கல்பனா சாவ்லா. இந்தியாவை தாயகமாகக் கொண்ட விண்வெளி வீராங்கனை. இறுதியாக விண்ணிலேயே கருகிப் போனவர். பெண்ணினத்தின் பெருமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர்.
அவர் விண்வெளி ஆய்வுக்காகப் பயணம் மேற்கொண்ட கொலம்பியா விண்கலம் 2003 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில் உடல்சிதறிப்போனார்.
இப்போது இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் உள்ள பாடா எனும் கிராமத்தில் வாழும் ஒன்பது வயதுச் சிறுமியான உபாசனா, முற்பிறவியில் கல்பனா சாவ்லாவாகப் பிறந்தது தானேதான் என்று கூறியிருக்கிறாள். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கல்பனா சாவ்லா விபத்தில் இறந்த சில மாதங்கள் கழித்து ஒரு சாதாரண ஏழைக் குடும்பத்தில் உபாசனா பிறந்தாள். சாதாரண குழந்தைகளைப் போலவே வளர்ந்த அவள், தனக்கு நான்கு வயதாகும் போது தனது முற்பிறவிகள் பற்றிக் கூற ஆரம்பித்தாள்.
கொலம்பியா விண்கலம் பற்றியும், அதில் தன்னுடன் பயணம் செய்த சக விஞ்ஞானிகள் குறித்தும் அவள் பல தகவல்களைக் கூற, அதிகம் கல்வியறிவு இல்லாத அவள் பெற்றோர்களுக்கு எதுவுமே புரியவில்லை.
“உபாசனா குழந்தையாக இருக்கும் போதே எப்போதும் பறப்பது பற்றியே பேசிக் கொண்டிருப்பாள்; அவளுக்கு அமெரிக்காவில் ஒரு பெரிய வீடு இருக்கிறது என்றும், அங்கு நிறைய பணம் இருக்கிறது என்றும் சொல்வாள். தான் ஒரு விமானத்தில் பயணம் செய்தபோது அது ஒரு பனிமலைச் சிகரத்தில் மோதி நொறுங்கி விழுந்து விட்டது என்றும் அதில் தான் இறந்து போய் விட்டதாகவும் சொல்வாள். குழந்தை ஏதோ உளறுகிறது என்று நாங்கள் முதலில் அதைக் கண்டு கொள்ளவில்லை. ஆனால் என்னுடைய அம்மா வீட்டுக்கு அவளை அழைத்துக் கொண்டு ஒருமுறை போனோம். அங்கு ஒரு செய்தித்தாளில் இருந்த ஒரு போட்டோவைப் பார்த்து, “அது தான் நான்” என்று உபாசனா கூற ஆரம்பித்தாள். அக்கம் பக்கத்தினர் மூலம்தான் அது “கல்பனா சாவ்லா’ என்பதும், அந்தப் பெண் ஒரு விண்கல விபத்தில் இறந்து போய் விட்டாள் என்பதும் தெரிய வந்தது. அதன் பின்னர்தான் குழந்தை சொல்வது பொய்யில்லை, அனைத்தும் உண்மை என்பதை உணர்ந்து கொண்டோம்” என்கிறார் உபாசனாவின் தாய்.
அதன் பின் உபாசனா தன் வீடு இதுவல்ல என்று அழுது அடம்பிடிக்க ஆரம்பித்து விட்டாள். தான் கர்நாலில் பிறந்ததாகவும் தாய் பெயர் ரேகா என்றும், தந்தை பெயர் பன்சாரி லால் சாவ்லா என்றும் கூறியவள், தான் உடனே அங்கு போக வேண்டும் என்று அழுது அடம்பிடிக்க ஆரம்பித்து விட்டாள். விசாரித்ததில் அவள் கூறுவது அனைத்தும் உண்மைதான் என்று தெரிய வந்தது. (ஆனால் தாய் பெயர் ரேகா அல்ல. சன்ஜோக்டா. அதை மட்டும் அவளால் சரியாகச் சொல்ல முடியவில்லை).
உபாசனாவிடம் தனியாகப் பல முறை உரையாடிய அவள் தாய்வழிப்பாட்டி குழந்தை நிச்சயமாகப் பொய் சொல்லவில்லை; அவள் கூறுவது முழுக்க முழுக்க உண்மை என்று தெரிவித்தாள்.
இந்த விவரங்கள் கல்பனா சாவ்லாவின் தந்தையான பன்சிலால் அவர்களுக்கும் தெரியவந்தது. ஆனால் அவர் இதனை நம்பாததுடன், இதெல்லாம் ஏமாற்று வேலை என்று கூறி உபாசனாவைச் சந்திக்க மறுத்து விட்டார்.
