
13ஆவது திருத்தச் சட்டத்தில் ஏதேனும் திருத்தங்கள் கொண்டுவருதாயின் இந்தியாவின் ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளப்படும் என ஊடக அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
தேர்தல் திட்டமிட்டபடி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறும். உறுதியான திகதியை விரைவில் அரசாங்கம் அறிவிக்கும்.
அதேபோன்று வட மாகாண சபை தேர்தல் மற்றும் 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் நாட்டில் மேலோங்கியுள்ள கருத்துகள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் நாட்டில் பல்வேறு எதிர்ப்புக் கருத்துகள் தெரிவிக்கப்படுவதுடன் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதனை அரசாங்கம் அவதானத்துடனேயே நோக்குகின்றது. எவ்வாறாயினும் நாட்டின் மூலச் சட்டத்தின் பிரகாரம் 13ஆவது திருத்தச் சட்டம் என்பது அரசியலமைப்பின் ஒரு பகுதி. இதனை நிராகரிக்கவோ, புறந்தள்ளவோ முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் அரசாங்கம் ஏதேனும் தீர்மானங்களை மேற்கொண்டால் அதற்கு இந்தியாவின் ஆலோசனையை பெற்றுக் கொள்வோம்.
ஆனால், தற்போதைக்கு அவ்வாறானதொரு தேவை ஏற்பட வில்லை. அதேபோன்று வட மாகாண சபை தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் நடைபெறும்.
அரசாங்கத்திற்குள் உள்ள பல அரசியல் கட்சிகளும் வட மாகாண சபை தேர்தலுக்கு முன்னர் 13ஆவது திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்யவேண்டும் என கருத்துகளை வெளியிடுகின்றன.
ஆனால், அரசாங்கம் உடனடியாக அவ்வாறானதொரு நிலைப்பாட்டிற்கு செல்ல முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் இருந்து எமது செய்தியாளர் வாசு-





