காணி சுவீகரிப்பு தொடர்பான 2184 ரிட் மனுக்கள் விசாரணைக்கு- மேன் முறையீட்டு நீதிமன்றம்

court
யாழ்ப்பாணத்தில் தமக்கு சொந்தமான காணிகளை இழந்துள்ளமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2184 ரிட் மனுக்கள் மீதான விசாரணையை யூலை மாதம் 10 ஆம் திகதிக்கு ஒத்திவைத்த மேன்முறையீட்டு நீதிமன்றம் பிரதிவாதிகளுக்கும் நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்டுள்ளது.

காணிகளை இழந்துள்ளவர்களில் முதல்கட்டமாக 1474 ரிட் மனுக்களும் இரண்டாவது கட்டமாக 710 ரிட் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்கு மே மாதம் 27 ஆம் திகதி திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று 30 ஆம் திகதி வரை விசாரணையை ஒத்திவைத்தது.

தமக்கு சொந்தமான 6381 ஏக்கருக்கு கூடுதலான பாரம்பரிய தனியார் நிலங்களை சுவீகரிக்க அரசாங்கம் எடுக்கு நடவடிக்கைகளை எதிர்த்தே மே மாதம் 15 ஆம் திகதி புதன்கிழமை முதல் கட்டமாக 1474 ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அந்த மனுக்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் நீதியரசர் கே. ஸ்ரீஸ்கந்தராஜா முன்னிலையில் கடந்த 21 ஆம் திகதி ஆராயப்பட்டன.

1474 ரிட் மனுக்களையும் ஏற்கவேண்டும் என்பதற்கான ஆதாரங்களை மே மாதம் 27 ஆம் திகதி திங்கட்கிழமை முன்வைக்குமாறு அன்று பணித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் அன்றைய தினத்திற்கே வழக்கையும் ஒத்திவைத்தது.

தங்களது சொந்த காணிகள் சட்டவிரோதமாக கைப்பற்றப்பட்டுள்ளதாக குறிப்பிட்டே இவர்கள் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

அதனடிப்படையில் மனுக்களை கடந்த 27 ஆம் திகதி திங்கட்கிழமை பரிசீலனைக்கு உட்படுத்திய நீதிமன்றம் மனுக்கள் மீதான விசாரணையை நேற்று வியாழக்கிழமை 30 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.

அதற்கிடையில் இரண்டாம் கட்டமாக 710 ரிட் மனுக்களும் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில் காணி சுவீகரிப்பு விவகாரங்களுக்கு எதிராக 2184 ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளதன் பிரகாரம், பிரச்சினைக்குறிய நிலங்கள் கிட்டத்தட்ட 25.8 சதுர கிலோமீற்றர் பரப்பளவை கொண்டது. இது கொழும்பு நகரின் நிலப்பகுதியின் பரப்பளவில் மூன்றிலிரண்டு பங்கிலும் கூடுதலானது.

சட்டப்படி உயர்பாதுகாப்பு வலயம் என ஒன்றும் இல்லை என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. யுத்தம் முடிவடைந்து தாம் தமது காணிகளுக்கு சென்ற சமயம் இராணுவத்தினரால் தாம் தடுக்கப்பட்டு திருப்பியனுப்பப்பட்டதாகவும் மனுதாரர்கள் தங்களுடைய மனுக்களில் குறிப்பிட்டுள்ளனர்.

வலிகாமம் வடக்கு, வலிகாமம் கிழக்கு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள காங்கேசன்துறை மேற்கு மற்றும் மத்தி, வீமன்காமம் தெற்கு, தையிட்டி தெற்கு, பலாலி தெற்கு, ஒட்டகப்புலம், வளலாய் ஆகிய கிராமங்களே சுவீகரிக்கப்பட்டுள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் பாதுகாப்புப் படையின் தலைமையகத்தை அமைப்பதற்கு என 6,381 ஏக்கர் 38.97 பேர்சஸ் பரப்பளவுள்ள இடத்தை கைப்பற்றவுள்ளதாக காணி சுவீகரித்தல் சட்டத்தின் பிரிவு 2 கீழ் பிரகடணம் செய்யப்பட்டுள்ள அறிவிப்பு மற்றும் பலாலி மற்றும் காங்கேசன்துறை அதி உயர் பாதுகாப்பு வலையத்தை நிர்மாணிப்பதற்காக அப்பிரதேசத்தை கையளிப்பது பற்றிய அறிவித்தல் ஆகியவற்றிற்கு எதிராகவே இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ள அனைவருக்கும் மேற்படி பிரதேசத்தில் குறிப்பிடும் அளவு பரப்பளவுள்ள காணிகள் இருக்கின்றன. இவர்கள் மோதல் சமயத்தில் இப்பகுதியை விட்டு வெளியேறி யுத்தம் முடிவுற்றதைத் தொடர்ந்து தம்முடைய சொந்தக் காணிகளுக்கு வர முயற்சித்துள்ளனர்.

இதன்போது இராணுவம் இவர்களை தடுத்து விட்டுள்ளது. தற்போது இராணுவம் நிலை கொண்டுள்ள இப்பாரிய பிரதேசத்தை சுற்றி கம்பி வேலி இடப்பட்டுள்ளதோடு இராணுவ வீரர்கள் இப்பிரதேசத்தைச் சுற்றி காவலில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், இப்பிரதேசத்தின் ஒரு அதி உயர் பாதுகாப்பு வலயம் என எப்போதும் பிரகடனம் செய்யப்படவில்லை என்பதோடு 2011ஆம் ஆண்டு அவசர கால சட்டம் நீக்கப்பட்ட நிலையில் தற்போது இப்பிரதேசத்தை அதி பாதுகாப்பு வலையம் என பிரகடனப்படுத்துவதற்கோ அல்லது ஏனைய பொது தேவைகளுக்காக இதை சுவீகரிப்பதற்கான எந்த சட்ட அடிப்படையும் கிடையாது’ என்பதை மனுதாரார்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

‘காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர், யாழ்ப்பாணத்தில் காணிகளை சுவீகரிக்கும் தகுதி வாய்ந்த அரச அதிகாரி மற்றும் அரச காணி அளவையியலாளர் ஆகியோரை இந்த மனுக்களில் பிரதிவாதிகளாக மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சட்டத்தரணி மோகன் பாலேந்திரனின் அறிவுறுத்தல்படி ஜனாதிபதி சட்டதரணி கே. கனகேஷ்வரன் மற்றும் சட்டதரணிகளான எம்.ஏ. சுமந்திரன், விரான் கொரேயா, லக்ஷ்மன் ஜெயக்குமார், பவானி பொன்சேகா மற்றும் நிரான் அன்கிடெல் ஆகியோர் இந்த மனுக்களை தாக்கல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மனுக்கள் மீதான விசாரணைகளை யூலை 10 ஆம் திகதிக்கு ஒத்திவைத்த உயர்நீதிமன்றம் பிரதிவாதிகளையும் அன்றைய தினம் மன்றில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்டுள்ளது.

அலங்கையில் இருந்து எமது செய்தியாளர் வாசு-

Tags: ,