ஆயுதம் ஏந்தியிருந்த டக்ளஸ் தேவானந்தா வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டு எல்லாம் நிறைந்த மாகாண சபையாக கொடுக்கப்பட்ட போது ஆயுதத்தை விடுத்து ஜனநாயகத்திற்கு வந்தவர்- அமைச்சர் ரிசாட் பதியுர்தீன்

rijat
ஆயுதம் ஏந்தியிருந்த டக்ளஸ் தேவானந்தா வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டு எல்லாம் நிறைந்த மாகாண சபையாக கொடுக்கப்பட்ட போது ஆயுதத்தை விடுத்து ஜனநாயகத்திற்கு வந்தவர் என்பதனை அனைவரும் சிந்திக்க வேண்டும் என வர்த்தக மற்றுமும் கைத்தொழில் அமைச்சர் ரிசாட் பதியுர்தீன் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

30 வருடம் போராடிய வரலாறு ஒன்று இங்கு உள்ளது. அதன் பின்னணியில் நாம் அடைந்தது என்ன. இந்த நான்கு வருடத்திற்குள் நாம் அடைந்து கொண்டிருப்பது என்ன? என நாம் ஒப்பீட்டு பார்க்க கடமைப்பட்டுள்ளோம். இந்த நான்கு வருடத்திற்குள் பல பாதைகள் காபற் பாதைகளாக மாற்றப்பட்டுள்ளன.

அது மட்டுமல்லாமல் ஏற்கனவே இருந்த புகையிரத பாதைகள் எல்லாம் அழிக்கப்பட்ட நிலையில் இன்று கடனாக பணம் பெற்று அவையும் புனரமைக்கப்படுகின்றன. அதேபோல் குளங்களும், பாடசாலை கட்டிடங்களும் புனரமைக்கப்படுகின்றன.

எனவே, நாம் நான்கு வருட காலத்திற்குள் இந்த அரசாங்கம் செய்துள்ள சாதனைகளை தொடர்ந்து பெறப்போகின்றோமா? அல்லது இதை நிறுத்தி அரசை வீழ்த்தி மீண்டும் பழைய யுகத்திற்கு சென்று அங்கு துன்பமும், துயரமும், அகதி வாழ்வும், எமது உறவுகளை எல்லாம் பறிகொடுத்து அதே துன்பத்தை நோக்கி பயணிக்கப்போகின்றோமா? என்பது தொடர்பில் சிந்திக்க வேண்டும்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மறக்க முடியாத தலைவராக இன்று உள்ளார். அவருடைய ஆட்சியிலேயே தான் சமாதானத்தை கண்டோம். ஆயிரக்கணக்கான பட்டதாரிகளுக்கான நியமனம் வழங்குவதை கண்டோம். அதேபோல் சமுர்த்தி வாழ்வாதார திட்டத்திற்காக நெடுங்கேணி, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், யாழ்ப்பாணத்தின் ஓர் பகுதி போன்ற பிரதேசங்களுக்கு நியமனம் வழங்குவதை காண்கின்றோம்.

கடந்த 30 வருட கால பலமான போராட்டமாக, பலமாக ஆயுத குழுக்களாக பலர் பாடுபட்டிருந்தார்கள். குறிப்பாக போராட்டத்தில் ஆயுதம் ஏந்தியிருந்த டக்ளஸ் தேவானந்தா போன்றவர்கள் 1987 ஆம் ஆண்டிலே இந்திய சமாதான உடன்படிக்கையின் போது வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டு எல்லாம் நிறைந்த மாகாண சபையாக கொடுக்கப்பட்ட போது ஆயுதத்தை விடுத்து ஜனநாயகத்திற்கு வந்தவர்கள்.

அத்தைகைய டக்ளஸ் தேவானந்தா அந்த சிந்தனையோடு வந்ததனால் இன்று பல சாதனைகளை யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் ஆற்றிக்கொண்டிருக்கின்றார். அவரைப்போல் நாமும் வவுனியா, மன்னார், முல்லைத்தீவில் எம்மால் முடிந்த அபிவிருத்திகளை செய்துள்ளோம்.

ஆனால், இன்று இந்த மாகாணங்களும் பிரிந்துள்ள நிலையில் அந்த மாகாணத்தின் அதிகாரங்களையும் கொடுக்க வேண்டாம் என்று சொல்கின்ற அளவுக்கு சூழல் காணப்படுகின்றது. இன்னும் நாம் துன்பப்பட வேண்டும் என பேசுகின்றனவர்கள் எந்த ஓர் தீர்வையும் முன்வைக்காது, ஜதார்த்த ரீதியாக பேசாது எமது மக்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்தும் விதமான செயற்பாட்டை முன்னெடுத்து வருகின்றனர்.

அது தங்களுடைய இருப்பை, தங்களுடைய பாராளுமன்ற கதிரைகளை தக்க வைத்துக்கொள்வதற்காக மேற்கொள்ளும் தந்திரோபாய நடவடிக்கையாகும். ஆகவே வீர வாசனங்களை பேசி அப்பாவி இளைஞர், யுவதிகளை பலிக்கடாவாக்கின்ற செயற்பாடுகளுக்கு நாம் துணைபோகக்கூடாது. இது தொடர்பில் நாம் தூர நோக்கோடு சிந்திக்க வேண்டும் என தெரிவித்தார்.

இலங்கையில் .ரந்த எமது செய்தியாளர் வாசு-

Tags: ,