விடுதலைப்புலிகளும், அரச படைகளும் யுத்தத்தின் போது இருந்த சிங்கள தமிழ் இனவாதம் யுத்தம் முடிந்து சமாதானமான இந்த தருணத்திலும் தலைகால் தெரியாமல் தலை விரித்தாடுகின்றது என கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சி. பாஸ்க்கரா தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
தமிழ் மக்களுக்கு விடுதலை, மக்களை காப்பாற்றுகின்றேன் என இலட்ச கணக்கில் தனது நாட்டு மக்களை கொன்ற நாளில் வெற்றி விழாவை கொண்டாடும் அரசு இன்னும் ஓர் அரசியல் தீர்வை சமர்ப்பிக்கும் எண்ணமே இல்லாது உள்ளது.
அதற்கும் மேலாக ஒன்றுமில்லாத வடமாகாண தேர்தல் நடத்துவதாக அரசு கூறவும், கூட்டணிக் கட்சிகள் தேர்தல் வைப்பதை எதிர்த்து கூட்டம் போட்டு கூச்சல் இடுவது தான் தற்போது நாட்டில் நடந்து வருகின்றது.
தர்ம புத்தரின் தர்ம போதனையை நன்றாக படிக்காத இனவாத தேரர்களின் கைங்காரியங்கள் தலை விரித்தாடுவதும் அதனை ஒட்டி அரசின் பங்காளி கட்சியினர் 13ஆவது ஒழிப்பு கையெழுத்து வேட்டை மற்றும் கூட்டங்களை நடாத்தி இனவாத செயற்பாட்டை கூட்டும் கைங்காரியங்களை செய்து வருகின்றனர்.
அரசு உலக நாடுகளுக்கும் தமிழ் மக்களுக்கும் தீர்வையும் தேர்தலையும் நடைமுறைப்படுத்துவதாக கூறுவதும் தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளி விடும் செயற்பாடாகவே உள்ளது.
எனவே அரசு நல்ல சிந்தனையில் நடக்க வேண்டுமானால் கௌதம புத்தர் வழியில் நடக்கும் கல்முனை சுபத்ராமய விகாராதிபதி சங்கரத்ன தேரர் கூறியது போல, இலங்கை பௌத்தர்களுக்கு மாத்திரம் உரிய நாடு இல்லை என்ற அவரின் கருத்துப்படி அரசு சிந்தித்து செயற்பட்டால் ஜக்கிய இலங்கைக்குள் சகல இனத்தவர்களும் சமமாக வாழும் சூழ்நிலை ஏற்படும் என்றார்.
இலங்கையில் இருந்து எமது செய்தியாளர் வாசு-