இலங்கையில் போர் முடிந்ததைப் பயன்படுத்தி, இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காணவேண்டும் என்று இலங்கை எதிர்கட்சித்தலைவர் ரணில் விக்கிரம சிங்கவிடம், குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தி உள்ளார்.
இலங்கையின் முன்னாள் பிரதமரும், எதிர்கட்சித் தலைவருமான ரணில் விக்ரம சிங்க இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெல்லி வந்துள்ளார். அவர் நேற்று குடியரசுத் தலைவர் மாளிகையில், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்தார். அப்போது அவரிடம் இலங்கை பிரச்சனை குறித்த தனது கருத்துக்களை பிரணாப் முகர்ஜி வலியுறுத்தி உள்ளதாகத் தெரிகிறது.
அதில் “இந்தியா இலங்கை இடையேயான இரு தரப்பு உறவு, வரலாற்று ரீதியான , கலாச்சார ரீதியான, இன ரீதியான உறவின் அடிப்படையில் அமைந்தது. இந்த உறவு எப்போதும் நெருக்கமாகவும், சுமுகமாகவும் இருந்து வருகிறது.
ஆயிரக்கணக்கான ஆண்டுகால உறவுகளை அண்டை நாடு என்பதால் இலங்கையின் மீது இந்தியாவுக்கு அதிக அக்கறை உள்ளது. அங்கு நடக்கும் நிகழ்வுகளை இந்திய மக்கள் கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது. இலங்கையில் போர் முடிந்து விட்டதை இனபிரச்சனைக்கு அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ள கூடிய நீண்ட கால அரசியல் தீர்வு காண்பதற்கான நல்ல வாய்ப்பாக இந்தியா கருதுகிறது.
தேசிய அளவில் உண்மையான இணக்கம் ஏற்படுவதற்கு இந்த வாய்ப்பை இலங்கை பயன்படுத்திக் கொண்டு செயல்பட வேண்டும்.” என்று பிரணாப் முகர்ஜி வலியுறுத்தி உள்ளார். இதை குடியரசுத் தலைவர் மாளிகை செய்திக் குறிப்பும் உறுதிப்படுத்தி உள்ளது என்று தெரிய வருகிறது.