தாங்கள் ஒரு ஏமாற்றுக்காரர்களாகச் சித்திரிக்கப்படுவதை விரும்பாத உபாசனாவின் தந்தை ராஜ்குமார், அதுமுதல் மகளின் முற்பிறவி பற்றிய விஷயங்களை வெளியாருக்குக் கூறுவதை விட்டு விட்டார். உபாசனா உண்மையிலேயே கல்பனா சாவ்லாவின் மறுபிறவி தானா? விடை தெரியாமலே இந்தக் கேள்வி தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.
மறுபிறப்புப் பற்றிய நம்பிக்கைகள் நம்மிடம் மட்டுமல்ல உலகத்தவர்கள் அநேகரிடமும் இருக்கவே செய்கின்றன. அதிலும் அதிமானுடர்களின் மீள்பிறப்பு நிச்சயம் நிகழ்ந்தே தீருமென்றே ஒவ்வொருவரும் நம்புகின்றனர்.
சிலுவையில் அறையப்பட்டு மரித்த பின்னும் மூன்று நாள்களின் பின்னர் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தார் என்று கிறிஸ்தவர்கள் சொல்கிறார்கள். அது போன்றே “எப்போதெல்லாம் பூமியில் அதர்மம் தலைதூக்குகிறதோ அப்போதெல்லாம் அவதரிப்பேன்” என்று சினிமா பட நாயகர்கள் போல ”பஞ்ச்’ வசனம் பேசியபடி, மக்களைக் காக்க ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா யுகங்கள் தோறும் அவதரிக்கிறார் என்று இந்துக்கள் கருதுகிறார்கள்.
இந்து மதத்தில் உள்ள ஏனைய கடவுளர்களும் இவ்வாறு அடிக்கடி வெவ்வேறு அவதாரங்கள் எடுத்து மக்களை ரட்சிக்கத்தவறுவதில்லை. பௌத்தமும் மறுபிறப்புக் கொள்கையை முழுதுமாக நம்புகிறது. போதிசத்துவர் அன்னமாகவும், கௌதம புத்தராகவும் இன்னபிற உயிரிகளாகவும் பிறந்தார் என்றே அவர்கள் நம்புகின்றனர்.
வாழ்வு என்பது முடிவிலியற்ற ஒன்றென்ற நம்பிக்கை அவர்களிடத்தேயும் ஊறிப்போன ஒன்று. ஒரு சரீரத்தை விட்டு நீங்கும் ஆன்மா உடனேயே இன்னொரு சரீரத்தினூடாக வெளிப்படுவதாகக் கருதுகின்றனர்.
இந்த மரபின் நீட்சியாகவே அவர்கள் புலிகளின் தலைவரின் மீள்பிறப்பு பற்றிய எண்ணங்களை அதிகம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.தமிழர்களை விடவும் புலிகளுக்கான தலைவரின் வருகையை அதிகம் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் போல தெரிகிறது.
ஏனெனில் 30 வருடங்களாக பேரினவாதிகளின் தூக்கத்தைக் கெடுத்தவர் புலிகளின் தலைவர்தானே. அதனால்தான் ”இதோ புலிகளின் தலைவரின் சடலம்” என்று அரச ஊடகங்கள் ஒரு சடலத்தைக் காண்பித்த பின்னரும் கூட இன்னமும் அவரை மறக்கமுடியாமல் தலைவரின் மீள்வருகை பற்றிய கனவுகளைக் கண்டு திடுக்கிட்டு விழித்தபடியுள்ளனர்.
புலிகளுக்கு புதிதாக ஒருவர் தலைவராக வந்துள்ளார். சர்வதேசரீதியில் புலிகளின் ஆயுதக்கொள்வனவுக்கு கே.பிக்கு அடுத்த நிலையில் இருந்த … என்பவரே அடுத்த தலைவராக செயற்படத்தொடங்கியுள்ளார் என்று அரச சார்பு சிங்கள நாளிதழான ”தினமின’ தெரிவித்துள்ளது. ஆயினும் அந்தச் செய்திக்குரிய ஆதாரங்களெதனையும் அந்தச் செய்தியில் குறித்த ஊடகம் முன்வைக்கவில்லை.
அரசு புலிகளின் கதைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாகக் கூறினாலும், காலம் அந்த முற்றுப்புள்ளியைத் தொடரச்செய்யமுடியாத நிலைக்கே ஆட்சியாளர்களைக் கொண்டு சென்றுள்ளது. அரசுக்கு இப்போது ஏகப்பட்ட தலையிடிகள்.
சர்வதேச நாடுகளின் நல்லிணக்கத்தை ஏற்படுத்து, பரிந்துரையை நடைமுறைப்படுத்து’ விலைவாசி உயர்வுகள், வரி விதிப்புகள், காணி சுவீகரிப்புக்கு எதிரான போராட்டங்கள், கை நழுவிப்போகும் சர்வதே நிதியுதவிகள் என்று மஹிந்த அரசு தொடர்ச்சியான இக்கட்டுக்களைச் சந்தித்துவருகின்றது.
