வட-கிழக்கு இணைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பு – சுரேஸ் பிறேமச்சந்திரன்

suresh
பொலிஸ், காணி மற்றும் நிதி அதிகாரங்கள் முழுமையாக கையளிக்கப்பட்டதும் வடக்கு, கிழக்கு மாகாண சபைகள் இணைந்த மாகாண சபையாக அமைக்கப்படல் வேண்டுமென தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு கோரிக்கைவிடுத்துள்ளது.

இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் விளைவான 13 ஆவது திருத்தமானது தமிழ்த்தேசிய பிரச்சினையை தீர்ப்பதற்கு போதுமானதல்ல என்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

கடந்த இரண்டு தசாப்தங்களில் மங்கள முனசிங்க தெரிவுக்குழுவின் ஆலோசனைகள், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் 1995 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளின் வரைவுகள், இந்த ஆட்சியின் கீழ் நிறுவப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் குழுத்தயாரித்த அறிக்கையென அதிகார பகிர்வுக்கான யோசனைகள் பல முன்வைக்கப்பட்டன.
இவை எல்லாவற்றிலும் 13 ஆவது திருத்தத்தைவிடவும் கூடுதலாக வழங்கப்படல் வேண்டுமென்று ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நிதி விடயங்களில் மத்திய அரசிலிருந்து பூரணமாக விடுபடவேண்டுமென நாம் கேட்கவில்லை. மத்திய வங்கி நிதி செயற்பாடுகளை கட்டுப்படுத்தலாம். ஆனால் வெளிநாடுகளிலிருந்து கடன் மற்றும் நன்கொடை என்பவற்றை பெறுவதற்கு எமக்கு அதிகாரம் வேண்டும். இது மத்திய அரசின் சம்மதத்துடன் செய்யப்படலாம் என்றும் கூறிய அவர், வடக்கு, கிழக்கை இணைக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டில்தான் நாம் எப்போதும் இருந்துவருகின்றோம் என்றார்.

இலங்கையில் இருந்து எமது செய்தியாளர் வாசு-

Tags: ,