திருமண அழைப்பிதழ் – சிறுகதை

wedding2வாசலில் பைக் நிறுத்தும் சத்தம் கேட்டது. ஐன்னல் வழியே எட்டிப் பார்த்தாள் கௌரி. அவளுடைய கணவன் ராமு தான்.
“பசங்களா.. ஓடுங்க.. ஓடுங்க.. அங்கிள் வந்தாச்சு..!” ஹாலில் விளையாடிக் கொண்டிருந்த அக்கம் பக்கத்து வீட்டு பிள்ளைகளை விரட்டிக் கொண்டிருந்தாள் கௌரி.
ராமு உள்ளே நுழைந்து கொண்டிருந்தான்.

“ஹாய் அங்கிள்..!” என்றது ஒரு வாண்டு. “பை அங்கிள்,” என்றது இன்னொன்று.
இது இன்று நேற்று நடப்பதல்ல. இந்த வீட்டுக்கு குடிவந்த இரண்டாண்டுகளாக நடந்து கொண்டிருக்கும் வழக்கம்.
கௌரிக்கு சுமாரன படிப்புதான். குடும்பத்தைக் கவனிப்பது தான் பிரதான வேலை. அதோடு அக்கம் பக்க வீடு மட்டுமல்லாமல் அக்கம் பக்க தெரு என அனைத்து கண்ணில் படுகின்ற யாருடனும் சகஜமாக பழகிவிடுவாள். ஆனால் ராமு வருவதும் தெரியாது போவதும் தெரியாது. அவ்வளவு அமைதி. கௌரி அப்படியே ராமுவுக்கு நேர் எதிர்.

இந்த இரண்டு மூன்று தெருக்களில் யார் வீட்டில் என்ன விசேஷம் நிகழ்ந்தாலும் இவளும் ஓர் உறுப்பினராய் ஆஜராகிவிடுவாள். அந்த வீட்டு நண்பர்களுக்கு ஒத்தாசையாக உதவிகளைச் செய்து கொடுப்பாள். அதனாலேயே கௌரியின் குடும்பத்தைப் பற்றி அனைவருக்கும் மரியாதை ஏற்பட்டிருந்ததது. நல்ல உதவி செய்யும் மனப்பான்மை. அதை தடுக்காத கணவன்.. இப்படி நிறைய ப்ளஸ் பாயிண்டுகள் கௌரியிடம் இருந்தன.

வீட்டிக்கு வந்த ராமு கால் கை கழுவி பிரஷ்ஷாகி டிவி ரிமோட்டை கையில் எடுத்துக் கொண்டு சோபாவில் சாய்ந்தான்.
காபியை ஆற்றிக் கொண்டே ராமுவின் பக்கத்தில் அமர்ந்தாள் கௌரி.
“என்ன ரொம்ப டயர்டா இருக்கீங்க.. வேலை ரொம்ப டைட்டா..?”
“ஆமாம்பா. வேலைன்னா அப்படி இப்படி இருக்கத்தானே செய்யும்.”
“அது இல்லீங்க.. உடம்பு நல்லா இருந்தாத் தானே உழைக்க முடியும். அதான் கேட்டேன்.”
“அதெல்லாம் ஒண்ணுமில்லை கௌரி.. நான் நல்லாத் தான் இருக்கேன்.”
“ஏங்க.. உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்ல மறந்துட்டேனே.. நம்ம புதுத்தெரு உமாபதி இருக்கார்ல அவர் பொண்ணு ஹேமாவுக்கு

நாளை மறுநாள் கல்யாணம். ஒவ்வொரு வீடா பத்திரிக்கை கொடுத்துகிட்டு வர்றாங்க. இன்னும் நம்ம வீட்டுக்கு வரல. நாளை மதியத்துக்குள்ள வருவாங்கன்னு எதிர்பார்க்கிறேன். அவங்களுக்கும் கல்யாண வேலை அது இதுன்னு இருக்கும்ல.. நேத்து கூட அவங்க குல தெய்வம் கோவிலுக்கும் போய்ட்டு வந்தாங்களாம்.. பக்கத்து வீட்டு ராணி அக்கா சொன்னாங்க..”
பேசிக்கொண்டே போனாள்.

