நாட்டு மக்களினதும், எதிர்க்கட்சிகளினதும் எதிர்ப்பை கண்டு அஞ்சி அரசாங்கம் ஆட்டம் கண்டுள்ளது. வரலாற்றில் என்றுமில்லாத அடக்கு முறையை நோக்கியே அரசாங்கம் செல்ல முற்படுகின்றது என்று ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவருமான தயா கமஹே தெரிவித்தார்.
மின் கட்டணத்தை உயர்த்தியது அரசாங்கத்தின் சூழ்ச்சியாகும். அரசாங்கத்தின் மக்கள் எதிர்ப்பு செயற்பாடுகளை ஊடகங்கள் ஊடாக தெரிந்து கொள்வதற்கான சந்தர்ப்பத்தை இல்லாதொழிப்பதே மின் கட்டண அதிகரிப்புக்கான சூழ்ச்சிகளில் ஒன்றாகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
கொழும்பு இராஜகிரியவில் உள்ள ஐக்கிய தேசிய கட்சியின் அலுவலகத்தில் ஊடகவியலாளர் மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து அங்கு கருத்து தெரிவிக்கையில், பயங்கரவாதம் இலங்கையில் நிலவிய போது கூட சுதந்திரமாக நாம் இயங்கினோம். வடக்கில் மட்டுமே பிரச்சினைகள் அதிகமாக இருந்தன. ஆனால் இன்று நாடே பிரச்சினைகளை சந்திக்கின்றது. அசாதாரணமான விலையேற்றத்தினால் மக்கள் சுதந்திரத்தினையும் உரிமையையும் இழந்து தவிக்கின்றனர்.
இன்று டியூசன் வகுப்புக்கு பிள்ளைகளை அனுப்புவது முதல் சீனி வாங்குவது வரை அதிகரித்த விலையேற்றத்தால் மக்கள் அவதிப்படுகின்றனர். பஸ் கட்டணம், கேஸ் விலை என்றே அன்றாடம் மக்கள் தலையில் விலையேற்ற சுமை இறக்கி வைக்கப்படுகின்றது. ஆனால் அரசாங்கம் தேசத்திற்கு மகுடம் என ஊழல் செய்வதோடு கார் ரேஸ்களையும் களியாட்டங்களையும் நடாத்தி மகிழ்கின்றது.
ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சிக்காலத்தில் மின்சார சபையில் ஊழல் இடம்பெற்றதாக ஐக்கிய தேசிய கட்சி மீது அரசாங்கம் குற்றம் சாட்டுகின்றது. அவ்வாறெனில் ஏன் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்களை நிறுத்தி குற்றத்தை நிரூபிக்க முடியாது. உண்மையில் ஊழல் இடம்பெற்றிருந்தால் அது நிரூபிக்கப்பட வேண்டும். சர்வ வல்லமை கொண்ட ஜனாதிபதியினால் இலகுவில் அதனை செய்ய முடியும். ஆனால் அவ்வாறு செய்யாது பொய்யான குற்றச்சாட்டுக்களை எம்மீது வைப்பது ஏற்றுக் கொள்ள முடியாது.
தேசத்திற்கு மகுடத்தை செய்வதற்காக வங்கிகளிலிருந்து கடனை பெற்று ஆடம்பரமாக அரசு செலவு செய்கின்றமையினால் வங்கிகள் எல்லாம் நஷ்டத்தில் இயங்குகின்ற நிலை ஏற்பட்டுள்ளது.
சூரியவெவ மைதானத்தினையும் மத்தள விமான நிலையத்தையும் அம்பாந்தோட்டையில் அமைத்தமையினால் எவ்வித பயனும் இல்லை. அதனால் அரசாங்கத்திற்கு நஷ்டம் மட்டுமே ஏற்பட்டுள்ளது. மத்தள விமான நிலையத்துக்கு பதிலாக கட்டுநாயக்க விமான நிலையத்தினை விஸ்தரிக்கக்கூடிய நடவடிக்கையினை இந்த அரசாங்கம் எடுத்திருக்க வேண்டும்.
ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சி காலத்தில் கிடைத்த ஜி.எஸ்.பி.பிளஸ் தடை செய்யப்பட்ட போது அரசாங்கம் அது தொடர்பில் எவ்வித பொறுப்புடனும் செயற்பட வில்லை. தற்போது பங்களாதேஷ் கட்டிட இடிபாடு விபத்தின் பின்னர் அச்சலுகை மீண்டும் இலங்கைக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது. அரசாங்கம் இதனை திறம்பட பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
மேலும் இன்று மதுவை ஒழிப்பதாக அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற அரச தரப்பு அமைச்சர்களிடையே பல மதுபான நிலையங்களின் (பார்) உரிமைகள் உள்ளன. 95% பார் அரசாங்க தரப்பிடமே உள்ளது. இது போன்ற நடவடிக்கைகளை நாட்டினை அதல பாதாளத்திற்கே இட்டுச்செல்லும்.
எனவே இந்த அரசாங்கத்தின் ஆட்சி மாற வேண்டும். பாராக்கிரமபாகு மன்னருக்கு பின்னர் இந்த நாட்டுக்கு கிடைத்த மிகச் சிறந்த ஆட்சி ரணிலினுடையதே. மீண்டும் ரணில் விக்கிரமசிங்கவை ஆட்சிக்கு கொண்டு வருவதற்கு நாம் ஒன்றுபட்டு செயற்படுவோம் என்றார்.