புத்தர் சிலை வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் ஆர்பாட்டம்

puththar
மட்டக்களப்பு பிள்ளையாரடியில் புத்தர் சிலை நிர்மாணிக்கப்படுவதற்கு ஆட்சேபனை தெரிவித்தும் இந்த பகுதியில் புத்தர் சிலை வைக்கப்படுவதை கண்டித்தும் இன்று காலை மட்டக்களப்பு, பிள்ளையாரடி ஆலயத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்ட பேரணியொன்று இடம்பெற்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், மட்டக்களப்பு பிள்ளையாரடி பொதுமக்கள் இணைந்து இந்த ஆர்ப்பாட்ட பேரணியை ஏற்பாடு செய்திருந்தனர்.

பிள்ளையாரடி ஆலயத்திற்கு முன்பாக ஒன்று திரண்ட பொதுமக்களும் தமிழத்தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களும் சுலோகங்களை தாங்கியவாறு ஊர்வலமாக பிள்ளையாரடி சந்தி வரை சென்றனர்.

‘அத்துமீறி புத்தர் சிலை வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றோம்’, ‘பௌத்தர்கள் இல்லாத ஊரில் புத்தர் எதற்கு’, ‘புத்தர் பகவானை ஆக்கிரமிப்பு சின்னமாக மாற்றதே’, ‘மதப்பிரச்சினை உருவாக்கும் புத்தர் சிலை வேண்டாம்’ போன்ற வசனங்கள் எழுதப்பட்ட சுலோகங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் தாங்கியிருந்தனர்.

மட்டக்களப்பு பிள்ளையாரடி ஸ்ரீ புலவிப் பிள்ளையார் ஆலய நிர்வாக சபை, கொத்துக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்த்தான ஆலய பரிபாலன சபை, பிள்ளையாரடி கிராம அபிவிருத்தி சங்கம் ஆகியன இணைந்து மட்டக்களப்பு அரசாங்க அதிபருக்கு கையளிப்பதற்கான மகஜர்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறப்பினர் பொன் செல்வராசாவிடம் கையளித்தனர்.

இதனையடுத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் இணைந்து மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மாவட்ட இராணுவ பிரியேகடியர் ஆகியோரை சந்தித்து மகஜர்களை கையளித்தனர்.

இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன் செல்வசராசா, பி.அரியநேந்திரன், சி.யோகேஸ்வரன் உட்பட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர்களான கே.துரைராஜசிங்கம், இரா.துரைரெத்தினம், கருணாகரன் ஜனா, பிரசன்னா இந்திரகுமார், கிருஷ்ணப்பிள்ளை வெள்ளிமலை உட்பட பலர் கலந்துகொண்டனர்.

-இலங்கையில் இருந்து எமது செய்தியாளர் வாசு-

Tags: ,