மாகாணசபைகளின் அதிகாரங்களுக்கு இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் சாவுமணி

meeting
இந்தியாவினதும் தமிழ்கட்சிகளின் எதிர்ப்புகளையும் மீறி, 13வது அரசியலமைப்பைத் திருத்தத்தை பலவீனப்படுத்தும் நடவடிக்கையில் சிறிலங்கா அரசாங்கம் இறங்கியுள்ளது.

13வது திருத்தத்தின் கீழ் மாகாணசபைகளுக்கு உள்ள அதிகாரங்களைப் பறிப்பது தொடர்பாக இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்றுமுன்தினம் சிறிலங்கா அதிபர் மகிந்த ராபக்ஸ தலைமையில், நடத்தப்பட்ட ஆளும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களின் கூட்டத்தில் இது தொடர்பான யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டது.
இதன்படி, 13வது திருத்தச் சட்டத்தில் உள்ள, மாகாணசபைகள் தாமாக இணைந்து கொள்வதற்கு, வழிசெய்யும் பிரிவை நீக்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

எதிர்காலத்தில் வடக்கு,கிழக்கு மாகாணங்களின் இணைவை நடைமுறைச் சாத்தியமற்றதாக்கும் நோக்குடனேயே இந்தத் திருத்தம் கொண்டு வரப்படவுள்ளது.
அத்துடன், மாகாணசபைகளின் அதிகாரங்கள் தொடர்பான சட்டங்களைக் கொண்டு வரும்போது, எல்லா மாகாணசபைகளினதும் அனுமதி பெறப்பட வேண்டும் என்று 13வது திருத்தத்தில் கூறப்பட்டுள்ள விதிமுறையையும் மாற்றியமைக்க சிறிலங்கா அரசு திட்டமிட்டுள்ளது.
புதிய யோசனைப்படி, பெரும்பான்மை மாகாணசபைகளின் ஆதரவுடன், நாடாளுமன்றத்தில் மாகாணசபைகள் தொடர்பான எத்தகைய சட்டங்களையும் மாற்றியமைக்க முடியும்.

இது மாகாணங்களில் அதிகாரங்களை வடக்கு,கிழக்கு மாகாணங்களின் அனுமதியின்றியே பறிப்பதற்கு வழிசெய்யும்.
இந்த இரண்டு திருத்தங்களையும் கொண்டு வருவது குறித்து, சிறிலங்கா அதிபர் தலைமையில் நடத்தப்பட்ட கூட்டத்தில் ஆராயப்பட்டதை அடுத்து, இன்று நடக்கவுள்ள அமைச்சரவைக் கூட்டதில் இது தொடர்பான பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்படவுள்ளது.

வடக்கு மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னதாக, மாகாணங்களின் அதிகாரங்களை பறிப்பதில் சிறிலங்கா அரசு தீவிரம் காட்டி வருகிறது.
அதேவேளை நேற்று முன்தினம் நடந்த கூட்டத்தில் சிறிலங்கா அரசின் இந்த முயற்சிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட எவரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்று சிறிலங்கா அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

அந்தக் கூட்டத்தில், இந்த பிரேரணைகள் குறித்த விளக்கங்கள் மொழிபெயர்ப்பாக தமக்குக் கொடுக்கப்பட்டாலும், அதற்குரிய போதிய விளக்கங்கள் இல்லாததால், தன்னால் உடனடியாக ஒரு தீர்க்கமான நிலைப்பாட்டை எடுக்க முடியவில்லை என்று பிபிசிக்கு அளித்த செவ்வியில் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மாகாணங்களில் அதிகாரங்களை பறிக்கும் இந்த அரசியலமைப்புத் திருத்த முயற்சிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, இந்தப் பிரேரணை இன்று அமைச்சரவையில் விவாதிக்கப்படவுள்ள நிலையில், பாலஸ்தீனத்துக்கான பயணத்தை மேற்கொண்டுள்ள சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவசரமாக நாடு திரும்பவுள்ளார்.

அதேவேளை, இந்தியாவினதும், தமிழ்க்கட்சிகளினதும் எதிர்ப்புகளைப் பொருட்படுத்தாமல் சிறிலங்கா அரசாங்கம் 13வது திருத்தத்தை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் இருந்து எமது செய்தியாளர் வாசு-

Tags: ,