உதயன் மீதான தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம்; விசாரணை வேண்டும் எனவும் வலியுறுத்து

uthayanஉதயன் அலுவலகம் தாக்கப்பட்டமை தொடர்பில் நம்பகமான விசாரணை நடத்த வேண்டும் என அமெரிக்கா இலங்கையிடம் வலியுறுத்தியுள்ளது.

யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் அமைந்துள்ள உதயன் பத்திரிகையின் பிரதான அலுவலகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்துள்ள அமெரிக்கா, இந்தச் சம்பவம் தொடர்பாக நம்பகமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரக பொதுசன விவகார தலைமை அதிகாரி கிறிஸ்தோபர் ரீல்ஸ் டுவிட்டரில் வெளியிட்டுள்ள கண்டனத்திலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் உதயன் மீது தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வரும் தாக்குதல்கள் குறித்து அமெரிக்கா கவலையடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ஊடக சுதந்திரத்தை பாதுகாக்குமாறு இலங்கை அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டுள்ள அவர், இந்தத் தாக்குதல்கள் தொடர்பாக நம்பகமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

நேற்றைய தினம் இனந்தெரியாத ஆயுத தாரிகள் புகுந்து ஆயுத முனையில் பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை அச்சுறுத்திவிட்டு அச்சு இயந்திரங்ளை எரியூட்டிச் சென்றுள்ளனர் இந்த நிலையிலேயே அமெரிக்கா தனது கண்டனத்தை விடுத்துள்ளது.

Tags: , ,