எங்களின் கடலிலே…

fishing2
அள்ளித் தந்த கடலே அள்ளிக் கொண்டு சென்ற சுனாமி அவலத்திலிருந்து மீள்வதற்குள் போரினால் இடப்பெயர்வைச் சந்தித்து மீளக்குடியமர்ந்துள்ள மக்கள் தென்பகுதியைச் சேர்ந்த பெரும்பான்மையினத்தவரால் தமது வாழ்வாதாரங்களைக் தொலைக்கின்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தின் எட்டாத் தொலைவாக இருக்கின்ற வடமராட்சி கிழக்குப் பகுதி மீனவர்களது வாழ்வாதாரமே தற்போது கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.

வடமராட்சி கிழக்குப் பகுதி மக்கள் 2010 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி மீளக்குடியமர்வு செய்யப்பட்டனர். மீன்பிடியை பிரதானமாக கொண்ட இந்தப் பகுதி மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக பாசிக் நிறுவனத்தால் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

சுண்டிக்குளம் கடல் பகுதியே மீன்வங்கியாகக் காணப்படுவதால் இந்திய மீனவர்கள் தொடக்கம் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களும் இந்தப் பகுதிகளுக்குள் வந்து மீன்பிடியில் ஈடுபடுகின்றனர். இருப்பினும் இந்தப் பகுதி மீனவர்களது வாழ்வாதாரத்துக்குப் பெரியளவில் பாதிப்பு ஏற்படவில்லை.

கடந்த ஆண்டு தென்பகுதியைச் சேர்ந்த பெரும்பான்மையின மீனவர்கள் கடல்அட்டை பிடிப்பதற்காக வடமராட்சி கிழக்கு கடற்பகுதியினுள் புகுந்தார்களோ அப்போதிருந்து தமது வாழ்வாதாரம் ஆட்டம் காணத் தொடங்கியதாகக் குறிப்பிடுகின்றனர் வடமராட்சி கிழக்கு மீனவ சங்கத்தினர்.

“போனவருஷம் ஆமிக்காரரோட வந்து சிங்கள மீன்பிடிகாரர் கேட்டதால கடல் அட்டை பிடிக்க தாளையடிப் பக்கம் விட்டனாங்கள். ஆனால் இதுதான் கடைசி வருஷம் என்று சொல்லித்தான் விட்டனாங்கள். ஆனா அவங்கள் இந்த வருஷமும் வந்து கடல் அட்டை பிடிக்கிறாங்கள்” என்கின்றனர் மீனவ சங்கத்தினர்.

யாழ்ப்பாணத்தின் கடல் எல்லையாக இருப்பது சுண்டிக்குளம் பகுதி. இந்தப் பகுதியில் மக்கள் இன்னமும் மீளக்குடியமரவில்லை. அத்துடன் கேவிலில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் இந்தப் பகுதியினூடாக தொழில் செய்வதற்கு வடமராட்சி கிழக்கு மீனவர்களுக்கு அனுமதியளிக்கவில்லை. இருப்பினும் சுண்டிக்குளம் பகுதிக்குரிய கடற்தொழிலாளர் சங்கம் ஒன்று இயங்கி வருகின்றது.

“சுண்டிக்குளம் தலைவர் காசை வாங்கிக் கொண்டு சிங்களவன் கடல் அட்டை பிடிக்கிறத்துக்கு கடிதம் குடுத்திட்டான். அவர் இப்ப ஆஸ்திரேலியாவுக்கு ஓடிட்டார். அவன்ர கடிதத்தை வச்சுக் கொண்டு மீன்பிடி அமைச்சில அனுமதி எடுத்திட்டு சிங்களவன் இங்க கடல் அட்டை பிடிக்க வந்திட்டான்” என்கின்றனர் மீனவ சங்கத்தினர்.

நீர்கொழும்பு, சிலாபம் பகுதியைச் சேர்ந்த சிங்கள மீனவர்கள் ஏப்ரல் மாதம் தொடக்கம் ஒக்ரோபர் மாதம் வரையிலான காலப் பகுதியிலேயே கடல் அட்டை பிடிப்பதற்காக வடமராட்சி கிழக்கு கடலுக்கு வருகின்றனர். இந்த வருஷமும் அவர்கள் மே மாதம் வடமராட்சிக்கு வந்த போது பிரச்சினை வெடித்தது.

சிங்கள மீனவர்கள் இந்தப் பகுதியில் வந்து கடல் அட்டைபிடிக்க அனுமதிக்க மாட்டோம் என்று சகல மீனவசங்கங்களும் உறுதியாக நின்றபோதும், சுண்டிக்குளம் சங்கத்தினால் தன்னிச்சையாக கடிதம் வழங்கப்பட்டதால் வேறு வழியின்றி அவர்களை அனுமதிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் சிங்கள மீனவர்கள், வடமராட்சி கிழக்கு மீனவர்களுக்கிடையே கடல்அட்டை பிடிப்பது தொடர்பில் ஒரு கலந்துரையாடலுக்கு இராணுவம் ஒழுங்கு செய்தது.

