இந்திய வீட்டுத்திட்டத்தில் பாரபட்சம்! பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்றாலும் கவனம் செலுத்துவாரா?- மீள்குடியேறியோருக்கான நலன் பேணும் அமைப்பு

vavuniya
வவுனியாவில் வழங்கப்பட்டு வரும் இந்தியவீட்டுத்திட்டத்தில் தமிழ் மக்களுக்கு பாரபட்சம் காட்டப்படுவதாக தெரிவித்தும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு மீள்குடியேறியோருக்கான நலன் பேணும் அமைப்பு கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளனர்.

நேற்று (1.6) அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வவுனியா மாவட்டத்தில் இந்திய நிதியுதவியுடனான வீட்டுத் திட்டம் வழங்கப்படுவதில் தமிழ் மக்கள் மீது காட்டப்படும் பாரபட்சத்திற்கெதிராக வவுனியா மாவட்ட மீளக்குடியமர்ந்தோர் நலன் பேணும் அமைப்பினராகிய எம்மால் ஏற்பாடு செய்யப்பட்டு கடந்த 30ஃ01ஃ2013 அன்று வவுனியா கச்சேரி முன்றலில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் ஒன்று திரண்டு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தியதுடன் அரசாங்க அதிபரை சந்தித்து எமது குறைகளை வெளிப்படுத்தி நான்கு மாதங்களாகின்ற போதும் இதுவரை எமக்கு நியாயம் எதுவும் கிடைக்கப் பெறவில்லை.

இந்நிலையில் வட மாகாணத்தில் இந்திய வீட்டுத்திட்டம் உள்ளிட்ட அபிவிருத்திச் செயற்பாடுகளிற்கு அனுமதிகளை வழங்கி அவற்றை செயற்படுத்தி வரும் வடக்கில் ஜனாதிபதியின் துரித செயலணிக் குழுவின் தலைவரும் நாட்டின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமாகிய தங்களிடம் இத்தகைய பாரபட்சம் தொடர்பில் எடுத்துரைப்பதன்ரூலம் எமக்கு நியாயம் கிடைக்கும் என நம்புகிநோம்.

கடந்த முப்பதாண்டு கால போரில் முழுமையாக பாதிப்புற்றவர்கள் தமிழ் மக்கள் என்பது யாவரும் அறிந்த விடயமாகும். தமிழ் மக்களிற்கு ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கையோ சொத்தழிவுகளின் பெறுமதியோ இன்று வரை மதிப்பிட முடியாத ஒன்றாகவே காணப்படுகின்றது. போரானது பல்லாயிரக் கணக்கான விதவைகள், அங்கவீனர்கள், அநாதைகள், ஏதிலிகள், நோயாளிகள் ஆகியோரை உருவாக்கியுள்ளது. தமிழ் மக்களைப் போன்று எவரும் இழப்புக்களைச் சந்திக்கவில்லை எனக் கூறுமளவிற்கு தமிழ் மக்கள் இழப்புக்களைச் சந்தித்துள்ளனர் எனக் கூறலாம். அதற்காக ஏனைய மக்கள் போரினால் பாதிக்கப்படவில்லை என்றோ அம் மக்களிற்கு உதவிகள் வழங்கப்படக் கூடாதென்றோ நாம் கூற முனையவில்லை. போரினால் பாதிக்கப்பட்ட மக்களிற்கான உதவித் திட்டங்களில் போரில் முழுமையாக பாதிப்புற்ற தமிழ் மக்களிற்கு முன்னுரிமை வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் வவுனியா மாவட்டத்தில் அவ்வாறு இடம்பெறவில்லை என்பதை தயவுடன் தெரியப்படுத்த விரும்புகின்றோம்.

மாவட்டத்தில் இந்திய வீட்டுத்திட்ட உதவிகளை வழங்குவதில் கிராமங்கள் மற்றும் பயனாளிகளின் எண்ணிக்கையினை தீர்மானித்து வரும் வன்னி மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும் கௌரவ அமைச்சருமான ரிசாத் பதியுதீன் அவர்களின் பாரபட்சமான செயற்பாட்டால் தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீட்டுத்திட்ட உதவிகள் வழங்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டுமுள்ளனர். அரசாங்க அதிபர் மற்றும் இந்தியத் தூதுவர் ஆகியோரை சந்தித்து பாரபட்சமான தெரிவுகளை மீள் பரிசீலனை செய்யுமாறு நாம் கோரிய போது தற்போது வீட்டுத்திட்டமானது 1ம், 2ம் கட்டங்கள் மட்டுமே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய வீட்டுத்திட்டமானது 14 கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளதால் உங்களது குறைகள் கவனத்தில் கொள்ளப்படும் என இந்திய தூதுவர் அவர்கள் தெரிவித்திருந்த போதும் தற்போது குறித்த அமைச்சரினால் அடுத்த 3ம் கட்டத்திற்கான தெரிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் மாவட்டத்திற்கான இந்திய ஓதுக்கீட்டு எண்ணிக்கை முடிவுற்று விட்டதாகவும் அறிகின்றோம்.

