முள்ளிவாய்க்கால் என்பது முடிவல்ல. அது ஒரு திருப்பம். மாணவர்களின் உணர்ச்சி மிகு போராட்டம், போர் இன்னும் முடிந்துவிடவில்லை என்பதைத் தெளிவாக உணர்த்துகின்றது இவ்வாறு தெரிவித்துள்ளார் கவிஞர் காசி ஆனந்தன்.
திருப்பூரில் நடைபெற்ற “தமிழீழமும் மாணவர் கடமையும்’ என்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே காசி ஆனந்தன் இவ்வாறு தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
“மாணவர்கள் மிகக் கூர்மையுடன் இந்தப் பிரச்சினையைக் கவனித்து வருகின்றனர். மிகத் தெளிவாகப் போராடி வருகின்றனர். முள்ளிவாய்க்கால் என்பது முடிவல்ல, அது ஒரு திருப்பம். ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று வீசும் நெருப்பின் வீச்சு, போர் இன்னும் முடிந்து விடவில்லை என்பதைத் தெளிவாக உணர்த்துகிறது.
“இனப்படுகொலை’ என்றார் இந்திராகாந்தி
இந்திய விடுதலைப் போரைவிட, தமிழீழ விடுதலைப் போரின் பாதிப்பு மிக அதிகம். இந்திய விடுதலைப் போராட்டத்தின் போது 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழக்கவில்லை.
ஆனால் சின்னஞ்சிறு தமிழீழத்தில் மூன்று லட்சம் பேர் கொல்லப்பட்டனர். இந்திராகாந்தி பிரதமராக இருந்த போது, ‘இலங்கையில் நடப்பது இனப்படுகொலை’ என்றார். இப்போது நிலைமை மோசமடைந்திருக்கும் நிலையில், இனப்படுகொலை எனக் கூறாமல், “போர்க் குற்றம் நடந்திருக்கிறது’ என்று மட்டுமே சொல்வது எவ்வளவு பெரிய அநீதி?
தமிழீழத்தில் கடும் வறுமை நிலவியபோது, இந்தியா போர் விமானம் மூலம் உணவுப் பொதிகளை வீசியது. கொஞ்ச காலத்தில் அதேபோர் விமானங்கள் எங்கள் தலையில் குண்டுகளை வீசின.
அதேபோல முதலில் பிஸ்கட் கொடுத்து, பின் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளான் பாலச்சந்திரன். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் சில நேரங்களில் எங்களுக்கு வித்தியாசம் தெரியவில்லை” என்று தெரிவித்தார் அவர்.
-uthayan