நீல அலையில் நவீன மே தினம்

may-day
கொழும்பு பொறளை கம்பல் பூங்காவில் கடந்த மே நாளன்று ஒரு பிரமாண்டமான மே தினம். கண்ணைப் பறிக்கும் மின்சார அலங்காரங்கள்.

மனதை மயக்க வைக்கும் அலங்கார வளைவுகள், பார்க்குமிடமெங்கும் பரவிப் பறக்கும் நீலக் கொடிகள் எனப் பணம் நீராக ஓடவிடப்பட்டதன் சாட்சியங்கள்; தொலை தூரங்களிலிருந்து பேருந்துகளில் கொண்டு வந்து இறக்கப்பட்ட இருபது லட்சம் மக்கள் கொழும்பு தாமரைத் தடாகத்திலிருந்து புறப்பட்ட பிரமாண்டமான பேரணி பொறளை மைதானத்தை அடைய மேன்மைமிகு ஜனாதிபதியினதும் அமைச்சர்களதும் வசீகரம் செய்யும் வார்த்தை ஜாலங்களில் மேடை முழக்கங்கள்.

அது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே நாள் கொண்டாட்டம். “உலகத்தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்”, “சகல விதமான ஒடுக்குமுறைகளையும் எதிர்த்துப் போராடுவோம்”, இவை உலகத் தொழிலாளி வர்க்கத்தின் மே தினக் கோஷங்கள். அந்தப் புனித கோஷங்கள் நீல அலையில் கரைந்து போக அங்கு ஒரு புதிய கோஷம்.

“நீல அலையில் நாட்டைக் கட்டியெழுப்புவோம்” போர் வெற்றியின் முழக்கம், துரித அபிவிருத்திக்கான அறைகூவல், உயர்த்தப்பட்ட மின்சாரக் கட்டணம் உட்பட வாழ்க்கைச் செலவு என்பவற்றை நியாயப்படுத்த மேடை முழக்கங்கள் வானை நிறைத்தன.

இலங்கை மக்களின் மாபெரும் மீட்பராக மேடையில் நிமிர்ந்து நின்ற ஜனாதிபதி மின்சாரக் கட்டண உயர்வை எதிர்ப்பவர்கள் அபிவிருத்தியைப் புரிந்துகொள்ளாதவர்கள் எனத் தீர்க்க தரிசனம் சொல்லிவிட்டு, மின்சாரக் கட்டண உயர்வில் சலுகைகள் வழங்கப்படும் என அறிவிக்கிறார். மீண்டும் கரகோஷம் வானைப் பிளக்கிறது.

இது நீல அலையில் நாட்டின் அபிவிருத்தி என்ற பெயரில் இடம்பெற்ற ஆட்சிபீடத்தில் அமர்ந்திருக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கோலாகலக் கொண்டாட்டம்.

அங்கு உழைக்கும் மக்களின் உரிமைக்குரல் கேட்கவில்லை, ஏகாதிபத்திய, முதலாளித்துவச் சுரண்டல்களுக்கு எதிரான முழக்கங்கள் ஒலிக்கவில்லை. ஒடுக்குமுறைகளுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்படவில்லை.

உழைக்கும் மக்களின் அடையாளச் சின்னமான செங்கொடிகள் முன்னின்று உயர்ந்து பறக்கவில்லை. ஒட்டுமொத்தத்தில் உழைக்கும் மக்களின் புரட்சிகர உணர்வின் வெளிப்பாடான மே தினம், ஓர் அரசியல் கட்சியினது, ஆட்சி பீடத்தினதும் பிரமாண்டமான பிரசாரக் கூட்டமாகக் கேவலப்படுத்தப்பட்டு விட்டது.

உண்மையான மே தின வரலாற்றை அறிந்த எந்தவொரு நியாயமான மனிதனும் கம்பல்பூங்கா விழா மே தினத்துக்கு இழைக்கப்பட்ட பெரும் அவமானம் என்றே கருதுவான்.

1886 மே முதலாம் நாள்

அமெரிக்காவின் சிக்காக்கோ நகரின் ஒரு பிரமாண்டமான ஆலை திடீரெனச் செயலிழக்கின்றது. பிரமாண்டமான இயந்திரங்களின் இரைச்சல் நின்றுவிட்டது.

வானளாவிய புகை போக்கிகள் ஓய்ந்துவிட்டன. அந்தத் தொழிற்சாலையிலிருந்து வெளியேறிய தொழிலாளர் படை, எட்டு மணி நேர வேலை உட்பட உரிமைக் கோரிக்கைகளை எழுப்பியவாறு வீதியில் இறங்குகிறது.