ராமு அவளை வெறித்துப் பார்த்துக் கொண்டே இருந்தான்.
“அந்த கல்யாணத்துக்கு நான் எந்தப் புடவையை கட்டுறது..?” பீரோவைத் திறந்து வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்த புடவைகளைக் காட்டினாள்.
“ஏய்.. இன்னும் பத்திரிகையே வரலை. அதுக்குள்ள என்ன அவசரம்?”
“அது இல்லீங்க.. இன்னும் ரெண்டு நாள் தான் இருக்கு. சீக்கிரம் சொல்லுங்க நான் எந்தப் புடவையைக் கட்ட?” விடாப்பிடியாக நச்சரித்தாள்.
*
மறுநாள் மத்தியான நேரம்…
அலுவலகத்தில் ராமு தன் டிபன் பாக்ஸை திறந்து கொண்டிருந்தான். மொபைல் ஒலித்தது.
“சொல்லுடா.. என்ன இந்நேரத்தில?”
“ஒண்ணுமில்லீங்க.. மணி ரெண்டு ஆவுது. இது வரைக்கும் அவங்க வீட்லேர்ந்து பத்திரிகை எதுவும் கொண்டு வரல. மனசு ஒரு மாதிரியா இருக்கு. அதான் போன் பண்ணினேன்.”
“வராத பத்திரிகைக்கு ஏண்டீ இப்படி அலட்டிக்கிறே..?”
“ராணி அக்கா வீட்டுக்கெல்லாம் நேத்தைக்கே பத்திரிகை வெச்சிட்டு போய்ட்டாங்களாம். அந்த நேரம் பார்த்து, நான் கடைக்குப் போயிருந்தேன் போல.. அந்தப் பொண்ணை வேற எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவ்ளோ அழகு. அமைதியான குணம். அதாங்க மனசு ஏதோ பண்ணுது.”

“சரி.. சரி.. அதை சாயங்காலம் நான் வீட்டுக்கு வந்த பிறகு பேசிக்கலாம்.. போனை வெச்சிட்டு ஹாயா தூங்கு.”
இணைப்பை துண்டித்தவனுக்கு மனசு ஒரு மாதிரியாகத்தான் இருந்தது. நெற்றியைத் தேய்த்துக் கொண்டான்.
கௌரிக்கு தூங்க முடியவில்லை.
‘நேராகவே போய் கேட்டுவிடலாமா? என்னை ஏன் மறந்துட்டீங்க.. சே.. நல்லாயிருக்காது. எப்படியும் சாயங்காலத்துக்குள்ளே வந்து கொடுப்பாங்க.’ மனசுக்குள் பேசிக்கொண்டாள்.
*
காலிங் பெல் அலறியது..
அவசர அவசரமாக ஓடிப் போய் கதவைத் திறந்தாள். பக்கத்து வீட்டு ராணி அக்கா. கையில் ஒரு நாலைந்து புடவையோடு நின்று கொண்டிருந்தாள்.
“கௌரி.. இதுல எந்தப் புடவையை கல்யாணத்துக்கு கட்டிக்கலாம். நீயே செலக்ட் பண்ணேன்.” உரிமையோடு கேட்டாள்.
கௌரிக்கு அழுகையே வந்திடுவது போல் இருந்தது. வேண்டா வெறுப்பாக ஒன்றை எடுத்து நீட்டினாள்.
*
மாலை 6 மணி..
ராமு வீட்டுக்கு வந்து சேர்ந்தான். கௌரி சோர்வாக இருந்தாள்.
“என்ன கண்ணா.. இங்க உற்சாகமாய் கௌரின்னு ஒரு பொண்ணு சுத்திகிட்டு இருப்பாளே.. அதைப் பார்த்தியா..?” கௌரியின் கன்னம் தொட்டு வருடினான். அவன் கையைத் தட்டிவிட்டாள்.
‘ஒரு சின்ன விஷயம், துறு துறுன்னு இருந்த என்னை இப்படி தடுமாற வெச்சிடுச்சே.’ வெறுமையாக மனதில் உணர்ந்தாள்.
பட்டுப்புடவை சரசரக்க கையில் தேங்காய் பழத் தட்டுகளோடு தெருவில் சீர்வரிசை கொண்டு போனார்கள் பெண்கள். கோயிலை நோக்கி அந்த ஜனம் நகர்ந்து கொண்டிருந்தது. அவர்கள் போய் சேர்ந்ததும் மாப்பிள்ளை அழைப்பு தொடங்கிவிடும்.
பக்கத்து வீட்டு ராணி அக்கா ஓடிவந்தாள்.
“கௌரி நீ இன்னும் கிளம்பலயா..? நாங்கல்லாம் ரெடியாகிட்டோம். வா கோவிலுக்குப் போய்ட்டு மாப்பிளை அழைப்புக்கு நேரமாயிட்டு இருக்கு.” மகிழ்ச்சியோடு வார்த்தைகள் வந்து விழுந்தன.
அவளிடம் தங்களுக்கு திருமண அழைப்பு இல்லை என்பதை சொல்வதற்கு கௌரிக்கு கொஞ்சம் அவமானமாகவே இருந்தது.
“அக்கா.. எங்க வீட்டுக்காரங்க இப்பத்தான் ஆபீஸ்லேர்ந்து வந்தார். கொஞ்ச நேரத்தில நாங்க வந்திடறோம். நீங்க கிளம்புங்க.” நாகரிகமாய் நழுவினாள் கௌரி.

