சீனாவுடனான இலங்கையின் உறவு இந்தியாவுக்கு எதிரானது இல்லை என்கிறார்- பிரசாத் காரியவசம்

presad-kariyawasam
இலங்கையின் உறவினராகவும், நெருங்கிய நண்பனாகவும் இந்தியா இருக்கிறது. சீனாவுடன் அதிகரித்து வரும் இலங்கையின் நெருக்கத்துடன் இதை தொடர்புபடுத்தக் கூடாது என்று இந்தியாவுக்கான இலங்கை தூதுவர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியில் வெளிநாட்டுச் செய்தியாளர் சங்கத்தில் உரையாற்றிய அவர்,

இது ஒன்றை விட்டுக் கொடுத்து ஒன்றைப் பெறுகின்ற ஆட்டம் அல்ல. இந்தியாவை நாம் ஒரு உறவினராக, நெருங்கிய நண்பனாகவே கருதுகிறோம். நாம் பலமான உறவைக் கொண்டிருக்க வேண்டும். அதேவேளை, சீனாவுடனான உறவுகளும் எமக்கு முக்கியமானது. அது மிகவும் பழமை வாய்ந்த உறவு. அந்த உறவு பிரதானமாக, அபிவிருத்தி வாய்ப்புகளை அடிப்படையாக கொண்டது.

இலங்கையின் உட்கட்டமைப்பு அபிவிருத்தியில் தான் சீனா பிரதானமாக, தொடர்புபட்டுள்ளது. சீனாவுடனான உறவுகளை முரண்பாடாக பார்க்கக் கூடாது. இன்னொரு நாட்டினால் மேற்கொள்ளப்படும் எந்த திட்டமும், மூலோபாய சமநிலை, அமைதி, பிராந்தியத்தின் பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது என்பதில் இலங்கை தெளிவாகவே உள்ளது.

இந்தியாவுக்கு பிரச்சினை ஏற்பட்டால், எமக்கும் கூட பிரச்சினை ஏற்படும். இந்தியாவுக்கு அடுத்து நாம் இருக்கிறோம். எனவே, நாம் இந்தியாவுக்கு எதற்காக பிரச்னையை ஏற்படுத்தப் போகிறோம் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இலங்கையில் இருந்து எமது செய்தியாளர் வாசு-

Tags: ,