உலகத்தைத் துகிலுரிக்கும் இணையம்: விக்கிலீக்ஸ் மர்மங்கள் – 9

Whistleblowing website Wikileaks founder Julian Assange leaves a news conference on the internet release of secret documents about the Iraq War in Londonவிக்கிலீக்ஸ் வரலாற்றில் collateral murder காணொளி வெளியீடு ஒரு மிகப்பெரும் மைல்கல்லாக அமைந்தது. அதுவரை வெறும் உலக அரசியல் விமர்சகர்களாலும், சக பத்திர்க்கையாளர்களாலும் மட்டுமே கவனிக்கப்பட்டு வந்த ஜூலியன், இப்போது மனித உரிமை, உலக அமைதி போன்ற விஷயங்களுக்காகச் செயல்பட்டு வரும் குழுமங்களாலும் ஆர்வத்துடன் கவனிக்கப்பட்டார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் பல நாடுகளுக்கு புதிய ஊடக ஒழுங்குமுறை சட்டத்திருத்தங்களுக்கான கருத்தரங்குகளுக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்படும் அளவுக்கு ஜூலியன் விஸ்வரூபமெடுத்திருந்தார்.

மழைக்காலத்தில் நம்மூர் தெருக்களில் ஆடைகளில் மழைநீர் பட்டுவிடாமல் கவனமாக நடப்பது போல், ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் பார்த்துப் பார்த்துச் செய்த ஜூலியனுக்கு, விக்கிலீக்ஸ் தளத்திற்குத் தகவல்களைக் கொடுப்பவர்கள் குறித்து எந்த விவரங்களும் வெளிவராமல் பார்த்துக் கொள்வதே விக்கிலீக்ஸ் தளத்திற்கான பலம் என்பது புரிந்தே இருந்தது. இதன் காரணமாக பலரும் ஜூலியன் தானே ஹேக் செய்து வெளியிட்டு விட்டு, விக்கிலீக்ஸ் மூலம் தன் கல்யாணத்திற்குத் தானே மேளம் அடித்துக் கொள்கிறார் என்று விமர்சிக்கப்பட்டாலும் அதுகுறித்து கவலை கொள்வதற்கெல்லாம் ஜூலியனுக்கு நேரமில்லை. ஆனால் இதையெல்லாம் தகர்ப்பதைப் போல ஒரு நாள் நள்ளிரவில் collateral murder காணொளிக் காட்சி உட்பட பல இராணுவ ஆவணங்களை விக்கிலீக்ஸ் தளத்திற்கு அனுப்பி வைத்ததாக பிராட்லி என்னும் 22 வயது அமெரிக்க இராணுவ வீரர் ஈராக் இராணுவ முகாமில் கைது செய்யப்பட்டு, குவைத்தில் வைத்து விசாரித்து வருவதாக அமெரிக்க இராணுவம் அறிவித்து விக்கிலீக்ஸ் செயல்பாடுகளை அவதானித்து வருபவர்களை திகைப்பில் ஆழ்த்தியது.

ஜூலியனைத் தவிர அனைவரும் விக்கிலீக்ஸ் தளத்தின் தொழில்நுட்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்துச் சிறிதே கவலை கொண்டிருந்த வேலையில், பிராட்லி தானே முன்வந்து இணைய அரட்டையில் குறுகிய காலத்திற்கே அறிந்திருந்த ஒரு பத்திரிக்கையாளர் மற்றும் ஹேக்கிங் நிபுணருமான அட்ரியன் என்பவரிடம் விக்கிலீக்ஸ் தளத்திற்கு தான் அனுப்பிய விவரங்கள் குறித்து சிலாகித்துச் சிலிர்த்து வைக்க, அட்ரியன் அதை அப்படியே அமெரிக்க அரசாங்கத்திடம் புட்டு வைக்க, பிராட்லி கைது செய்யப்பட்டார். இன்றளவும் அமெரிக்க இராணுவ நீதிமன்றத்தின் விசாரணையில் இருக்கும் பிராட்லி மீதுள்ள குற்றச்சாடுகளுக்கு ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கும் மேலான சிறைத்தண்டனைக் கிடைக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. அமெரிக்காவின் சிறந்த வழக்கறிஞர்கள் இருவரை பிராட்லிக்காக வாதிட விக்கிலீக்ஸ் சார்பில் நியமித்தாலும், அமெரிக்கா அரசாங்கம் அனுமதி மறுத்துவிட்டது. இதுநாள் வரை விக்கிலீக்ஸ் தளத்தின் சார்பாக, பிராட்லி தான் தங்களுக்கு ஆவணங்களை அனுப்பி வைத்தாக எங்கும் சொல்லப்படவில்லை என்பதையும், விக்கிலீக்ஸ் தளத்தின் மீதோ அல்லது ஜூலியன் மீதோ பெரிதாக எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்க வில்லை என்பதையும் கவனத்தில் கொள்ளவும். பிராட்லியின் கைதுக்குப் பிறகு ‘நாந்தான் அப்பவே சொன்னேன்ல..தனியாளா இவ்வளவு பண்ண முடியுமா…இவனுக்கு இதெல்லாம் யாரோ அனுப்புறாங்கய்யா…” என்ற குரல்கள் பரவலாக எழுந்தடங்கியது.

