தமிழ் மக்கள் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ் மக்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் செயற்பாட்டு ஆதரவுடனேயே இவ்வாறான தாக்கதல்கள் நடத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றில் இன்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் கிளிநொச்சி அலுவலகம் தாக்குதல், உதயன் பத்திரிகை மீது தாக்குதல் என பல்வேறு தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதல்கள் அனைத்துமே பாதுகாப்புப் படையினரின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். தாக்குதல் நடத்திய எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை என்பதுடன், எவரும் அடையாளம் காணப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, இந்தக் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என பிரதமர் டி.எம். ஜயரட்ன தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் மீது பாதுகாப்புப் படையினரும் காவல்துறையினரும் தாக்குதல் நடத்துவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் உள்முரண்பாடுகள் காணப்படுவதாகவும் இதன் காரணமாக சில வேளைகளில் தாக்குதல்கள் இடம்பெற்றிருக்கலாம் எனவும் பிரதமர் ஜயரட்ன தெரிவித்துள்ளார். சம்பந்தனின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
-Globaltamilnews





