வெளிநாட்டில் இருந்து வந்தவரின் மரணத்தில் சந்தேகம்! முறைப்பாட்டையடுத்து பொலிசார் விசாரணை!

dead
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வெளிநாட்டில் இருந்துவந்த ஒருவர் 10 நாட்களில் இறந்தது தொடர்பில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

பட்டிப்பளை பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் சடலத்தினை தோண்டி மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மரணமானவரின் உறவினர்களினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கொக்கட்டிச்சோலை 10ஆம் வட்டாரத்தினை சேர்ந்த 45 வயதான ஆறுமுகம் சத்தியசீலன் என்பவர் கடந்த 2012ஆம் ஆண்டு வெளிநாடு சென்று கடந்த மாதம் நாடு திரும்பியிருந்தார்.

எனினும் அவர் வெளிநாடு சென்றுவந்து 10 நாட்களில் வீட்டில் மரணமடைந்துள்ளார். இந்நிலையில் அவர் மாரடைப்பில் உயிரிழந்ததாக குறித்த நபரின் மனைவியினால் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

எனினும் இந்த மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக மரணமானவரின் சகோதரிகளின் கணவர்மார்களினால் பட்டிப்பளை பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

அவர் மாரடைப்பினால் உயிரிழக்கவில்லை எனவும் அவர் திட்டமிட்ட வகையில் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து குறித்த சடலத்தினை தோண்டியெடுத்து விசாரணைகளை மேற்கொள்ளும் நடவடிக்கைகளை பட்டிப்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் இருந்து எமது செய்தியாளர் வாசு-

Tags: , ,