அனைத்து சோதனை முயற்சிகளும் வெற்றியில் முடிந்த திருப்தியில், ஆப்கன் போர் குறிப்பு வெளியீடுகளுக்கான வேலையில் ஈடுபட்டிருந்த ஜூலியனுக்கு, பிராட்லியின் கைது பெரிதும் கவலை கொள்ளச் செய்தது. என்றுமே தனக்கோ அல்லது தன்னைச் சார்ந்தவர்களுக்கோ தொல்லைகள் வரும்போது ஜூலியன் அமைதி காத்ததே கிடையாது, சீண்டச் சீண்டச் சீறுவதே ஜூலியனின் கொள்கை. பிராட்லியின் கைது, எங்கு சென்றாலும் உளவாளிகளின் நோட்டம் என்று கடுப்பாகி போன ஜூலியன் திட்டமிட்டதைக் காட்டிலும் விரைவாக ஆப்கன் போர்க் குறிப்புகளை வெளியிட்டு அமெரிக்காவிற்கு வெறியேற்றியிருந்தார். இதுவரை போராடிப் பார்த்த அமெரிக்கா, தொழில்நுட்பத்தில் ஜூலியனுடன் மோதி வெற்றி பெற முடியாதென்பதை உணர்ந்திருந்த அமெரிக்கா, ஜூலியனுக்காக வேறொரு திட்டம் வைத்திருந்தது.

தன் எதிரிகளின் ஒவ்வொரு அசைவுகளையும் கவனித்துக் கொண்டே இருப்பதும், அவர்களை தன் விக்கிலீக்ஸ் வெளியீடுகளாலேயே அடக்குவதையும் வழக்கமாகக் கொண்டிருந்த ஜூலியன் அடுத்து அமெரிக்காவிற்காக வைத்திருந்த அதிரடி அணுகுண்டு தான் Cablegates என்றழைக்கப்படும் அமெரிக்க வெளியுறவுத் துறை ஆவணங்களின் வெளியீடு. ஆனால் அவற்றைத் தயார்ப்படுத்துவதற்கு ஜூலியனுக்கு சில மாதங்கள் தேவைப்பட்டது. அந்த சில மாதங்கள் இடைவெளியில் ஜூலியனின் வாழ்வில் மீண்டும் வசந்தகாலம் எட்டிப்பார்த்தது. அதுவரை துணைவியில்லாத, தனிமையான, ரகசிய இருப்பிடங்களில் பதுங்கித் திரியும் வாழ்க்கை என்று ஓடிக் கொண்டிருந்த ஜூலியனுக்கு collateral murder காணொளி மற்றும் ஆப்கன் போர்க்குறிப்புகள் வெளியீடுகளுக்குப் பின் அனைத்துத் தரப்பினராலும் ஆராதிக்கப்படும் நாயகன் அந்தஸ்து கிடைத்திருந்தது.

அந்தக் காலகட்டத்தில் சில ஐரோப்பிய நாடுகளுக்கு சிறப்பு விருந்தினராக கலந்துரையாடல்கள், கருத்தரங்குகள், தொலைக்காட்சிப் பேட்டிகள் என்று பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்தார். சென்ற இடமெல்லாம் சிறப்பு வரவேற்பும், இளம் சமுதாயத்தின் ஆரவாரமும் ஜூலியனுக்கு உற்சாகமூட்டியது. இக்காலகட்டத்தில் ஸ்வீடனில் ஒரு தேவாலயக்குழுமத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு கருத்தரங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றிருந்த பொழுது தான் ஜூலியன் என்னும் சிங்கம், இரண்டு புள்ளிமான்களால் சாய்க்கப்பட்ட வரலாற்று சிறப்பு வாய்ந்த நிகழ்வு நடந்தேறியது. ‘சீறும் பாம்பை நம்பு, சிரிக்கும் பெண்ணை நம்பாதே – நாகராஜ்’ போன்ற வாசகங்களைக் கொண்ட ஆட்டோக்களைத் தன் வாழ்நாளில் பார்த்துமறியாத ஜூலியனுக்கு ஸ்விடனில் நடந்த அசம்பாவிதம் என்ன? என்ன? என்ன? விரிவாக அடுத்த பகுதியில்.

அமெரிக்காவின் மிகப்பெரிய ஊடக நிறுவனமொன்று Collateral Murder காணொளியினைப் பல வருடங்களாக வெளியிடாமல் வைத்திருந்ததை எங்களால் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடியும் – ஜூலியன்.

-Thanks: Suduthanni

Tags: ,