
மின் கட்டண அதிகரிப்பை எதிர்த்து தொழிற்சங்கங்கள் நடத்தவுள்ள மாபெரும் வேலை நிறுத்தப் போராட்டத்தால் அச்சமடைந்துள்ள அரசு, அதை முடக்குவதற்காக அரச சேவையாளர்கள் அனைவரும் இன்று சேவைக்கு கட்டாயமாக சமுகம் தரவேண்டும் என்று மிரட்டல் விடுத்துள்ளதாக அரச பணியாளர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
வடக்கிலும் அரச ஊழியர்களை இவ்வாறு மிரட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டது.
இன்று பணிக்கு சமுகமளிக்காதவர்களின் விவரங்களை திணைக்களத் தலைவர்கள் உறுதிப்படுத்தி தனக்கு அறிவிக்குமாறு வடமாகாண ஆளுநர் அரச திணைக்கள தலைவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார் எனத் தெரியவருகிறது.
சகல அரச திணைக்களங்களுக்கும் ஆளுநர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார் என அறிய முடிந்தது.
இது குறித்து யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரனுடன் தொடர்பு கொண்டு கேட்ட போது, வேலை நிறுத்தத்தில் ஈடுபட வேண்டாம் என எனது திணைக்கள ஊழியர்களுக்கு நான் கூறவில்லை. இன்று பணிக்கு சமுகமளிக்காதவர்களின் விவரங்களையே கோரியுள்ளேன் என்றார்.
ஆயினும் இன்று எவரும் விடுமுறையில் நிற்கக்கூடாது என்றும், விடுமுறைக்கு ஏற்கனவே விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்களை நிராகரிக்குமாறும் கூறப்பட்டுள்ளதாக சுகாதாரப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.





