எடிசனும் புலம்பெயர் தமிழருமே மின்கட்டண உயர்வுக்குக் காரணம்; அரசு இப்படியும் சொல்லும் என்கிறார் ரணில்

ranil-wickremasinghe
“மின்குமிழை உலகுக்கு அறிமுகப்படுத்திய தோமஸ் அல்வா எடிசனும் புலம் பெயர் தமிழர்களுமே மின் கட்டண அதிகரிப்புக்குக் காரணம் என அரசு கூறும் காலம் வெகு தொலைவிலில்லை” என்று எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஐ.தே.கவின் கட்சி அபிவிருத்தி வேலைத்திட்டமொன்றின் போதே இந்தக் கருத்தை அவர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:

தமது ஊழல், மோசடிகளை மூடி மறைப்பதற்காக மின்கட்டணத்தை அதிகரித்த அரசு, தற்போது ஒவ்வொருவர் மீதும் குற்றஞ்சாட்டி தான் தப்பித்துக்கொள்ள முயற்சிக்கிறது.

முன்னாள் மின்சக்தித்துறை அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் தீர்மானத்துக்கமையவே மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டது என்று தற்போதைய மின்சக்தி அமைச்சர் பவித்திரா வன்னியாராய்ச்சி தெரிவிக்கிறார்.

இதேவேளை, அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெலவும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவும் 1993 ஆம் ஆண்டு ஐ.தே.கட்சியால் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தாலேயே மின்கட்டணத்தை அதிகரிக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது எனத் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான நிலையில் இலங்கையில் முதலாவது நீர்மின் நிலையத்தை நிறுவிய கொத்தலாவெல மீதும் குற்றஞ் சாட்டுவதுடன் மின்கட்டண உயர்வுக்கு மின்குமிழை உலகுக்கு அறிமுகம் செய்த தோமஸ் அல்வா எடிசனும் மற்றும் புலம்பெயர் தமிழர்களுமே காரணம் என்று அரசு கூறும் காலம் வெகு தொலைவிலில்லை எனத் தெரிவித்தார் ரணில்.

-uthayan

Tags: ,