ஒற்றையாட்சி முறைமையின் கீழ் உள்ள இந்த நாட்டில் இரண்டு அரசாங்கங்கள் உருவாகுவதை தடுக்கும் நோக்கிலேயே ஒன்றுக்கு மேற்பட்ட மாகாண சபைகள் விரும்பினால் இணைய முடியும் என்ற 13 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரிவை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்தது என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
அமைச்சரவைக் கூட்டத்தின்போது 13 ஆவது திருத்தச் சட்டத்தில் செய்யவுள்ள இரண்டு திருத்தங்கள் குறித்த பிரேரணை கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன் அது குறித்த கட்சிகளின் யோசனையை ஏழு நாட்களுக்குள் வழங்குமாறும் கோரப்பட்டுள்ளன. மேலும் இந்த பிரேரணை சகல மாகாண சபைகளுக்கும் அனுப்பப்பட்டு அவற்றின் இணக்கப்பாடுகளும் பெறப்படவுள்ளன என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
ஊடகத்துறை அமைச்சில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அமைச்சர் மேற்கண்ட விடயங்களை குறிப்பிட்டார்.
இலங்கையில் இருந்து எமது செய்தியாளர் வாசு-