இந்த நிலையில் தனக்கெதிராக மக்களைத் திரும்பவிடாமல் செய்வதற்கு அரசுக்கு ஒரு ஆயுதம் தேவை. ஏற்கனவே எந்தவித முன்யோசனையுமின்றி, அதிகரித்த மின்கட்டணங்களால் நாடே கொந்தளிக்கும் நிலை தோன்றியிருந்தது.
ஊடகங்கள் யாவும் அரசை இது குறித்து கடுமையாக விமர்சிக்கத் தொடங்கியிருந்தன. டுனிஷியா, எகிப்து, லிபியா போன்று இங்கும் ஒரு மக்கள் புரட்சி வெடிப்பதற்கான ஆரம்பப்புள்ளிகள் தோன்றத்தொடங்கின.ஆனால் நல்லவேளையாக ஊடகங்களையும் மக்களையும் கொதிநிலையில் இருந்து தற்காலிகமாகவேனும் திசைதிருப்புவதற்கு ,துமிந்த சில்வாவின் இலங்கை வருகை அரசுக்கு ஒரு துருப்புச் சீட்டாக அமைந்தது.
அதனால் மின்கட்டணம் உள்ளிட்ட விலையுர்வுகளை விடவும் துமிந்தவைப் பற்றிய வாதப்பிரதி வாதங்களை மக்களிடையேயும், ஊடகங்களிடையேயும் பரவியுள்ளன.
எனினும் அவையெல்லாம் கொஞ்சநாளைக்குத்தான். துமிந்த பற்றிய மாயை விலகியதும் மீண்டும் விலையுயர்வுக்கு எதிராக நாட்டு மக்கள் கிளர்ந்தெழவே செய்வார்கள்.அப்போதெல்லாம் இப்போது நடந்தது போன்று ”துமிந்தக்களின்’ வருகைகள் நிகழ்ந்து அரசைக் காப்பாற்றுவதென்பது நடக்கக்கூடிய ஒன்றல்ல.
எனவே மக்களின் கவனத்தை நிரந்தரமாக திசைதிருப்ப ஏதாவது ஒரு தந்திரத்தைக் கண்டுபிடித்தாகவேண்டும். அதற்காகவே இந்தோனேஷியாவில் இன்னமும் புலிகள் இயக்கம், புதிய தலைவரின் கீழ் இயங்குகிறது என்று அரச ஊடகங்கள் கதையை அவிழ்த்துவிட்டுள்ளன.
இதன்மூலம் நிறைய இலாபம் அரசுக்கு. புலிகள் மீளவும் செயற்படத் தொடங்கி விட்டார்கள் என்று சொல்லி தமிழர் பகுதிகளில் படைப்பிரசன்னத்தை அதிகரிக்கலாம், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை குப்பைத்தொட்டியில் வீசலாம், உலகநாடுகளிடம் ”மீண்டும் பயங்கரவாதத்துக்கு எதிரான் போருக்கு உதவிக்கரம் தாருங்கள் என்று துணிந்து யாசகம் கேட்கலாம், இவ்வளவுக்கு உயர்த்த முடியுமோ அவ்வளவுக்கு விலைகளைக் கூட்டிக் குறைக்கலாம், அரசுக்கு எதிராக கிளர்ந்து அகிம்சை வழியில் போராடுவோரை புலிப்பயங்கரவாதிகள்’ என்று எந்தக் கேட்டுக் கேள்வியுமின்றி அள்ளி வந்து உள்ளே போடலாம், போர்க்குற்ற விசாரணைகள் என்ற விடாது துரத்தும் வேதாளத்திடம் இருந்து தப்பிக்கலாம். இப்படி நிறைய இலாபமீட்டல்களை அரசு அனுபவிக்கமுடியும்.
புலிகளின் புதுத்தலைவர் பற்றிய கதை எடுபடாவிட்டால், புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மொறிஸியஸ் தீவில் மீள்பிறப்பெடுத்துள்ளார். அவரைக் கைது செய்ய இலங்கைப் பொலிஸாரும் படையினரும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்றும் இதே அரசசார்பு ஊடகங்கள் சொல்லக்கூடும்.
ஏதாவது ஒரு அதிசயம் நிகழ்ந்து, யார் அவதரித்தாவது தம்முடைய தலையிடி தீர்ந்தால் போதுமென்ற நிலையே அரசுக்கு. அதற்காக யாருக்கு வேண்டுமானாலும் புலிகளின் தலைவர் என்றுமகுடம் சூட்ட அது தயாராகவே இருக்கிறது. ஆனால் தலைகளைத்தான் காணோம்.
-uthayan