பொம்மிம்மா!

pommiammaஎன் அம்மா கறந்து கொடுக்கும் பாலைச் சொம்பில் ஊற்றிக்கொண்டு வந்து, தினமும் உன் வீட்டு வாசல் முன் அதிகாலையில் நிற்பேன். அதை வாங்குவதற்கு உன் வீட்டில் எத்தனையோ வேலைக்காரிகள் இருந்தாலும் நீதான் வருவாய்!

குளித்து முடித்த நீ நடந்து வந்து பால் சொம்பை வாங்கும் கணங்கள்தான் எனக்குத் தேவகணங்கள். என் ஒவ்வொரு நாளும் விடிவது அப்போதுதான்!

பாத்திரத்தில் பாலை ஊற்றிவிட்டு, சொம்பைத் திருப்பித் தருவாய். அந்தச் சொம்பிலிருக்கும் மிச்சத் துளிகள்தான் எனக்கு தேவாமிர்தம். யாருமில்லாத இடம் பார்த்து… தலையை உயர்த்தி, சொம்பைக் கவிழ்த்தால் என் நாக்கில் சொட்டும் அந்த அமிர்தத் துளிகள்!

என் கல்லூரி விடுமுறை நாட்களில், அப்பாவுக்குத் துணையாக நான் கல்யாணப் பந்தல் போடப் போகிறபோதெல்லாம்… என்றாவது ஒரு நாள் உனக்கும் திருமணம் நடக்கும்… அந்தத் திருமணத்தில் இப்படிப் பந்தல் போடுவதுதான் என் பங்காக இருக்கும் என்று நினைப்பேன். ஆனால்… ஆனால்… என் உள் மனதின் ஆழத்தில் அந்த மணப்பந்தலில் மாப்பிள்ளையாக அமரப் போவதே நீதானடா! என்று எப்போதும் ஒரு பட்சி சொல்லும்.

என் படிப்பு முடிந்ததும் ஒரு நாள் என்னை அழைத்தார் உன் தந்தை. தம்பி… நம்ம மில்லைப் பாத்துக்கிறீங்களா? என்றார்.

சரிங்க! என்று வேலையை ஆரம்பித்தேன்.

அடுத்து வந்த பொங்கல் திருநாளில்… உங்கள் வீட்டுக்கு வந்த என்னை உள்ள போய்ச் சாப்பிட்டு வாங்க தம்பி என்றவர், திரும்பி உன்னை அழைத்து தம்பிக்கு சாப்பாடு போடும்மா என்றார். ஆடிப்போய்விட்டேன் நான்.

பொங்கல் வைத்து அம்மனுக்குப் படையல் போடுவதைத்தான் இதுவரை பார்த்திருக்கிறேன். ஆனால், நீ பரிமாற வந்தது, அம்மனே எனக்குப் படையல் போடுவதைப் போல இருந்தது. நம்ப முடியாமல் சாப்பிட்டுவிட்டு எழுந்து வந்தேன்.

வேற என்ன வேணும் தம்பி? என்றார் உன் தந்தை.

ஒண்ணும் வேணாங்க… பொம்மிம்மா கையால சாப்பிட்டதே போதுங்க எனக்கு என்றேன்.

சிரித்தபடி என்னைப் பார்த்த உன் தந்தை, அந்த தேவ வார்த்தைகளை உதிர்த்தார்… பொம்மியை உங்களுக்குக் கல்யாணம் பண்ணி வைச்சா கண் கலங்காமப் பாத்துப்பீங்களா..?

கண்கள் கலங்கின எனக்கு. உள்ளுக்குள் இருக்கும் பட்சியோ சொன்னேன்ல என்று கூவிக் குதிக்க ஆரம்பித்தது.

திருமணம் முடிந்த அடுத்த நாள் அதிகாலை சட்டென்று விழிப்பு வந்து, வேகவேகமாக முகம் கழுவிக்கொண்டு நான் கிளம்புகையில், பால் எடுத்துட்டு வரவா கௌம்பிட்டீங்க என்றாய் ஒரு மர்மப் புன்னகையோடு.

ஆமாம்  என்றேன்.

அதெல்லாம் உங்க அம்மா எடுத்து வந்து கொடுத்துட்டாங்க என்றாய்.

அடடா! என்றேன்.

ஏன் ரொம்பக் கவலைப் படறீங்க… அந்த மூணு சொட்டுப் பால் போயிடுச்சின்னா என்றாய் சிரித்தபடியே.

தெரியுமா? என்றேன் வியப்பாக.

எப்பவோ! என்று புன்னகைத்துவிட்டு, மனசுக்குள்ள இவ்வளவு ஆசையை வெச்சிக்கிட்டு… ?பொம்மிம்மா கையால சாப்பிட்டதே போதும்?னு வசனம் பேசுனீங்க என்று கிள்ளினாய். ஆஹா… ராணி வம்சக் கிள்ளல் அது.

மூணு சொட்டு இனிமே மறந்துடுங்க. சொம்பு நிறைய பால் காய்ச்சித் தர்றேன். மூச்சு முட்டக் குடிங்க! என்று என் கன்னத்தில் தட்டிவிட்டு நகர்ந்தாய்.

அனுபவிடா! என்று கூப்பாடு போட்டது என் பட்சி.

பொம்மைக் கடைப் பக்கம் போகாதே
என்றால் கேட்கிறாயா
பார்…

குழந்தை ஒன்று தன் தாயிடம்
உன்னைக் காட்டி
இந்த பொம்மையை வாங்கிக்கொடு
என்று அடம்பிடிப்பதை

இன்று
காதல் ஜெயந்தி
முழிக்காதே….
இன்று உன் பிறந்தநாள்.

தபூ சங்கர்-

Tags: ,