1,000 ரூபாய் இல்லாததால் கர்ப்பிணி பெண் விரட்டியடிப்பு: கழிப்பறையில் நடந்தது பிரசவம்

Tamil-womenசேலம் அரசு மருத்துவமனையில், பிரசவத்துக்காக வந்த கர்ப்பிணி பெண்ணிடம், 1,000 ரூபாய் கேட்டு, ஊழியர்கள் விரட்டியடித்தனர். அந்த பெண்ணுக்கு, பேருந்து நிலைய கழிப்பறையில் குழந்தை பிறந்தது.

சேலம் அரசு மருத்துவமனைக்கு, சிகிச்சைக்காக, நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகின்றனர்.ஆந்திர மாநிலம், விஜயவாடாவைச் சேர்ந்த லட்சுமி, 27, என்ற பெண் பிரசவத்துக்காக, சேலம் அரசு மருத்துவமனைக்கு, நேற்று அதிகாலை, 4:30 மணியளவில் வந்தார். அவருடன், கணவர் சாமுவேல், 33, குழந்தைகள் வெங்கடேஷ், நவீன் வந்தனர்.பெயர் விவரங்களை வாங்கிய ஊழியர்கள், 1,000 ரூபாய் பணம் இருந்தால் தான் சிகிச்சை கிடைக்கும் என, கூறியுள்ளனர். பணம் கொடுக்க வழியில்லாமல் தவித்த அவர், பழைய பேருந்து நிலையம் அருகே வந்து அமர்ந்துள்ளார். தொடர்ந்து, பிரசவ வலி அதிகரித்ததால், தவித்துள்ளார்.அங்கு வந்த பண்ணாரி என்ற பெண், மாநகராட்சி வணிக வளாகத்தில் உள்ள கழிப்பறைக்கு லட்சுமியை அழைத்துச் சென்று, பிரசவம் பார்த்தார். காலை, 11:00 மணிக்கு, லட்சுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதன் பின், 108 ஆம்புலன்ஸ் மூலம், அரசு மருத்துவமனைக்கு லட்சுமி கொண்டு செல்லப்பட்டார்.

இதுகுறித்து, லட்சுமி கூறியதாவது:விஜயவாடாவில் இருந்து பிழைப்புக்காக, எட்டு மாதத்துக்கு முன், சேலம் வந்தோம். பழைய பேருந்து நிலையம் அருகில் தங்கி, கிடைத்த வேலையை செய்தோம். வெங்கடேஷ், நவீன் என, இரு குழந்தைகள் உள்ளனர்.மூன்றாவதாக கர்ப்பம் தரித்த நான், நேற்று அதிகாலை காலை, 4:30 மணிக்கு, சேலம் அரசு மருத்துவமனை பிரசவ வார்டுக்கு சென்றேன். அங்கிருந்தவர்கள், 1,000 ரூபாய் கேட்டனர். பணம் இல்லை என, கூறியதால், எனக்கு சிகிச்சையளிக்காமல் வெளியில் அனுப்பி விட்டனர்.பழைய பேருந்து நிலையத்தில் பண்ணாரி என்ற பெண், எனக்கு பிரசவம் பார்த்தார்.இவ்வாறு, அவர் கூறினார்.

பண்ணாரி கூறுகையில், “லட்சுமியின் தவிப்பை உணர்ந்து, நானே பிரசவம் பார்த்து, குழந்தையை வெளியில் எடுத்தேன். தாயும், குழந்தையும் நன்றாக உள்ளனர்,” என்றார்.

அரசு மருத்துவமனை டீன் வள்ளிநாயகம் கூறுகையில், “”இந்த பிரச்னை தொடர்பாக, கலெக்டர் விளக்கம் கேட்டுள்ளார். பிரசவ வார்டில் பணியில் இருந்த மருத்துவர், செவிலியர்களிடம், நாளை (இன்று) விசாரணை நடத்தப்படும்,” என்றார்.

உதவி கேட்க வந்த இடத்தில் உதவி :

சேலம் மாவட்டம், ஆத்தூர் தேவியாக்குறிச்சியைச் சேர்ந்தவர் பண்ணாரி, 55. மாற்றுத்திறனாளி கணவருக்கு, கலெக்டரிடம் உதவித்தொகை கேட்பதற்காக, சேலம் வந்தார். நாளை (இன்று) நடக்கும் மக்கள் குறைதீர் முகாமில், கலெக்டரிடம் மனு கொடுப்பதற்காக, கோட்டை மாரியம்மன் கோவில் அருகில் தங்கியிருந்தார்.
இந்நிலையில், பிரசவ வலியால் தவித்த லட்சுமிக்கு, பண்ணாரி பிரசவம் பார்த்துள்ளார். யாரும் உதவிக்கு வராதபோது, தனி ஆளாக, கர்ப்பிணி பெண்ணுக்கு உதவிய அவரை, அங்கிருந்த மக்கள் பாராட்டினர்.

-dinamalar

Tags: , ,