
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் நகுலேஸ்வரன் கீதாஞ்சலியின் வாகன சாரதி மற்றும் மெய்பாதுகாவலர்கள் மீது இளைஞர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதனால் பொலிஸார் ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
கிளிநொச்சி மாவட்ட சுதந்திரக்கட்சி அமைப்பாளர் நகுலேஸ்வரன் கீதாஞ்சலியின் மெய்பாதுகாவலர்கள் இருவரும், அவரது சாரதியும் சிவில் உடையில் சாப்பிடுவதற்காக வைரவபுளியங்குளத்திலுள்ள சாப்பாட்டுக் கடைக்கு சென்றிருந்த வேளை இளைஞர் குழு ஒன்றினால் தாக்கப்பட்டுள்ளனர். இதனால் காயமடைந்த மெய்பாதுகாவலரான பொலிஸ் உத்தியோகத்தர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக ந.கீதாஞ்சலி தெரிவிக்கையில்,
நேற்றைய தினம் கடமை நிமிர்த்தம் வெளியில் சென்று தனது வைரவபுளியங்குளத்திலுள்ள வீட்டுக்கு இரவு 10.30 மணியளவில் வந்ததாகவும் இதன் பின்னர் தனது மெய்பாதுகாவலர்கள் இருவரும் சாரதியும் சாப்பிடுவதற்காக வைரவபுளியங்குளத்திலுள்ள உணவகத்திற்கு வழமை போன்று சென்ற வேலையிலேயே இளைஞர்களால் தாக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதலுக்குள்ளாகிய மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களில் ஒருவர் சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் நான் முறையிட்டதற்கு அமைவாக வவுனியா பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்றும் தெரிவித்தார்.
இதேவேளை, வவுனியாவில் அண்மைய நாட்களில் திருட்டுச்சம்பவங்களும், கோஸ்டி மோதல்களும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





