டக்ளஸ் தேவானந்தாவின் கருத்துக்களை மறுத்துள்ள போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கத்தின் தலைவர் வீ.சகாதேவன் அவரது கொள்கைகள் செயற்பாடுகள் தொடர்பாக பகிரங்க விவாதத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,
டக்ளஸ் தேவானந்தா ஐயா உங்கள் கருத்தை நான் மறுக்கிறேன். நீங்கள் உங்கள் செயற்பாடுகளை மாற்றுவதன் மூலம் தமிழ் மக்களுக்கு இன்னும் அதிகமான பயன் கிடைக்கும்.
தமிழ் மக்களுக்கு மாகாணசபை அதிகாரங்களை வழங்கினால் சிங்கள மக்கள் எதிர்ப்பார்கள் என்று பாரம்பரிய கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்த கருத்தினை முற்றாக மறுக்கிறேன்.
ஏனென்றால் 13வது திருத்தம் தொடர்பாக நீங்கள் தெரிவித்த கருத்தானது சிங்கள மக்களின் கருத்தல்ல. அது உங்களது தனிப்பட்ட கருத்தென்றே கூற வேண்டும்.
13வது திருத்தத்தினை அமுல்படுத்துவதற்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை. அது ஏற்கனவே மக்கள் ஆணையை பெற்ற பாராளுமன்றம் ஊடாக ஆறில் ஐந்து பெரும்பான்மையுடன் அரசியல் அமைப்பில் சேர்த்துக்கொள்ளப்பட்ட விடயமாகும்.
நீதியுடனும், நேர்மையுடனும் நோக்கினால் 13வது திருத்தத்தினை நீக்குவதற்குத்தான் பாராளுமன்ற அனுமதி பெற வேண்டியிருக்கும். அவ்வாறு செய்வது மக்களின் ஆணையை மீறும் செயலாகும். இந்நாட்டில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட துயரங்களை மூடிமறைக்கும் செயலே மாகாணசபை நீக்குவதற்கான ஏற்பாடாகும். இதனை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
தமிழ் மக்கள் அரசியல் சந்நியாசம் பூண்டுவிட்டதாக எவரும் தவறாக நினைத்துவிடக்கூடாது. தமிழ் அரசியல்வாதிகளை காட்டிலும் தமிழ் மக்கள் எப்போதும் ஒற்றுமையாக இருந்து வருகிறார்கள். சரியான அரசியல் தலைமைத்துவம் ஒன்று இல்லாதது மட்டுமே ஒரே குறையாகும். அவ்வாறு ஒரு அரசியல் தலைமைத்துவம் கிட்டுமானால் ஈழத்தமிழ் மக்கள் உலகின் ஆச்சரியமாக விளங்குவார்கள்.
எனவே தமிழ் மக்களுக்கு தலைமை தாங்குவதாக கூறிக்கொள்பவர்கள் எவரும் தங்களது பலவீனங்களை தமிழ் மக்கள் மேல் சுட்டிக்காட்டக்கூடாது.
தாங்கள் என்ன கொள்கைகளை முன்வைத்து ஆயுதம் ஏந்தினீர்கள். பிறகு என்ன கொள்கையை முன்வைத்து அரசியலுக்குள் நுழைந்தீர்கள் என்பதனை மக்கள் நன்கு அறிவார்கள்.
எல்லாவற்றிற்கும் மேலாக தங்களுக்கு சுட்டிக்காட்ட வேண்டிய விடயம் என்னவென்றால் 13வது திருத்தத்தினை கூட்டமைப்பு எதிர்த்ததாக குறிப்பிட்டுள்ளீர்கள். 1987ஆம் ஆண்டு உருவாகிய 13வது திருத்தத்தினை 2000ஆம் ஆண்டு பிறகு உருவாகிய கூட்டமைப்பு எவ்விதம் முன்னரே எதிர்த்திருக்க முடியும். நீங்கள் கூறுவது முற்றிலும் பொய்யே?
கூட்டமைப்பினை அரசியல் பகிரங்க விவாதத்திற்கு அழைத்த நீங்கள் என்னுடன் அரசியல் தொடர்பாக பகிரங்க விவாதத்திற்கு வருமாறு அறைகூவல் விடுக்கிறேன். கருத்துக்களை கருத்துக்களால் வெல்ல வேண்டும் என்று புலிகளுக்கு அறிவுரை கூறிய நீங்கள் உங்களால் அவ்விதம் செய்ய முடியாமைக்கான காரணத்தினை கூறமுடியுமா?
ஏனென்றால் பத்திரிகையாளர்களின் குரல்வளையை நெரிக்கமுடியும் என்று பகிரங்கமாக கூறியவர் அல்லவா நீங்கள். புலிகள் அரசியலுக்கு வந்தால் அரசியலை விட்டு நீங்குவதாக -முன்பு கூறினீர்கள். கே.பி மற்றும் தயாமாஸ்ரரும் புலிகள் தானே. கூட்டமைப்பில் அங்கம் வகிப்பவர்களும் புலிகள் என்று குற்றம் சாட்டுகிறீர்கள். அப்படியானால் நீங்கள் கூறியபடி புலிகள் அரசியலுக்கு வந்துவிட்டார்கள். நீங்கள் அரசியலில் இருந்து ஒதுங்க தயாரா? அதனை நீங்கள் செய்யமாட்டீர்கள்.
நீங்கள் சிறந்ததொரு அரசியல் தலைமைத்துவத்தினை தமிழ் மக்களுக்கு வழங்கி அரசியல் மூலம் சேவை செய்ய முடியாது என்றில்லை, அதற்கு நீங்கள் ஒரு கொலை செய்ய வேண்டும். என்னையோ மற்றவர்களையோ அல்ல, உங்களுக்குள் இருக்கும் பயத்தையும், வன்முறை எண்ணத்தையும், சுயநல எண்ணத்தினையும், பதவியில் இருக்கும் ஆசையையும் கொன்றுவிடுங்கள். அப்போது நான் செய்ய நினைப்பதையும் விட, இப்போது நீங்கள் செய்வதனை விட மிகவும் அதிகமாக தமிழ் சமூகத்திற்காக சேவையாற்றக்கூடிய மனிதனாக நீங்கள் மாறமுடியும்.
தமிழ் மக்களுக்கு எதிர்காலத்திலாவது நல்லது நடக்க வேண்டும் என்று நீங்கள் கருதினால் நீங்கள் உங்கள் பதவிகளை தூக்கி எறியத்தயாராக இருந்தால் என்றென்றும் தமிழ் மக்களின் மனதில் இடம் பிடிக்கவும் முடியும். மறப்போம் மன்னிப்போம் என்ற உயரிய கோட்பாட்டை கொண்டவர்கள் தான் தமிழ் மக்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இருந்து எமது செய்தியாளர் வாசு