வடமாகாணத் தேர்தலுக்கு முன்னர் காணி, பொலிஸ் அதிகாரங்கள் குறித்து உறுதியான முடிவை ஜனாதிபதி எடுப்பார்
13ஆவது திருத்தம் மற்றும் வடமாகாணத் தேர்தல் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் முக்கிய பேச்சுகளை நடத்துவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான மூத்த அமைச்சர்கள் சிலர் தீர்மானித்துள்ளனர்.
13ஆவது திருத்தத்தினூடாகக் காணி, பொலிஸ் அதிகாரங்களை வட மாகாணத்துக்கு வழங்குவதற்கு எதிர்ப்பைத் தெரிவித்துவரும் சில அமைச்சர்களே இவ்வாறு ஜனாதிபதியைச் சந்திக்க முடிவு செய்துள்ளனர் எனத் தெரியவருகிறது.
முழுமையான அதிகாரங்களுடன் வடமாகாணசபை அமையுமானால் அது நாட்டில் பெரும் பிரச்சினைகளை உருவாக்குமென்பதால் வடமாகாணசபைத் தேர்தலை நடத்தக்கூடாதென்ற கோரிக்கையை ஜனாதிபதியிடம் முன்வைக்க உள்ளதாகவும், ஜனாதிபதியிடமிருந்து சாதகமான பதில் கிடைக்காத பட்சத்தில் அமைச்சுப் பதவிகளை இராஜிநாமாச் செய்வது பற்றி தீர்க்கமான முடிவு எடுக்கப்படுமென்றும் அரசின் மூத்த அமைச்சர் ஒருவர் நேற்று “உதயனி’டம் தெரிவித்தார்.
வடமாகாணத் தேர்தலுக்கு முன்னர் காணி, பொலிஸ் அதிகாரங்கள் குறித்து உறுதியான முடிவை ஜனாதிபதி எடுப்பாரெனவும், அல்லாத பட்சத்தில் வடமாகாணசபைத் தேர்தலுக்கு ஜனாதிபதி செல்லமாட்டார்என்றும் மேற்படி அமைச்சர் மேலும் நம்பிக்கை வெளியிட்டார். இன்னும் ஓரிரு நாள்களில் இந்தச் சந்திப்பு நடைபெறுமெனத் தெரிவிக்கப்படுகிறது.