இதன் மூலம் யுத்தம் முடிவடைந்து நான்காண்டுகளாக வீட்டுத்திட்டம் வரும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கும் தமிழ் மக்களிற்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்ச போகின்றது.
கிராமத் தெரிவின் போது முழுமையாக அழிவுற்ற வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவிலும் கணிசமான பாதிப்புகளை எதிர் கொண்ட வவுனியா மற்றும் செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவுகளிலும் போரினால் முழுமையாக பாதிப்புற்ற பல தமிழ் கிராமங்கள் உள்ள நிலையில் சாளம்பைக்குளம் தவிர்ந்த ஏனைய முஸ்லிம் கிராமங்களிற்கு முன்னுரிமையளித்து தெரிவு செய்திருப்பதானது பாரபட்சமான செயல் என்றே குறிப்பிட முடியும்.

அவ்வாறே பயனாளிகளின் எண்ணிக்கையினை தீர்மானிக்கும் விடயத்தில் குறைந்த பயனாளிகளைக் கொண்டுள்ள தமிழ் கிராமங்களை அல்லது தமிழ் கிராமங்களில் குறைந்த பயனாளிகளின் எண்ணிக்கையினை தீர்மானிக்கின்ற அதே வேளை முஸ்லிம் கிராமங்களில் முழு பயனாளிகளும் உள்வாங்கப்படும் வகையிலும் அத்துடன் எதிர்காலத்தில் மீளக்குடியமரவுள்ள குடும்பங்களின் எண்ணிக்கையினையும் சேர்த்தே பயனாளிகளின் எண்ணிக்கை தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாகவே முள்ளிவாய்க்கால் வரை இடம் பெயர்ந்து சென்று பின்னர் முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்டவர்கள், இந்தியாவிலிருந்து திரும்பி வந்தவர்கள் மற்றும் உறவினர், நண்பர் வீடுகளில் வசித்து மீளக்குடியமர்ந்தவர்கள் என தமிழ் மக்கள் ஆண்டுக் கணக்கில் வீட்டுத் திட்டத்திற்கு காத்திருக்கும் நிலையில் முஸ்லிம் குடிமகன் ஒருவர் மீளக் குடியமர்விற்கு பதிவை மாற்றிய மறு கணமே வீட்டுத்திட்டப்பட்டியலில் உள்வாங்கப்படும் வகையில் தாராள எண்ணிக்கையில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில் கிராம தெரிவில் மட்டுமன்றி பயனாளிகளின் எண்ணிக்கையினை தீர்மானிப்பதிலும் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது என்பதை தெளிவாக காணமுடிகிறது.
மாவட்டத்தில் வீட்டுத் தேவையானது தமிழ் மக்களிற்கு மட்டுமன்றி முஸ்லிம் மக்களிற்கும் அவ்வாறே சிங்கள மக்களிற்கும் உள்ளது. மாவட்டத்திற்கென ஒதுக்கப்பட்டுள்ள வீடுகளின் எண்ணிக்கையினை பங்கீடு செய்யும் போது முழுமையாக பாதிப்படைந்த கிராமங்கள் தமிழ் கிராமங்கள் என்ற அடிப்படையில் பங்கிடப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறில்லாவிட்டாலும் மக்களின் வீட்டுத்தேவைகளின் விகிதாசார அடிப்படையிலாவது பங்கிடப்பட்டிருக்க வேண்டும்.

மாவட்ட சனத்தொகை விகிதாசார அடிப்படையில் கூட பங்கீடு இடம் பெறவில்லை. மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட எண்ணிக்கையானது வரையறுக்கப்பட்டது எனத் தெரிந்தும் இங்கு சிங்கள மக்களை பகைக்காத வகையில் அவர்களது தேவைகளும் அவ்வாறே முஸ்லிம் மக்களின் தேவைகள் முழுவதும் பூர்த்தி செய்யப்படும் வகையிலும் பின்னர் மீதமாக இருந்தால் தமிழ் மக்களிற்கு வழங்குதல் என்ற வகையிலுமே தெரிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் பிரதேச செயலக ரீதியாக வீட்டுத்தேவைகளைக் கொண்ட குடும்பங்களின் எண்ணிக்கையினையும் இந்திய வீட்டுத்திட்டம் கட்டங்கள் 1,2,3 ஆகியவை உள்ளடங்கலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வீடுகளின் எண்ணிக்கையினையும் நோக்குவதன் மூலம் பாரபட்சத்தினை தெளிவாக விளங்கி கொள்ள முடியும்

பிரதேச செயலக பிரிவினுள் மட்டுமன்றி கிராம அலுவலர் பிரிவினுள் கூட தமிழ் மக்களிற்கு பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது. செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவின் ஆண்டியா புளியங்குளம் கிராம அலுவலர் பிரிவில் ஆண்டியாபுளியங்குளம், வாழவைத்தகுளம், புதுக்குளம் ஆகிய முஸ்லிம் கிராமங்களை உள்ளடக்கி 416 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் அதே கிராம அலுவலர் பிரிவிலுள்ள தமிழ்க் கிராமமான மெனிக்பாம் கிராமத்தில் 300 குடும்பங்களிற்கு வீடுகள் வழங்கப்பட வேண்டியுள்ள போதும் ஒரு வீடு கூட வழங்கப்படவில்லை என்பதை இங்கு குறிப்பிட்டுக் கூற முடியும்.

