எமக்கும் நியமனம் வழங்குங்கள் என வவுனியா வைத்தியசாலை சிற்றூழியர்கள் ஆர்ப்பாட்டம்

vavuniya-police
ஒப்பந்த அடிப்படையில் வவுனியா வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற தாம் சிற்றூழியர்களாக பணியாற்றும் போதிலும் தமக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படாது புதியவர்களுக்கு நியமனம் வழங்குவதாக தெரிவித்து வவுனியா வைத்தியசாலை சிற்றூழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியா, மன்னார், முல்லைத்தீவில் உள்ள அரச திணைக்களங்களில் பணியாற்றவென சிற்றூழியர் நியமனம் இன்று (8.6) வவுனியா நகரசபை மண்டபத்தில் 3 மணியளவில் இடம்பெறவிருந்த நிலையில் மதியம் 1 மணிக்கு இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியா வைத்தியசாலையின் முன்னாள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இவர்கள் ஏ 9 வீதி வழியாக வவுனியா நகரசபை மண்டபத்தை வந்தடைந்து வாயிலை மறித்து கோசங்களை எழுப்பியிருந்தனர்.
இதனையடுத்து அவ்விடத்திற்கு வருகை தந்த தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் இணைந்து தனது எதிர்ப்பினையும் காட்டியிருந்தார்.

இதேவேளை, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் எம்மை நம்பி வாழும் எமது குடும்பத்தை காப்பாற்றுங்கள், எங்களுக்கு உடனடி தீர்வை வழங்குங்கள், வுவனியா வைத்தியசாலையில் ஒப்பந்த அடிப்படை ஊழியர்கள் 50 பேருக்கு நியமனம் செய்ய நேர்முகப்பரீட்சை நடத்தி எம்மை ஏமாற்றி வெளியாருக்கு நியமனம் வழங்காதே, 4 வருடங்களாக சிற்றூழியாகாளக கடமைபுரியும் எமக்கு நியமனம் வழங்கு, ஆளுனரே எமது குடும்பங்களை வதைக்காதே என கோசங்களை எழுப்பியதுடன் பதாதைகளையும் தாங்கியிருந்தனர்.

இவ் வேளை அவ்விடத்திற்கு வருகை தந்த வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடியதன் அடிப்படையில் ஆர்ப்பாட்டக்காரர்களில் சிலரை அழைத்து சென்று வர்த்தக கைத்தொழில் அமைச்சர் ரிசாட் பதியுர்தீனுடன் கலந்துரையாடியதன் அடிப்படையில் ஆர்ப்பாட்டத்தை நிறுத்திக்கொண்டனர்.

ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் 2010 முதல் பணியாற்றுபவர்களுக்கு நியமனம் வழங்குவதாக உறுதியளித்ததாகவும் இதன் காரணமாக ஆர்பாட்டத்தை இடைநிறுத்துவதாகவும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் அடிப்படையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட சிற்றூழியர்கள் 40 பேரில் 27 பேருக்கு நியமனம் வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் இருந்து எமது செய்தியாளர் வாசு-

Tags: , ,