காணி சுவீகரிப்பு உறுதியானது- ஜனகபண்டார

janaka
யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு மத்திய நிலையம் ஒன்றை நிறுவுவதற்காக, வலி.வடக்கில் 6 ஆயிரத்து 381 ஏக்கர் தனியார் காணிகள் திட்டமிட்டபடி சுவீகரிக்கப்படும். இதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை என்று காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் அடித்துக் கூறியுள்ளார்.

இந்தக் காணி சுவீகரிப்புக்கு எதிராகக் காணி உரிமையாளர்களால் உயர் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்யப்பட்டு தேவை ஏற்படின் சுவீகரிப்புக்கு எதிராக இடைக்காலத் தடை உத்தரவையும் பெறலாம் என மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில் காணி அமைச்சர் மேற்கண்டாறு கூறியுள்ளார்.

தேசிய பாதுகாப்புக்காக அல்லது அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக காணிகள் தேவைப்படின் அது வடக்கில் இருக்கிறதா? தெற்கில் இருக்கிறதா? என்று பார்க்க முடியாது. எங்கிருந்தாலும் அவை சுவீகரிப்பட்டே தீரும் என்றும் காணி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அரசு மேற்படி தேவைகளுக்காக பாரம்பரிய காணிகளைக் கூட சுவீகரித்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இராணுவ முகாம்களை அமைப்பதற்கென அடையாளப்படுத்தப்பட்ட காணிகளில் தேவையானவற்றை மட்டும் வைத்துக்கொண்டு ஏனையவை அவற்றின் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

சுவீகரிக்கப்படும் காணிகளின் உரிமையாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார். இதேவேளை, அரசின் காணி சுவீகரிப்பை எதிர்த்து 2,176 பேர் சார்பில் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான இடைக்காலத் தடை உத்தரவைப் பெறுவதற்கு மனுதாரர்களுக்கு உரிமை உள்ளது என நீதிமன்றம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் இருந்து எமது செய்தியாளர் வாசு-

Tags: , ,