நிரந்தரத் தீர்வுக்கு சரியான சந்தர்ப்பம்; ரணிலிடம் அழுத்தினார் இந்திய ஜனாதிபதி
Posted by rajharan
on April 6, 2013
in இலங்கை
|
செய்தியை வாசித்தோர்: 55,255
இலங்கைத் தமிழர்களுக்கு நிலையான அரசியல் தீர்வு ஒன்றை வழங்குவதற்குச் சரியான தனித்துவமான சந்தர்ப்பம் இதுவாகும் என இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
“இலங்கையில் போர் முடிவுற்றமை அங்கு அனைத்து மக்களும் ஏற்கக் கூடிய நிலையான அரசியல் தீர்வு ஒன்றை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பை அளித்துள்ளது” எனத் தன்னைச் சந்தித்த இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் எடுத்துரைத்தார் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி.
“உண்மையான தேசிய நல்லிணக்கத்துக்கான இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இலங்கை அரசு முன்னேற வேண்டும்” எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் ரனில் விக்கிரமசிங்க நேற்று முன்தினம் இரவு இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை ராஷ்டிரபதி பவனில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இந்தச் சந்திப்பின் போதே இந்திய ஜனாதிபதி மேற்கண்டவாறு வலியுறுத்தினார். இந்திய ஜனாதிபதி அங்கு மேலும் தெரிவித்ததாவது:
இலங்கை இந்திய இரு தரப்பு உறவானது வரலாறு, கலாசாரம் இனங்களுக்கிடையிலான தொடர்பு என்பவற்றுடன் மக்களுக்கு இடையிலான இரு தரப்பு நீண்டகால உறவுகளை யாவும் வரலாற்று ரீதியாகப் பகிர்ந்து கொள்வதாக அமைந்துள்ளது.
இரு நாடுகளும் எப்பொழுதுமே மிக நெருக்கமாகவும் நட்பாகவுமே இருந்து வந்துள்ளன. அருகில் இருப்பதானால் இலங்கையின் மீது இந்தியாவுக்கு இயற்கையாகவே அக்கறை உண்டு. இலங்கையில் ஏற்படும் அபிவிருத்திகளில் இந்தியா தொடர்புகள் எதுவும் இன்றி வாளாவிருந்து விட முடியாது என்றார்.
இந்திய ஜனாதிபதி கூறிய கருத்துக்களை தாமும் ஏற்றுக் கொள்வதாக எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க அங்கு தெரிவித்தார் என இந்திய ஜனாதிபதி செயலகம் விடுத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.