யுத்தக் குற்றச் செயல்கள் குறித்து விசாரணை நடத்துமாறு AI, ஐ.நா மனித உரிமைப் பேரவையிடம் மீண்டும்

amnesty
யுத்தக் குற்றச் செயல்கள் n;தாடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையிடம் எழுத்து மூலம் மீண்டும் கோரியுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 23ம் அமர்வுகள் எதிர்வரும் 27ம் திகதி ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது அரசாங்கப் படையினரும், தமிழீழ விடுதலைப் புலிகளும் சர்வதேச சட்டங்களை மீறிச் செயற்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும் அவை தொடர்பில் பக்கச்சார்பற்ற சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சர்வதேச தர நிர்ணயங்களுக்கு அமைவான முறையில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.குற்றச் செயல்களில் ஈடுபட்டமை நிரூபிக்கப்பட்டால் சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிகளில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமை ஆர்வலர்கள், ஐக்கிய நாடுகள் அமைப்புடன் தொடர்புகளைப் பேணுவோர் போன்ற தரப்பினருக்கு இலங்கையில் பூரண பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.கருத்துச் சுதந்திரத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றுக் கருத்துக்களை வெளியிடும் தரப்பினர் மீது தாக்குதல் நடத்தியதனை அரசாங்கம் பகிரங்கமாக ஒப்புக் கொண்டு, எதிர்வரும் காலங்களில் இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபை, ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குற்றச் செயல்களில் ஈடுபட்ட அனைத்து தரப்பினருக்கும் சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிகளில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமேன வலியுறுத்தப்பட்டுள்ளது.

-GTN

Tags: ,