவையாகும். எனவே, இவற்றைக் கருத்திற்கொண்டு சர்வதேச நாடுகளுடனான முறுகல்நிலையை முடிவுக்குக்கொண்டுவர அவற்றுடன் சமரசப் பேச்சுகளில் ஈடுபட அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அரசு இவ்வாறானதோர் நடவடிக்கையில் இறங்கினால், அதற்கு முழு ஒத்துழைப்பையும் வழங்க நாமும் தயாராகவுள்ளோம் என்றார் கிரியெல்ல.
-uthayan