இலங்கை அரசு போர்க்குற்றத்தில் ஈடுபட்டது! இனப்படுகொலையை செய்தது என்று சர்வதேச அளவில் பெரும் சர்ச்சைகள் ஏற்பட்டுள்ள நிலையிலும் அவ்வரசு தன்னுடைய நடவடிக்கைகளை நிறுத்துவதாகத் தெரியவில்லை. இன்னொரு விதத்தில் சொன்னால் இன்னமும் விரிவாக்கிக் கொண்டிருக்கிறது.
இன்னமும் துணிச்சலோடு செய்து கொண்டிருக்கிறது. இந்தத் துணிச்சலைப் பார்க்கும் பொழுது சர்வதேச சமூகம் இலங்கை அரசை உண்மையில் மிரட்டுகிறதா? அல்லது அணைக்கிறதா? என்ற கேள்விதான் எழுகின்றது. கடந்த மார்ச் மாதம் வரையில் இலங்கை மிரள்வதைப்போலவும் சர்வதேசம் மிரட்டுவதைப்போலவும் ஒரு சூழல் நிலவிவந்தது.
இலங்கையில் நடக்கக்கூடிய எல்லாச் செயற்பாடுகளையும் நல்லிணக்க வெளிப்பாடு என்ற சொல்லில் மொழிபெயர்க்க இலங்கை அரசால் இயலும். அதை உலகமும் நம்பும். இந்தியா பாராட்டும். இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவைப் பொறுத்த வரையில் இன நல்லிணக்கம் என்பது தமிழ் இனத்தை ஒடுக்கி அழிப்பதாகும். இதையே அவர் தொடர்ந்து செய்து வருகிறார்.
கூட்டமைப்பு மீதான நல்லிணக்கம்
கிளிநொச்சியில் சமாதானம் திரும்பி விட்டது என்றும் மகிந்த ராஜபக்ச என்கிற கடவுள் அமைதியை கொண்டு வந்துவிட்டார் என்றும் இலங்கை அரசிற்குச் சார்பானவரும் சுகந்திரக் கட்சியைச் சேர்ந்தவருமான ஒருவர் கட்டவுட்டுக்களை வைத்திருக்கிறார். இதைப்போல இலங்கை அரசின் ஆட்களாக அங்கு வந்திருக்கக்கூடிய கீதாஞ்சலி போன்றவர்களை ஏதோன் தோட்டத்தை பரிசளித்த கடவுள் என்ற வகையில் கட்டவுட்டுக்களை வைத்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்.
அண்மையில் கூட்டமைப்பு அலுவலகம்மீது சிங்கக் கொடியை ஏந்தி சென்ள குழு ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தக் குழுவினர் கடும் மதுபோதையில் இருந்திருக்கிறார்கள். இவர்கள் கூட்டமைப்பு அலுவலகத்தில் எம்.பிக்களுடன் மக்கள் கலந்துரையாடல் நடத்திக் கொண்டிருந்த பொழுது கற்களை வீசித் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். கிளிநொச்சியில் ராஜபக்ச உருவாக்கியுள்ள நல்லிணக்க வெளிப்பாடு இதுதான். இங்கு கடைமையில் ஈடுபடும் இராணுவமும் காவல்துறையும் இணைந்து பெரும் கஷ்டப்பட்டு உழைத்த நல்லிணக்கம் இதுதான்.
பத்திரிகை சுகந்திர நல்லிணக்கம்
யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் உதயன் பத்திரிகைமீது கடந்த பல ஆண்டுகளாக நல்லிணக்க வெளிப்பாடுகள் காட்டி வரப்படுகின்றன. அப்பதிரிகையின் அலுவலகர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். விபத்தைப்போல வாகனத்தால் அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பத்திரிகை அலுவலகத்திற்குள் நுழைந்து சுட்டுக் கொல்லபட்டிருக்கிறார்கள். பத்திரிகை அலுவலகம்மீது குண்டுத்தாக்குதல், துப்பாக்கிப் பிரயோகம் என்பன மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
அண்மையில் உதயன் பத்திரிகையின் கிளிநொச்சி அலுவலகம் தாக்குளலுக்கு உள்ளாக்கப்பட்டது. கிளிநொச்சியில் கூட்டமைப்பு அலுவலகம்மீதாக தாக்குதலுக்குச் சில நாட்களின் பின்னர் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. அதற்குச் சமீபத்திய நாட்களில் யாழ்ப்பாணப் பத்திரிகைகள் எரியூட்டபட்ட சம்பவமும் இடம்பெற்றது. உதயன் பத்திரிகையின் விநயோகப் பணியினைத் தடுக்கும் பொருட்டே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மீண்டும் யாழ்ப்பாணத்தில் உள்ள உதயன் பத்திரிகையின் அலுவலகம் தாக்குதலுக்கு உள்ளானது. பத்திரிகை அலுவலகத்திற்குள் உள் நுழைந்த ஆயுததாரிகள் அங்கு கடும் சேதங்களை ஏற்படுத்தினார்கள். பேப்பர் ரோல்களை எரித்துள்ளார்கள். முதலில் பத்திரிகை விநயோகம் செய்யப்படக்கூடாது என்ற நோக்கில் தாக்கியவர்கள் பின்னர் பத்திரிகை வெளிவரக்கூடாது என்ற நோக்கத்தில் தாக்குதல் நடத்தியுள்ளதை உணரவும் முடிகின்றது.
