
வட மாகாண சபைத் தேர்தலை எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடத்த உள்ளதாக இந்தியாவிடம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உறுதி வழங்கியுள்ள நிலையில், நீதிமன்றத்தின் ஊடாக தேர்தலை ஒத்திவைத்து, இந்தியா மீண்டும் ஏமாற்றுவதற்கு தயாராகி வருவதாக ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அமைய, இந்த தேர்தலுக்கு எதிராக அரசாங்கத்தின் கூட்டணி கட்சியான அமைச்சர் விமல் வீரவங்சவின் தேசிய சுதந்திர முன்னணின் தடையுத்தரவு ஒன்றை பெற தயாராகி வருகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.
வடக்கில் குடியிருந்து தற்பேது இடம்பெயர்ந்துள்ள சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களின் பெயர்கள் வட மாகாணத்திற்கான வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்பதால், அவர்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாகவும் இதனால் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் எனவும் அந்த கட்சியின் நீதிமன்றத்தில் வழக்கை தாக்கல் செய்ய தயாராகி வருகிறது.
வட மாகாண சபைத் தேர்தலை நடத்துவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இதற்கு முன்னரும் பல தடவைகள் இந்திய தலைவர்களுக்கு வாக்குறுதி வழங்கியிருந்தார். எனினும் பல காரணங்களை கூறி அதனை ஒத்திவைத்து வந்தது போல், இம்முறையும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறார்.
பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டை இலங்கையில் நடத்த இந்தியாவின் ஆதரவை பெற்றுக்கொள்வதற்காகவே செப்டம்பர் மாதம் வட மாகாண சபைத் தேர்தலை நடத்துவதாக ஜனாதிபதி இந்தியாவிடம் கூறியிருந்தார் எனவும் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
வடமாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பாக ஆளும் கூட்டணி கட்சிகள் இரண்டு குழுக்களாக பிரிவடைந்துள்ளது
வடமாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பாக ஆளும் கூட்டணி கட்சிகள் இரண்டு குழுக்களாக பிரிந்துள்ளதால், தேர்தலை நடத்த எடுத்த தீர்மானம் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.
வடமாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டுமாயின், மாகாணங்களுக்கு அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள காணி மற்றும் காவற்துறை அதிகாரங்கள் இரத்துச் செய்யப்பட வேண்டும் எனவும் வடக்கில் வாழ்ந்து வந்த நிலையில் இடம்பெயர்ந்துள்ள சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களுக்கு வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் எனவும் சில கூட்டணி கட்சிகள் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன.
அதேவேளை அதிகாரங்கள் இரத்துச் செய்யப்பட்ட பின்னர், தேர்தலை நடத்துவது அவசியமற்றது எனவும் மாகாண சபைகளுக்கு உரிய அதிகாரங்கள் இருக்க வேண்டும் என்பதால், தற்போதுள்ள வாக்காளர்களை கொண்டு தேர்தலை நடத்த வேண்டும் என மேலும் சில கூட்டணிகள் கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.
அரசாங்கத்தின் தலைவர் முதல் சகல கட்;சித் தலைவர்களும் இனவாத அடிப்படையில் இருந்து செயற்பட்டு வருவது மாத்திரமல்லாது, அமைச்சர்கள் சிலரும் இனவாத அடிப்படையில் செயற்பட்டு வருகின்றனர். இதனால் நாட்டின் எதிர்காலம் இருண்டதாக இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
இனவாத அடிப்படையில் இருந்து கொண்ட இந்த தேர்தலை நடத்த தீர்மானித்துள்ளனர். இந்த அடிப்படை தவறானது என்பதால் இவ்வாறான நெருக்கடிகள் ஏற்படுவது கட்டாயம் எனவும் தமிழ் இனவாத தலைவர்களை பணத்திற்கு வாங்கி, சிங்கள இனவாத தலைவர்கள் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள செல்வது இந்த நெருக்கடியை மேலும் அதிகரிக்கும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
-GTN





