அதிகாரப் பரவலை எதிர்பார்ப்பது அர்த்தமற்றதாக மாறும் நிலை….

tamil_refugees_vavunia
வடமாகாண சபைத் தேர்தலை நடத்துவதில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போல் இல்லை, இல்லை உத்தேசிக்கப்பட்டுள்ளது போன்று எதிர்வரும் செப்ரெம்பர் மாதத்தில் நடத்த அரசு உள்ளார்ந்த ரீதியாக செயற்படுகிறதா என்பது என்னவோ சந்தேகமான ஒன்றாகவே நோக்கப்படுகிறது.
தான் வகுத்துள்ள தமிழ் மக்கள் விரோதச் செயற்பாடுகளை முற்றுமுழுதாகச் செயற்படுத்தவே அரச ஆதரவான தரப்புகள் விரும்புவதாகவே அதன் நடவடிக்கைகள், செயற்பாடுகள் வெளிப்படுத்தப்படுகின்றன.

போர் முடிவடைந்து நான்கு வருடங்கள் பூர்த்தியாகப்போகின்றன. வடபகுதி மக்களுக்கு இன்னும் ஜனநாயக உரிமைகள் வழங்கப்படவில்லை. அரசின் அடக்குமுறைக்குள்ளேயே அவர்கள் வாழ்கின்றனர். இங்கு சுயாதீனமான சிவில் நிர்வாகம் இல்லை. அனைத்தும் இராணுவமயமாகவே உள்ளன.

இனப்பிரச்சினைக்குத் தற்போதைய மாகாணசபை முறைமை தமிழ் மக்களால் தீர்வாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதே உண்மை. ஆயினும் வடபகுதி மக்களின் உடனடிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், படைத்தரப்பினரதும் ஆளுநரினதும் எதேச்சாதிகார நடவடிக்கைகளைத் தட்டிக்கேட்கவும் மாகாணசபை இயங்கவேண்டியது அவசியம் என்று மக்கள் உணர்கின்றனர்.

காணி சுவீகரிப்பு, சிங்களக் குடியேற்றம் போன்ற தனது நிகழ்ச்சிநிரல் பூர்த்தியாகும்வரை, தேர்தலை நடத்தாது இழுத்தடிக்கவே அரசினால் திட்டமிடப்பட்டது. அனைத்துலக அழுத்தம் மற்றும் ஜெனிவாத் தீர்மானம் காரணமாக எதிர்வரும் செப்ரெம்பரில் தேர்தலை நடத்தப்போவதாக அரசு அறிவித்துள்ள போதிலும் தேர்தலுக்கான திகதி இன்னும் வெளியிடப்படவில்லை.

ஆனால் போரின் பின்னரான அரசின் நிகழ்ச்சி நிரலை முடுக்கிவிடுவதற்கான அறிகுறிகள் மிக வெளிச்சமாகத் தெரிகின்றன. வலி வடக்கில் படைகளுக்குக் காணி சுவீகரிக்கும் நடவடிக்கையும் அவற்றில் ஒன்று.

வடமாகாணசபை இயங்க முன்னர் அங்குள்ள 24 கிராமசேவையாளர் பிரிவுகளும் முழுமையாகப் பறிபோகும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஏற்கனவே இப்பத்தியில் குறிப்பிட்டிருந்தோம்.

வடமாகாணசபைத் தேர்தல் என்பது உண்மையில் அரசுக்கு கசப்பானதாகவே இன்னும் இருந்து வருகின்றது. தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற்றால் தனது திட்டம் பிசுபிசுத்துவிடும் என்று அரசு கருதுகிறது.

ஆகவே, வடமாகாணத் தேர்தலுக்கு முன் மாகாணசபை முறைமைக்கு வித்திட்ட அரசமைப்புக்கான 13 ஆவது திருத் தத்துக்கு ஆப்பு வைக்கும் முயற்சியில் சிங்களத் தீவிரவாத அமைப்புகள், முனைப்பாகச் செயற்பட்டு வருகின்றன.

அரசின் பங்காளிகளான ஜாதிக ஹெல உறுமய, தேசிய சுதந்திர முன்னணி மற்றும் கடும்போக்கு சிங்கள அமைப்புகள், சிங்களப் பேராசிரியர்கள், புத்திஜீவிகளின் உதவியுடன் அரசிடம் மகஜர் கையளிக்கவும் வடமாகாணசபைத் தேர்தல் தொடர்பாக மேதினக் கூட்டத்தில் விசேட அறிவிப்பு ஒன்றை விடுக்கவும் தீவிரம் காட்டப்பட்டு வருகிறது.

மொத்தத்தில் அரசமைப்புக்கான 13 ஆவது திருத்தத்துக்கு எதிரான, மாகாணசபைகள் முறைமைக்கு எதிரான, சக்திகள் இப்போது அதிதீவிரம் காட்ட ஆரம்பித்துவிட்டன.

அரசமைப்புக்கான 13 ஆவது திருத்தம் ஒழிக்கப்படவேண்டும் என்று முதலில் குரல் கொடுத்து, 13 குறித்த சர்ச்சையை மிகப் பகிரங்கமாக ஆரம்பித்து வைத்தவர் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ என்பது எல்லோருக்கும் தெரிந்ததே.

ஆகவே சிங்களப் பேரினவாத அமைப்புகளின் இது தொடர்பான கோரிக்கை குறித்து தாமதம் காட்ட முடியாத அளவுக்கு அவற்றின் பின்னால் பலம்வாய்ந்த சக்தி ஒன்று இயங்குகிறது என்பதனை மனதில் கொள்ளாது இருக்க இயலாது.

எவ்வாறாயினும் அலரிமாளிகையில் நடைபெற்ற பத்திரிகை ஆசிரியர்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி கருத்துத் தெரிவிக்கையில், செப்ரெம்பரில் வடமாகாணசபைத் தேர்தல் நடைபெறும் என்று மீண்டும் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

கூட்டிக் கழித்து, பிரித்துப் பெருக்கிப் பார்த்தால் அடுத்து வரும் ஐந்து மாதங்களும் மிகவும் முக்கிய காலப்பகுதியாக இருக்கும் என்று கொள்ளலாம். அரசமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை ஒழித்து மாகாணசபை முறைமையை முடிவுக்கு கொண்டுவர சிங்கள தேசியவாத அமைப்புகள் பெரும் போராட்டங்களை முன்னெடுக்கும் என்று நிச்சயம் நம்பலாம்.

அதேவேளை போருக்குப் பின்னரான தனது நிகழ்ச்சிநிரலை அரசு முடக்கிவிடும். வாழ்வெழுச்சி (திவிநெகும) சட்டம் ஊடாக பல அதிகாரங்கள் பறிக்கப்பட்டு அதிகாரமில்லாத ஒரு மாகாணசபையைக் கூட தமிழர் தரப்பிடம் வழங்கத் தயாரில்லை என்பது மேலோங்கி வளர்கிறது.

தமிழர்கள் அதிகாரப் பகிர்வை எதிர்பார்ப்பது அர்த்தமற்றது. என்பது யதார்த்தத்தை நோக்கி விரைந்து வேகவேகமாகத் தடம் பதிக்கிறது.

-uthayan

Tags: ,