மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரே இரவில் நான்கு இந்து ஆலயங்களை இனந்தெரியாத நபர்கள் உடைத்துச் சேதமாக்கி உள்ளனர். ஆலயங்களில் இருந்த மூல விக்கிரகம், நவக்கிரகங்கள் என்பவற்றை சேதப்படுத்திய இனந்தெரியாதோர் அங்கிருந்த தங்க நகைகள், பணம் என்பவற்றையும் அபகரித்துச் சென்றுள்ளனர்.
நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்ற இந்தச் சம்பவங்களால் மட்டக்களப்பு நகரில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. மட்டக்களப்பு பிள்ளையாரடி வளைவில் புத்தர் சிலையை நிறுவ நீதிமன்றத்தால் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இடம்பெற்ற இந்து ஆலயங்கள் மீதான தாக்குதல்கள் மக்கள் மத்தியில் பெரும் சந்தேகங்களை தோற்றிவித்துள்ளன.
மட்டக்களப்பு குருக்கள்மடம் ஸ்ரீ செல்லக்கதிர்காமர் ஆலயம், மாங்காடு பிள்ளையார் ஆலயம், கிரான் குளம் ஐயனார் ஆலயம், பாண்டிருப்பு திரௌபதியம்மன் ஆலயம் ஆகியவற்றிலேயே இனந்தெரியாதோர் இந்தக் காட்டுமிராண்டித்தனமான செயலை அரங்கேற்றி உள்ளனர்.
இந்து ஆலயங்களை உடைக்க வேண்டும் என்ற நோக்கமும், அங்கிருந்த பெறுமதியான பொருட்களைக் கொள்ளையிடவேண்டும் என்ற நோக்கமும் இந்தச் சம்பவங்களின் பின்னணியில் தென்படுவதாக ஆலயங்களின் நிர்வாகத்தினரும், பிரதேச மக்களும் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு குருக்கள்மடம் ஸ்ரீ செல்லக்கதிர்காமர் ஆலயத்தில் இருந்த 19 விக்கிரகங்கள் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளன. அங்கிருந்த சுமார் 20 பவுண் தங்க நகைகளும், விக்கிரகத்தின் அடியில் வைக்கப்பட்டிருந்த தங்கத் தகடும் கொள்ளையிடப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாங்காடு கிராமத்தில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலயத்தில் மூல விக்கிரகம் மற்றும் நவக்கிரகங்கள் என்பன உடைக்கப்பட்டுள்ளன.
அதேவேளை, கிரான்குளம் கிராமத்திற்கும், அம்பிளாந்துறைக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள ஐயனார் ஆலயத்தில் உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் மற்றும் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
இந்த மூன்று ஆலயங்களில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து ஆலயங்களின் நிர்வாகத்தினர் களுவாஞ்சிக்குடிப் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். இதேவேளை, மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட எல்லையிலுள்ள பாண்டிருப்பு திரௌபதியம்மன் ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த கும்பாபிஷேக கலசம் சேதமாக்கப்பட்டுள்ளதோடு அந்த ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த உண்டியலும் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் மற்றும் நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
இது தொடர்பில் ஆலய நிர்வாகத்தினர் கல்முனை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். இந்தச் சம்பவங்கள் குறித்து கேள்வியுற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன் ஆகியோர் குறித்த ஆலயங்களுக்கு நேரடியாகச் சென்று நிலைமைகளைப் பார்வையிட்டனர்.