மேலும், இந்திய வீட்டுத்திட்ட மாவட்ட ஒதுக்கீடானது வரையறுக்கப்பட்டது எனத் தெரிந்தும் முஸ்லிம் கிராமங்களில் இவ்வாறு 350-400 என அதிக எண்ணிக்கையில் வீடுகளை ஒதுக்கீடு செய்து ஏற்கனவே வேறு மாவட்டங்களில், வேறு பிரதேசங்களில் நிரந்தர வீடுகளை கொண்டுள்ளவர்களிற்கும் சுயமாக வீடுகளை கட்டக் கூடிய வசதி படைத்தவர்களிற்கும் கூட வீட்டுத்திட்ட உதவியினை வழங்கும் அதே வேளை அயலில் போரினால் பாதிக்கப்பட்டு ஓலைக் குடிசைகளில் வறுமை நிலையில் வாழும் குடும்பங்களை கூட கவனத்தில் கொள்ளாது தமிழ் கிராமம் என்பதனால் ஒரு வீடு தானும் வழங்கப்படாது பல கிராமங்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளது.

மாவட்டத்தில் இந்திய வீட்டுத் திட்டம் வழங்கப்படுவதில் மட்டுமன்றி காணியற்றோரிற்கு காணி வழங்குதல், வேலைவாய்ப்பு, அபிவிருத்திவிடயங்களிலும் தமிழ் மக்கள் பாரபட்சத்திற்குள்ளாக்கப்பட்டு வருகின்றனர். காணியற்றோரிற்கு காணி வழங்கும் விடயத்தில் மாவட்டத்தில் ஒரு புறம் சிங்கள மக்களிற்கு காணி வழங்கப்பட்டு மீள்குடியேற்றம் செய்யப்படுகையில் மறுபுறத்தில் முஸ்லிம் மக்களிற்கு காணி வழங்கும் செயற்திட்டங்கள் பம்பைமடு, ஆண்டியாபுளியங்குளம், பாவற்குளம்-2 ஆகிய இடங்களில் இடம்பெற்று வருகிறது. போரினால் பாதிக்கப்பட்டு மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் காணியற்று உள்ள போது அம் மக்கள் புறக்கணிக்கப்பட்ட நிலையில் அதிலும் காணியற்ற முஸ்லிம் குடும்பத்திற்கு காணியொன்று என்பதற்கு பதிலாக அக் குடும்பத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து அங்கத்தவர்களிற்கும் காணி வழங்கும் செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றது.

இந்த மாவட்டத்தை சேர்ந்த காணியற்ற முஸ்லிம் குடும்பங்களிற்கு காணி வழங்கப்பட வேண்டும் என்பதில் எவருக்கும் மாறுபாடான கருத்து இருக்க முடியாது. அதே வேளை சொந்தமாக ஒரு துண்டு நிலம்தானும் இன்றி ஒரே வீட்டில் 3 – 4 குடும்பங்கள் நெருக்கடி நிலையில் மற்றும் வாடகையும், குத்தகையும் கொடுத்து ஆண்டுக்கணக்கில் அல்லல்படும் காணியற்ற தமிழ் குடும்பங்களை கவனத்திற் கொள்ளாது பாரபட்சம் காட்டப்படுவதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

வடமாகாணத்தில் அனைத்து அபிவிருத்திச் செயற்பாடுகளிற்கும் அனுமதி வழங்கி அவற்றை செயற்படுத்திவரும் வடக்கின் ஜனாதிபதி துரித செயலணிக்குழுவின் தலைவராகிய தங்களிடம் இந்திய வீட்டுத்திட்டத்தில் பாரபட்சமான தெரிவுகள் இடம் பெற்று கட்டங்கள் 1,2 ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் தெரிவு நிலையிலுள்ள கட்டம் 3 இனை மீள் பரிசீலனை செய்து பாதிப்புற்ற தமிழ் மக்களிற்கு நியாயம் வழங்குமாறும் காணி வழங்குவதிலும் புறக்கணிக்கப்பட்டிருக்கும் காணியற்ற தமிழ் மக்களிற்கு காணி வழங்க ஆவன செய்யுமாறும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் சார்பில் பணிவுடன் வேண்டுகின்றோம் என இக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் இருந்து எமது செய்தியாளர் வாசு-

Tags: ,