மலையகத்தில் நல்லிணக்கம்
வடக்கு கிழக்கில்தான் பிரச்சினை என்று பார்த்தால் தமிழர்கள் வசிக்கும் இடமெல்லாம் பிரச்சினை கொடுப்போம் என்று நிற்கிறார்கள். மனோ கணேசன் உள்ளிட்டவர்கள் கொட்டகலை பத்தனைச் சந்தியில் தொழிற் சங்கக் கூட்டம் நடந்தச் சென்ற பொழுது அவர்கள்மீது கற்கள் வீசித் தாக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் கற்கள் வீசித் தாக்குதல் நடத்தியவர்கள்தான் மலையகத்திலும் கற்கள் வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். கிளிநொச்சியில் மக்களின் தலைகளை நோக்கி வீசப்பட்ட அதே கற்கள்தான் மலையகத்திலும் வீசப்பட்டன.
மலையகத்தில் உள்ள மக்கள் தொடர்ச்சியாக பல்வேறு வாழ்வியல் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகிறார்கள். அவர்களுக்கு உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன. உழைக்கும் மிருககங்களாக நடத்தப்படுகிறார்கள். இந்நிலையில் அவர்களின் வாழ்வு முன்னேற்றம் குறித்து நடக்கும் ஒரு கூட்டத்தின்மீது கல்வீசித் தாக்குதல் நடத்தி நல்லெண்ண வெளிப்பாடுகளை வெளிக் காட்டப்பட்டுள்ளன.
இன நல்லிணக்கம் குறித்து கருத்து வெளியிடுபவர்களில் தமிழ் அரசியல் வாதியான மனோ கணேசனும் முக்கியமானவர்;.
கற்க்களை எறிவது யார்?
இந்தக் கற்களை யார் எறிய வேண்டும்? இதில் சந்தேகப்பட ஏதுமில்லை. இலங்கை அரசே தன்னுடைய இராணுவத்தை வைத்து இராணுவப் புலனாய்வை வைத்து இந்தா வேலைகளை செய்கிறது. பின்னர் தனது காவல்துறையை வைத்து விசாரணை செய்கிறது. இலங்கையில் நடந்த பல்வேறு நடவடிக்கைகளை இலங்கை அரசு நிராகரிக்கிறது.
சில நடவடிக்கைகளை நடக்கவேயில்லை என்கிறது. சில நடவடிக்கைகளை தாம் நடத்தவில்லை என்கிறது. முள்ளிவாய்க்காலில் போர்க்குற்றத்தில் ஈடுபடவில்லை, இலங்கைத் தமிழரை இனப்படுகொலை செய்யவில்லை என்று சொல்லுவதைப்போல கங்களை வீசவில்லை, பத்திரிகை அலுவலகத்தை தாக்கவில்லை என்று சொல்லுகிறது.
யாழ்ப்பாணத்தில் நில அகபரிப்புக்கு எதிராக போராட்டத்தல் ஈடுபட்ட மக்கள்மீது கழிவு ஒயிலை ஊற்றி தாக்குதல் நடப்பட்டது. வாகனங்களை தாக்கியுள்ளார்கள். இலங்கையில் ஜனநாயகச் செயற்பாடுகளுக்கு தொடர்ந்து தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு அச்சுறுத்தப்படுகின்றது.
இதுவரையில் வடக்கு கிழக்குத் தமிழர்கள்மீது வீசப்பட்ட கற்கள் இப்பொழுது மலையக மக்கள்மீதும் வீசப்படுகின்றன. இந்த நாட்டில் வாழும் தமிழர்களுக்கு எப்படியான நல்லிணக்கம் வழங்கப்படுகிறது என்பதையும் அவர்கள் தொடர்ந்து நல்லிணக்கத்தின் பெயரால் எப்படி அடக்கி ஒடுக்கப்படுகிறார்கள் என்பதை இலங்கை அரசு இக்காலத்தில் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பகிரங்கமாக்குகின்றன.
-தேவராஜன், Globaltamilnews