அந்தப் பேரணி சிக்காக்கோ நகர வீதிகளெங்கும் புரட்சிகர ஆவேசத்துடன் நகர்கிறது. நகரில் ஏனைய தொழிலாளர்களும் போட்டது போட்டபடி விட்டு விட்டு பேரணியில் இணைகின்றனர். பேரணி நகரின் மையத்தை நெருங்கும்போது அதில் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் ஒன்றுகலந்து விட்டனர்.

பேரணி நகரத்தின் மையத்தை அடைந்தபோது காவற்படையினரும் முதலாளிகளின் குண்டர்களும் இணைந்து தொழிலாளர் மேல் துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்க்கின்றனர்; இரும்புச் சட்டங்களால் தாக்குகின்றனர்.

நான்கு தொழிலாளர்கள் படுகொலை செய்யப்படுகின்றனர். ஏராளமானோர் படுகாயமடைகின்றனர். எனினும் பாட்டாளிகள் பயப்படவில்லை. குருதியில் நனைந்த தங்கள் தோழர்களின் சிவந்து விட்ட சட்டைகளைக் கொடிகளாக ஏந்தி பேரணியைத் தொடர்கின்றனர்.

மே நாலாம் நாள்

மே முதல் நாள் படுகொலைகளையும் கண்டித்து புறநகர் பகுதியிலுள்ள காமர்கெட் சதுக்கத்தில் ஒரு கண்டனப் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்படுகிறது. பொதுக் கூட்டம் ஆரம்பிப்பதற்கு சிறிது நேரம் முன்பாக ஒரு குண்டு வெடிக்கிறது.

அதில் ஒரு பொலிஸ்காரன் கொல்லப்படுகிறான். அதைச் சாட்டாக வைத்து பொலிஸார் மேற்கொண்ட கண்மூடித்தனமான துப்பாக்கிப் பிரயோகத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட பல நூறு பேர் கொல்லப்படுகின்றனர்.

தொழிலாளர் தலைவர்கள் கைது செய்யப்படுகின்றனர். நால்வருக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுகிறது. மேலும் பலருக்கு 15 வருடம் தொடக்கம் ஆயுள் காலம் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது.

ஆனால் உழைக்கும் மக்கள் கலங்கவுமில்லை; பின் வாங்கி விடவுமில்லை. போராட்டங்கள் பிரான்ஸ், பிரிட்டன், ஜேர்மனி, ரஷ்யா எனப் பலநாடுகளின் நகரங்களுக்கும் பரவுகின்றன.

1889 ஆம் ஆண்டு இடம்பெற்ற சர்வதேசத் தொழிலாளர் அமையத்தில் மே முதல் நாள் உலகத் தொழிலாளர் தினமாகப் பிரகடனம் செய்யப்பட்டது.

இது மே நாளின் வரலாறு. எட்டுமணி நேர வேலை உட்பட தொழிலாளி வர்க்கம் உரிமை கோரிப் போராடிக் குருதி சிந்திய உன்னத இலட்சியத்தின் வரலாறு.

1886 மே முதல்நாள் சிக்காக்கோ நகரத்தில் முதலாளிகளின் கூலிப்படைகளும் குண்டர்களும் நடத்திய மிருகத்தனமான இரத்த வேட்டைக்கு எவ்விதத்திலும் தரங்குறையாத நரபலி நாடகம் இலங்கையிலும் இடம்பெற்றது.

இலங்கையில் தொழிலாளர் சேமலாப நிதியைக் கையகப்படுத்தி அதை ஓய்வூதியத் திட்டம் என்ற பெயரில் ஏமாற்ற அரசு முனைந்த போது கட்டுநாயக்கா, சுதந்திர வர்த்தக வலயத் தொழிலாளர்கள் அதற்கெதிராகக் கிளர்ந்தெழுந்தனர்.

தங்கள் சேமலாப நிதியைப் பாதுகாக்க அணி திரண்டு பேரணி நடத்தினர். அரசின் பொலிஸ்படையும் அரச சார்புக் குண்டர்களும் இணைந்து பேரணி மீது மிருகத்தனமான தாக்குதலை நடத்தினர். பொலிஸாரால் துப்பாக்கிப் பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டது. அதில் ஒருவர் உயிரிழந்தார். பலர் காயமடைந்தனர்.

அமெரிக்க முதலாளித்துவக் கூட்டம் எவ்வாறு தொழிலாளர்கள் உயிரைப் பலிகொண்டு குருதியாறு ஓட வைத்ததோ அவ்வாறே கட்டுநாயக்கா தொழிலாளர்கள் மேல் மஹிந்த ராஜபக்ஷ அரசினால் கொடுமை இழைக்கப்பட்டது. அதே அரசு மே தினத்தை தானும் நீலக் கொடியின் கீழ் கொண்டாடுகின்றது.

