இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக்கூடாது: கருணாநிதி

tamil-karunanidhiகாமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக்கூடாது என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

காமன்வெல்த் நாடுகளின் தூதர்களைச் சந்தித்து, திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதனை வலியுறுத்துவார்கள் என கருணாநிதி கூறியுள்ளார்.

இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: திமுகவின் அவசர செயற்குழுக் கூட்டம் மார்ச் 25-ம் தேதி நடைபெற்றது.

இனப் படுகொலையில் ஈடுபட்ட இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெறக் கூடாது என்று இந்தக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  பல்வேறு தமிழ் அமைப்புகளும், தமிழ் இன உணர்வாளர்களும் இதே கருத்தை வலியுறுத்தி வருகின்றனர்.

அமைச்சர்கள் அளவிலான காமன்வெல்த் நடவடிக்கைக் குழுவின் கூட்டம் லண்டன் மாநகரில் ஏப்ரல் 26-ல் நடைபெறப் போவதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நவம்பரில் நடைபெறுவதாக உள்ள காமன்வெல்த் மாநாட்டை அங்கு நடத்தக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டு வருவதைப் பற்றி அந்தக்  கூட்டத்தில் ஆழ்ந்து பரிசீலனை செய்து முடிவெடுக்க வேண்டுமென்று டெசோ அமைப்பின் சார்பில் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

அமைச்சர்கள் அளவிலான காமன்வெல்த் நடவடிக்கைக் குழுவில் இடம்பெற்றுள்ள நாடுகளின் தூதர்களை திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களும்,  டெசோ அமைப்பின் உறுப்பினர்களும் நேரில் சந்தித்து, இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக்கூடாதென வலியுறுத்துவார்கள் என்று  கருணாநிதி கூறியுள்ளார்.

-dinamani

Tags: