சென்னை : தனக்கு கொலை மிரட்டல் வருவதாக நடிகர் பிரகாஷ் ராஜ் புகார் கூறியுள்ளார். ராதாமோகன் இயக்கும் ‘கௌரவம்’ படத்தை தயாரித்துள்ளார் பிரகாஷ் ராஜ். இதில் அல்லு சிரீஷ், யாமி கவுதம் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நேற்றுமுன்தினம் நடந்தது. அப்போது நிருபர்களிடம் பிரகாஷ் ராஜ் கூறியதாவது: தமிழில் ‘அழகிய தீயே’, ‘மொழி’, ‘அபியும் நானும்’ என நல்ல படங்கள் தயாரித்து வருகிறேன்.
தற்போது ‘கௌரவம்’ என்ற படத்தை தயாரித்துள்ளேன். கவுரவ கொலை பற்றிய கதை. இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவில், ஏன், உலகம் முழுவதும் பல இடங்களில் நடக்கிறது. தருமபுரி சம்பவத்தைப் பற்றியோ, கோவையில் உள்ள ஒரு சமுதாயத்தைப் பற்றிய கதையோ இது கிடையாது. ஆனால் எனக்கு ட்விட்டரில் ஒரு சிலரிடம் இருந்து கொலை மிரட்டல் வருகிறது. ‘கவுரவ கொலை பற்றி உனக்கு எதுக்கு கவலை? கன்னடக்காரனான நீ, எப்படி இந்த படத்தை எடுக்கலாம்? தொலைத்துவிடுவேன்’ என்று மிரட்டுகிறார்கள். அந்த மிரட்டலுக்கு நான் பயப்பட மாட்டேன்.
கருத்து சுதந்திரம் எல்லோருக்கும் உண்டு. ஒவ்வொரு முறை படம் வரும்போதும் இதுபோல் சிலர் பிரச்னை செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். இதை யார்தான் தட்டிக்கேட்பது? நான் கேட்பேன். எனக்கு துணையாக இளைஞர்கள், ரசிகர்கள், அரசு இருக்கிறது. தற்கொலையே தவறு என்று சட்டம் சொல்கிறது. அப்படி இருக்கும்போது கவுரவம் என்ற பெயரில் ஓர் உயிரை கொல்ல யாருக்கும் உரிமை கிடையாது. அதைத்தான் இந்த படத்தில் சொல்லி இருக்கிறேன். எந்த சமுதாயத்துக்கு எதிராக இப்படத்தை எடுக்கவில்லை. இவ்வாறு பிரகாஷ்ராஜ் கூறினார். உடன் ராதாமோகன், படத்தின் ஹீரோ அல்லுசிரிஷ், இசை அமைப்பாளர் தமன் உடன் இருந்தனர்.