கொழும்பு, கொள்ளுப்பிட்டி கடற்பரப்பில் நேற்று நடைபெற்ற வெற்றி விழாவின்போது கடற்படைக்கு சொந்தமான படகொன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் காணாமல் போயுள்ளதுடன் படகில் இருந்த இரண்டு கடற்படை வீரர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.
விபத்தில் காணாமல் போன கடற்படை வீரதைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் விபத்துக்குள்ளான படகினை கரைக்கு கொண்டு வந்துள்ளதாகவும் கடற்படைப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
நேற்று காலி முகத்திடலில் இடம்பெற்ற யுத்த வெற்றி விழா நிகழ்வில் பங்குபற்றிய கடற்படை படகே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
காணாமல் போன கடற்படை வீரர் பலியாகியிருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது. அத்தோடு குறித்த படகு விபத்தில் உயிர்தப்பிய இரு கடற்படை வீரர்களும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.