மே மாத ஆரம்பத்தில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

ஆனால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களோ எந்தவொரு அரசியல் தரப்பினரும் கூட்டத்துக்கு வரக்கூடாததென்றும் அவ்வாறு அவர்கள் வந்தால் கூட்டம் நடக்காதென்றும் நீங்கள் இங்கிருக்க மாட்டீர்கள் என்றும் வடமராட்சி கிழக்கு மீனவ சங்கப் பிரதிநிதிகளை இராணுவத்தினர் மிரட்டியுள்ளனர்.

இதனையடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வராமலேயே குறித்த கலந்துரையாடல் இராணுவத்தினரால் நடத்தப்பட்டுள்ளது. “எங்க ஏ.டி (கடற்தொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளர்) வந்தவர். வடமராட்சி கிழக்கில இருக்கிற எல்லா ஆமி கொமாண்டர்மாரும் வந்தவை. எங்க மீனவ சங்கங்க ஆக்கள் எல்லாரும் வந்தவை. தலைவர், செயலாளர், பொருளாளர்மாரை மட்டும்தான் கூட்டத்துக்க ஆமி விட்டவன். கூட்டம் பெரும் காரசாரமாக நடந்தது. அவை கடல் அட்டைபிடிக்கிறதில உறுதியாய் நிண்டிச்சின. ஒரு கட்டத்தில எங்கட ஆக்கள் இவையோ கதைச்சுப் பிரியோசனமில்லை சிங்களவன்ர வாடியை எரிச்சு அடிச்சுக் கலைச்சாத்தான் சரி என்று சொன்னதுக்குப் பிறகுதான் அவை அடங்கினவை” என்கிறார் மீனவ சங்க பிரதிநிதி ஒருவர்.

“எங்கட இடத்துக்கு நாங்கள் போகேலாது. ஆனா சிங்களவன் வந்தவுடன மட்டும் அவங்களை விட்டுட்டாங்கள். சுண்டிக்குளத்திலயிருந்து எங்கட ஆக்கள் தொழில் செய்ய அனுமதியில்லை. சிங்களவன் வந்து கடல் அட்டைபிடிக்கிறான். எங்களால என்ன செய்யேலும்” என்று இயலாமையை விபரிக்கின்றார் அந்தப் பகுதி மீனவர் ஒருவர்.

“400 போட் வந்து நிக்குது. 60 வாடி வரையில கட்டியிருக்கிறான். 12 கொம்பனி கடல் அட்டை பிடிக்குது. ஆனா இரண்டு கொம்பனிக்குத்தான் அனுமதி இருக்குது. மிச்சாக்கள் எல்லாம் ஆமிகாரனின்ட செல்வாக்கில இருந்து மீன்பிடிக்கிறாங்கள். அட்டை பிடிக்கிறாங்கள், சிலிண்டர் பாவிக்கிறாங்கள், லைட் அடிச்சுப் பிடிக்கிறாங்கள். தடை செய்த எல்லாத்தையும் பாவிச்சு அவன் கடல் அட்டை பிடிச்சாலும் அதை தடுக்க ஒரு நடவடிக்கையும் இல்லை” என்று குறிப்பிடுகிறார். மீனவ சங்கத் தலைவர்.

இலங்கையில் சங்கு பிடிப்பதற்கு தடைசெய்யப்பட்டுள்ள நிலையில் சிங்கள மீனவர்கள் கடல் அட்டை பிடிக்கும் சாக்கில் சங்கு பிடித்தலில் ஈடுபடுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பிடிக்கப்படும் சங்குகளை கூலரின் அடியில் போட்டுக் கொண்டு செல்கின்றனர்.

“சிலிண்டர் பாவிச்சு, லைட் அடிச்சு இரவில இவங்கள் கடல் அட்டை பிடிக்கிறதால மீன்பாடு எங்களுக்கு குறைவாக இருக்கு. நாங்கள் வழிச்சல் வலை போட்டுத்தான் தொழில் செய்யிறனாங்கள். தண்ணி ஓட்டத்துக்கு வலையைப் போட்டு பிடிக்கேக்க, இவங்கள் இப்பிடிச் செய்தா மீன்பாடு குறைவாகத்தான் இருக்கும். இதால எங்களுக்கு சரியான தொழில் பாதிப்பு” என்கின்றனர் மீனவர்கள்.

இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிராக போர்க் கொடி தூக்கும் அமைச்சர் டக்களஸ் தேவானந்தா இங்கு இராணுவத்துடன் துணையுடன் இடம்பெறும் சிங்கள மீனவர்களின் அத்துமீறல்கள் குறித்து மௌனத்தையே பதிலாக வழங்குகின்றார்.

சுனாமியால் அள்ளுண்டு போன வாழ்வாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவதற் கிடையில் போரால் பறிபோன வாழ்வாதம் மீளவும் கட்டியெழுப்படும் சூழ்நிலையில் அதனையும் தட்டிப் பறிப்பதற்கு தென்பகுதி மீனவர்கள் முயல்கின்றனர். எங்கள் கடலில் நாங்கள் சுதந்திரமாக தொழில் செய்யும் நாள் எப்போது வரும்?

Tags: , , ,