எந்த அடக்குமுறையாளர்களுக்கு எதிராக மே தினம் உருவானதோ, அதே அடக்குமுறையாளர்கள் இலங்கையில் அதே மே தினத்தைத் தாங்கள் கைப்பற்றி அதன் புனிதத்தையும் புரட்சிகரத் தன்மையையும் சிதைத்துவிட்டனர்.

இன்னும் சொல்லப்போனால் தொழிலாளர்களின் எல்லாவித உரிமைகளையும் பறித்துவிட்டு இறுதியில் மே தினத்தையும் கைப்பற்றி அதன் இலட்சியங்களை மட்டுமன்றி நிறத்தையும் மாற்றிவிட்டனர்.

வழக்கமாக மே தினத்தில் சம்பள உயர்வுக் கோரிக்கை, வாழ்க்கைச் செலவு உயர்வுக்கு எதிரான கண்டனங்கள், வேலையற்றோர் குரல் என்பனவே பிரதானமாக ஒலிக்கும். அரச மே தினம் நீல அலையில் அபிவிருத்தி என்ற கோஷத்தில் எல்லாவற்றையுமே விழுங்கிவிட்டது.

சிக்காக்கோ மே நாளின் புரட்சிகர அனல் மெல்ல மெல்லப் பரவி 1917 இல் சோவியத் யூனியனை விடுவித்து ஓர் உழைக்கும் மக்களின் அரசை நிறுவியது. இரண்டாம் உலகப் போரின் இறுதியில் பல கிழக்கு ஐரோப்பிய நாடுகள் விடுதலை பெற்றன.

1940 இல் சீனாவில் உழைக்கும் மக்களின் ஆட்சி உதயமானது. 1952 இல் கியூபா விடுதலை பெற்றது. இறுதியில் வியட்நாம் அமெரிக்காவை விரட்டியடித்துத் தன் சுதந்திரத்தை நிலை நிறுத்தியது.

இலங்கை அரசு உலக ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகளின் உதவியுடன் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை முள்ளிவாய்க்காலில் வைத்துத் தோற்கடித்தது. அந்த வெற்றியின் பெருமிதமும் இலங்கை அரசின் மேதினக் கருப்பொருளில் ஒன்று.

உலகெங்கும் வாழும் ஒடுக்கப்படும் மக்களின் ஒரு முன்னோடிப் புரட்சிகர நடவடிக்கையான மே தினம் ஒடுக்குமுறை வெற்றியைக் கொண்டாடும் கேவலம் இலங்கையில் அரங்கேறுகிறது. உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்பது உலகத்தின் உழைக்கும் மக்களின் கோட்பாடு.

ஆனால் இலங்கையில் படையினருக்கும் அபிவிருத்தி என்ற பேரில் அதிகார வர்க்கத்துக்குமே நிலம் சொந்தம் என்பது மாற்ற முடியாத கோட்பாடு. வலி.வடக்கு கேப்பாபுலவு, மணலாறு, ஓமந்தை, மன்னார், கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகள் என எங்கும் பாதுகாப்பு, அபிவிருத்தி என்ற பெயரில் நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன. விவசாயிகளின் நிலங்கள் பறிக்கப்படுகின்றன.

கடலில் மீன்பிடிக்கும் தமிழ் மீனவர்கள் தொழில் செய்ய முடியாதபடி நெருக்கடிகள் கொடுக்கப்படுகின்றன. தென்பகுதி மீனவர்களால் வளங்கள் அள்ளிச் செல்லப்படுவதுடன் தடை செய்யப்பட்ட வலைகள் மூலம் அழிக்கவும்படுகின்றன.

இப்படியாக உழைக்கும் தமிழ் விவசாயிகள், தொழிலாளர்கள், மீனவர்கள் மீது இன்னொரு போரைத் தொடுத்திருக்கும் அரசு கொழும்பில் நீல அலையில் மே தினம் கொண்டாடுகிறது.

இன்று உழைக்கும் மக்களின் உரிமைகளைப் பறித்து ஆளும் வர்க்கம் அவர்களின் மே தினத்தையும் கூடக் கைப்பற்றி தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வருகின்றது என்பது தான் அடிப்படை உண்மை.

“நீல அலையில் நாட்டைக் கட்டியெழுப்புவோம்” போர் வெற்றியின் முழக்கம், துரித அபிவிருத்திக்கான அறைகூவல், உயர்த்தப்பட்ட மின்சாரக் கட்டணம் உட்பட வாழ்க்கைச் செலவு என்பவற்றை நியாயப்படுத்த மேடை முழக்கங்கள் வானை நிறைத்தன.

-uthayan

Tags: ,