13ஆவது திருத்தத்தை ஒழிப்பது இந்திய – இலங்கை ராஜதந்திர உறவுகளை வேரறுக்கும் செயல்-புளொட் தலைவர் த.சித்தார்த்தன்

sitharthan
இலங்கை – இந்திய உடன்படிக்கையின் பிரகாரமே 13ஆவது அரசியலமைப்பு திருத்தம் கொண்டுவரப்பட்டது. எனவே இதனை ஒழிப்பதென்பது இரு நாடுகளுக்கிடையேயான ராஜதந்திர உறவுகளை வேரறுக்கும் செயற்பாடாகும் என புளொட் தலைவர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அரசாங்கத்துடன் இருக்கும் தமிழ் – முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதற்கு ஒருபோதும் ஆதரவளிக்கமாட்டார்கள் என்றே நம்புகிறோம் எனவும் அவர் கூறியுள்ளார்.

பாராளுமன்றத்திற்கு எந்த உறுப்பினராலும் தனிநபர் பிரேரணையொன்றை கொண்டு வரமுடியும். அதனை எவராலும் தடுக்க முடியாது. அத்துடன் தனிநபர் பிரேரணையென்பது பாரிய வலுவானதொன்றல்ல. 13ஆவது திருத்தம் என்பது இலங்கை – இந்தியா என்ற இரு நாடுகளுக்கிடையேயான இராஜதந்திர உறவுகளுக்கமைய பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு உடன்படிக்கை செய்து கொண்டுவரப்பட்டது.

எனவே, இதனை ஒழிப்பதென்பது இரு நாட்டு உறவுகளையும் பாதிக்கும். அது மட்டுமல்லாது இதனை ஒழிப்பதற்காக பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையும் கிடைக்கப்போவதில்லை.

அரசாங்கத்தோடு இணைந்திருக்கும் தமிழ், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும், இடதுசாரி பாராளுமன்ற உறுப்பினர்களான வாசுதேவ நாணயக்கார, பேராசிரியர் திஸ்ஸ விதாரண, டியூ குணசேகர, இவர்களுடன் சிறீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்களான டிலான் பெரேரா, ராஜித சேனாரத்ன போன்றவர்களும் இதற்கு ஆதரவாக வாக்களிக்க மாட்டார்கள் என்பது அவர்களின் கடந்தகால கூற்றுக்களில் இருந்து அறியக் கூடியதாகவுள்ளது.

தமக்கு ஒரு நியாயமான தீர்வாக அதிகாரப்பரவலாக்கலையே தமிழ், முஸ்லிம் மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஹெல உறுமயவின் தவிசாளரும், அதன் பாராளுமன்றக்குழு தலைவருமான அத்துரலியே ரத்னதேரர் அரசியல் யாப்பின் 13ஆவது திருத்தத்தை இரத்துச் செய்யும் தீர்மானத்தை கொண்டுவந்ததன் மூலம் சிங்கள பேரினவாதிகள் தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான தீர்வினை வழங்கத் தயாரில்லை என்பதையே காட்டுகின்றது.

நிச்சயமாக இந்த நாட்டிலே இனவாதத்தைத் தூண்டும் ஒரு செயலாகவே இது பார்க்கப்படுகின்றது. இத்தனிநபர் பிரேரணை ஒருபோதும் வெற்றியடையப் போவதில்லை என புளொட் தலைவர் சித்தார்த்தன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இருந்து எமது செய்தியாளர் வாசு-

Tags: ,