எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் அமர்வுகளுக்கு முழுப் பிரதிநிதிகள் குழுவினையும் அனுப்பப் போவதில்லை என கனடா அறிவித்துள்ளது.
மனித உரிமை விவகாரங்களில் மேம்பாடு ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கனடா, இலங்கையிடம் கோரியிருந்தது. எனினும், மனித உரிமை விவகாரங்களில் மேம்பாடு ஏற்படுத்தப்படவில்லை என கனடா சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்விற்கு முழு அளவிலான பிரதிநிதிகள் குழுவினை அனுப்பி வைக்கப் போவதில்லை என கனடா அறிவித்துள்ளது.
இலங்கை மனித உரிமை நிலைமைகள் குறித்து கனடா தொடர்ந்தும் உன்னிப்பாக அவதானிக்கும் என கனேடிய வெளிவிவகார திணைக்களத்தின் எமா வெல்போர்ட் தெரிவித்துள்ளார்.
மனித உரிமை நிலைமைகள் குறித்து திருப்தி அடைய முடியாத நிலையில் முழு அளவில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகள் பங்கேற்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
பாரிய யுத்தக் குற்றச் செயல்கள், குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல், நல்லிணக்கம் ஏற்படுத்தல் மற்றும் மனித உரிமை நிலைமைகள் தொடர்பில் கனடா தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.