இந்திய இராணுவத்துறையை சிங்கள அரசா இயக்குகிறது? வைகோ சீற்றம்

Vaikoதமிழ்நாட்டின் வெலிங்டனில் சிங்கள இராணுவத்தினருக்கு பயிற்சி கொடுக்க மத்திய அரசு செய்துள்ள ஏற்பாடு, தமிழர்களுக்கு எதிரான மத்திய காங்கிரஸ் அரசு வஞ்சகமாகத் தொடர்கின்ற துரோகத்தின் சாட்சியமாகும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஒவ்வொரு நாளும் தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் தாக்குவதும், பல நேரங்களில் நமது மீனவர்கள் அதனால் கொல்லப்படுவதும் அன்றாட தொடர் நிகழ்ச்சியாகி விட்டது.

இத்தகைய சூழலில் இலங்கை இராணுவத்தின் விங் காமாண்டர் பண்டார தச நாயகேவுக்கும், மேஜர் ஹரிசந்திராவுக்கும் இந்த மே மாதம் 27 ஆம் திகதியில் இருந்து குன்னூர் வெலிங்டனில் இந்திய இராணுவ பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது.

தமிழக மக்களும் – தமிழ்நாடு அரசும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்த

பின்னரும், திருட்டுத்தனமாக தமிழ்நாட்டில் சிங்கள இராணுவத்தினருக்கு மத்திய அரசு பயிற்சி கொடுப்பது மன்னிக்க முடியாத துரோகம் ஆகும்.

இந்தியாவின் வேறொரு மாநில மக்களின் தொப்புள்கொடி உறவுகளை கொன்று குவிக்கும் பிறநாட்டு இராணுவத்தை இந்தியாவுக்கு அழைத்து வந்து விருந்து வைக்க முடியுமா? பயிற்சி தர முடியுமா?

தமிழ்நாட்டை – தமிழக மக்களை கிள்ளுக் கீரையாக நினைத்து மத்திய காங்கிரஸ் அரசு இந்த அக்கிரமத்தைச் செய்கிறது. இதில் மிக அதிர்ச்சி தருகின்ற செய்தி யாதெனில், மே 27 ஆம் திகதி அன்று தஞ்சாவூரில் இந்திய இராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி, ‘இலங்கை இராணுவத்துக்கு தமிழ்நாட்டில் பயிற்சி தருவது இல்லை’ என்று கூறினார். ஆனால், அந்தத் திகதியில் இருந்துதான் சிங்கள இராணுவத்தினருக்கு பயிற்சியே தொடங்கி உள்ளது.

அப்படியானால், இந்திய இராணுவத்தின் நடவடிக்கைகள் அமைச்சர் அந்தோணிக்கு தெரியாமலே நடக்கிறதா? இந்திய இராணுத் துறையை சிங்கள அரசே இயக்குகிறதா? இந்திய இராணுவத் தளபதிகளும், அதிகாரிகளும் ஏ.கே.அந்தோணியை முட்டாள் ஆக்குகின்றனரா? அல்லது தமிழக மக்கள் கண்களில் மண்ணைத் தூவி விடலாம் என்று கருதிக்கொண்டு அந்தோணி செயல்படுகிறாரா? தலைமை அமைச்சர் டாக்டர் மன்மோகன்சிங் இதனை எல்லாம் அறிவாரா? அறிய மாட்டாரா?

ஈழத்தில் தமிழ் இனப் படுகொலைக்கு உடந்தையாகச் செயல்பட்ட ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும், அதில் பங்கேற்ற கட்சிகளும் தமிழ் இனக்கொலையின் பொறுப்பாளிகள் ஆவார்கள்.

இலங்கையில் 2009 க்குப் பின்னரும் ஈழத் தமிழர்கள் வதைக்கப்படுவதும், தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றம் நடைபெறுவதும், தமிழர் பகுதிகள் இராணுவ முகாம்களாகத் தொடர்வதும் இன்று வரை தொடர்கதையாகிக்கொண்டு இருக்கிறது.

இக்கொடுமைகளை எதிர்த்து தமிழ்நாட்டின் மாணவர்கள் இலட்சக் கணக்கில் போர்க்கொடி ஏந்தி, அறவழியில் கிளர்ச்சி செய்தனர். இதற்குப் பின்னரும் தமிழர்களுக்கு எதிராக இந்தியாவின் மத்திய அரசு செயல்படுவது நெருப்போடு விளையாடுகிற விபரீதமாகவே விளையும்.

உடனடியாக சிங்கள இராணுவத்தினர் தமிழ்நாட்டில் இருந்து மட்டுமல்ல, இந்தியாவில் இருந்தே வெளியேற்றப்பட வேண்டும்.

ஈழத் தமிழர்களுக்கும், தமிழ் இனத்துக்கும் தீங்கும் துரோகமும் செய்து வரும் மத்திய காங்கிரஸ் அரசுக்கு உரிய நேரத்தில், உரிய விதத்தில் தமிழக மக்கள் சரியான பாடம் கற்பிப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இருந்து எமது செய்தியாளர் வாசு-

Tags: ,