ராணி வாசலை விட்டு இறங்கியதும், கௌரியின் கைகள் கதவை சாத்தின.
அவள் கண்கள் நிறைய கண்ணீர் திரண்டிருந்தது. அவளால் ஜீரணிக்க முடியவில்லை.
எப்படியெல்லாம் உரிமையோடு பேசுவார் அந்த உமாபதி. அந்த மனுஷன் குடிச்சா கூட ‘நீ என் பொண்ணு மாதிரிதான்ம்மா.. நீ என் பொண்ணு மாதிரி,’ன்னு புலம்புவாரே… வெயிலில் வெளியில் எங்காவது பார்த்து விட்டால், ‘என்ன பொண்ணுமா நீ.. இந்த கொளுத்துற வெயிலில் வெளியில சுத்திகிட்டு இருக்கே. உடம்பு என்னத்துக்கு ஆகுறது.’ – அப்படியே என் அப்பாவின் சாயலில் அல்லவா கேட்பார்.
மனசு அலை பாய்ந்து கொண்டிருந்தது கௌரிக்கு.
பாத்ரூமில் இருந்து வெளியே வந்த ராமு, “என்ன கண்ணா.. நீ வேணா கல்யாணத்துக்குப் போய்ட்டு வாயேன். அவங்க நிச்சயம் மறந்து தான் போயிருப்பாங்க. நீ போனா கண்டிப்பா உன்னை வரவேற்ப்பாங்க. போய்ட்டு வாயேன்..”
“நீங்க வரலையா..?”
“பத்திரிகை இல்லாம எப்படின்னுதான் யோசிக்கிறேன்.”
“என் புருஷனைவிட எனக்கு எதுவும் முக்கியமில்லை.”

அப்படியே அவனின் தோளைத் தழுவியிருந்தாள் கௌரி. ராமுவின் மார்பில் மணிகளாய் உருண்டு கொண்டு இருந்தது அவள் கண்ணீர்.
“கண்ணா.. நாம ஒண்ணு பண்ணுவோம். இன்னிக்கு நீ போய் உட்கார்ந்து டீவி பாரு. நான் சாப்பாடு ரெடி பண்ணுறேன். என் சமையல் எப்படி இருக்கும் தெரியுமா..? இத்தனை நாள் இதை மிஸ் பண்ணிட்டோமே-ன்னு நீ ஃபீல் பண்ணுவே.. பாரு.”
கண்களைத் துடைத்துக் கொண்டாள் கௌரி.
பரபரவென அடுக்களையில் வேலை தொடங்கியது. சுடச் சுட சாப்பாடு தயார். டைனிங் ஹாலில் பரிமாறினான் ராமு.
கோயிலில் இருந்து மாப்பிள்ளை அழைப்பு தொடங்கி விட்டிருந்தது. தூரத்தில் நாகஸ்வரமும் தவிலும் ஒலித்தன. ராமு, டிவியின் ஒலியைக் கூட்டினான். ஜன்னலை சாத்திவிட்டு ஏசியை ஆன் செய்தான். “ஏசி வெளியில் போகும்.. அதான் கதவை சாத்தினேன்..” காரணம் சொன்னான்.

கௌரியின் முகத்தில் வறட்டுப் புன்னகை.

மேள தாள ஒலி கூடியது. டிவி நிகழ்ச்சி பற்றி கௌரியிடம் பேசி அவளை திசை திருப்பினான் ராமு. அதற்குள் மேள தாள ஒலி தேய்ந்து கொண்டே போனது. ஊர்வலம் வீட்டை கடந்து விட்டது. இருவரும் சாப்பிட்டு முடித்திருந்தார்கள்.
பாத்திரங்களை ஒழுங்குபடுத்திவிட்டு படுக்கைக்குத் திரும்பினான் ராமு.
கட்டிலில் சாய்ந்திருந்தாள் கௌரி. அவளை அணைத்து தூங்கத் தொடங்கினான் ராமு. கௌரி தூங்கிவிட்டாள்.
அவன் கண்களில் இருந்து கசிந்தது கண்ணீர்… கௌரிக்குத் தெரியாது, மணப்பெண் ஹேமா, ராமுவின் முன்னாள் காதலி என்பது.

நன்றி – விகடன்

Tags: , ,