யார் வேண்டுமானாலும் விருது வழங்கலாமா? கண்ணை மூடி தூங்கும் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள்!

functionவவுனியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பல்துறை சார்ந்தவர்களுக்கும் வழங்கப்பட்ட விருதுகள் தொடர்பில் பலரும் விசனம் தெரிவித்துள்ளதுடன் என்ன அடிப்படையில் யாருடைய தெரிவில் அவை வழங்கப்பட்டன எனவும் கேற்வி எழுப்பியுள்ளனர்.

பேராசிரியர் கனகசபாபதி நாகேஸ்வரனின் மணி விழா நிகழ்வு வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் இடம்பெற்றபோது வவுனியா மாவட்டத்தில் பல்துறையை சேர்ந்த 125 இற்கும் மேற்பட்டோருக்கு விருதுகள் வழங்கப்பட்டிருந்தன.

இதன்போது வழங்கப்பட்ட விருதுகளின் பெயர்கள் விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்ததுடன் ஒரே துறையில் பத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு ஒரே விருது வழங்கப்பட்டிருந்தமை, சில தகுதியில்லாதவர்களுக்கு விருதுகளும் பட்டங்களும் வழங்கப்பட்டிருந்தமை, சைவ சமயத்தை தவிர்ந்த ஏனையோருக்கு சமயம் சார்ந்த விருதுகள் வழங்கப்பட்டமை போன்ற விடயங்கள் தொடர்பில் பலரும் விசனம் தெரிவித்திருந்தனர்.

இதேவேளை நிகழ்வுக்கு அழைக்கப்பட்டிருந்த பல அதிதிகள் கலந்து கொள்ளாத நிலையில் விருதுகள் வழங்கப்பட்டதுடன் விருது வழங்கப்பட்ட மண்டபத்தில் வவனியா மாவட்ட நலன் விரும்பிகள் என்ற பெயரில் துண்டு பிரசுரமொன்றும் வெளியிடப்பட்டிருந்தது.

இதன் காரணமாக ஒரு சிலர் விருது பெறுவதை தவிர்த்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இவ்வாறு முறையற்ற விதத்தில் விருதுகள் வழங்கப்படுவதால் உண்மையான கலைஞர்கள் பாதிக்கப்படுவதுடன் அவர்களுடைய பெயருக்கும் களங்கம் ஏற்படுகிறது. சமூகத்தில் விருதுகளுக்கு இருக்கின்ற மதிப்பும் குறைந்து செல்கின்றது.

எனவே பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் இவ் விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என மக்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் இருந்து எமது செய்தியாளர் வாசு-

Tags: ,